இயற்கையிடம் கேட்டேன்

‘இந்தத் தீபாவளிக்கு
ஏதாவது சொல்’
இயற்கையிடம் கேட்டேன்

‘எழுதிக்கொள் உடனே
அடுத்த தீபாவளியில்
நீ அடுத்த உயரம் காண்பாய்’

நான் எழுதிக்கொண்டதை
இதோ மீண்டும் எழுதுகிறேன்

கொத்தும் தேனீ செத்துவிடும்
மன்னிக்கத் தெரிந்த தேனீ
மறு கூடு கட்டும்

கழிவைக் கழித்துத்தான்
ஆவியாகிறது தண்ணீர்

கலங்கங்களை நினைத்து
கலங்குவதில்லை நிலா

குடையற்றவன் தூற்றலை
மன்னிக்கிறது மழை

அழுக்கு நீரைப் பற்றி
அலட்டிக்கொள்ளாது தென்னை

பாகையிடம் பலாவுக்கோ
பலாவிடம் பாகைக்கோ
பொறாமை இல்லை

ஒரு வினாடி மகிழ்ச்சியில்
உயிரை விடுகிறது மத்தாப்பு

ருசிப்பதில் மட்டுமே
தீபாவளியின் இனிப்புக்களிடையே
போட்டி

பள்ளம் நோக்கியே
பாய்கிறது தண்ணீர்

விழுந்தாலும் பெருமை
நீர்வீழ்ச்சிக்கு

துளையை அடைத்தால்
ஓட்டைப்படகும் இலக்கு சேரும்

ஒதுக்கப்படுவதால்
கருவேப்பிலைக்கு கவலையில்லை

சூரியனை நோக்கி நடந்தாலும்
தொடர்கிறது கருப்பு நிழல்

வெள்ளத்தின் பாதையை
வெள்ளம்தான் நிர்ணயிக்கும்

அமீதாம்மாள்

Series Navigationபுளியம்பழம்தொடுவானம் 227. ஹைட்ரோஃபோபியா