இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்

எம்.எம். மங்காசரியான்

மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்

(மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று சில தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிரான கருத்துகளை மொழிபெயர்க்காதது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவித்திருந்தனர். இக்கட்டுரைத் தொகுப்பை மொழிபெயர்த்து முடித்தவுடன் அடுத்தடுத்த வாரங்களில் இக்கட்டுரைக்கு எதிரான வாதங்களையும் மொழிபெயர்ப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேள்விகளை எழுப்பவே விரும்புகிறேன். பதிலளிப்பது அவரவரது தனிப்பட்ட பார்வையையும், நோக்கங்களையும் பொறுத்தது. மதிப்பு மிக்க கருத்துகளைப் பதிந்த நண்பர்களுக்கு நன்றி)

2.கிறிஸ்தவ ஆவணங்கள்

எம்.எம். மங்காசரியான்

மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்

 

    கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஆவணங்கள் வரலாற்று மனிதரைப் பற்றிக் குறிப்பிடும் எந்த ஆவணங்களோடும் பொருந்திப் போகவில்லை. எனவே நாம் நமது ஆய்வில் இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

 

இயேசுவின் வரலாற்றுத்தன்மையை கிறிஸ்தவர்கள் நான்கு சுவிசேஷங்களின் அடிப்படையிலேயே நிரூபிக்க முயல்கிறார்கள். ஆனால் அந்தப் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களின் அசல் பிரதிகள் நம்மிடையே இல்லை. நகல்கள் மட்டுமே உள்ளன. அசல்கள் இருந்ததற்கான ஆதாரங்களும் இல்லை. இந்தக் கூற்றை யாராலும் மறுக்க முடியாது. ஆதி விசுவாசிகள் தங்கள் கவனக்குறைவால் அப்போஸ்தலர்கள் எழுதிய அனைத்து நூற்களையும் இழந்துவிட்டு, அநாமதேயங்களால் எழுதப்பட்ட நகல்களை மட்டும் காவல் காத்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அருட்கிளர்ச்சியால் உந்தப்பட்ட கிறிஸ்தவ அப்போஸ்தலர்களின் நூற்கள் எல்லாம் காணாமற்போனபின் வெறும் எழுத்தர்களால் எழுதப்பட்ட நகல்கள் நிலைத்து நிற்பது ஏன்? மத்தேயுவின் அசல் நூல் காணாமற் போயிருக்கும் நிலையில், வேற்று மொழியில் எழுதப்பட்ட நகல் எப்படி பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது? இயேசு ஒரு வரியாகிலும் எழுதவில்லை. பரவலான நம்பிக்கையின்படி அவர் கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்தும் முக்கியமான பணிக்காக பூமிக்கு வந்தார். ஆனால் அவர் கடவுளின் விருப்பத்தை தமது வாழ்நாளில் எழுத்துகளில் வெளிப்படுத்தவில்லை. ஆனால் உண்மையில் பரலோகத்திலிருந்து யாராவது தேவபோதனையாளராய் வந்திருந்தால் அதைச் செய்திருப்பார்கள். ஆனால், அவர் தமது பணியை தவறுகள் செய்யக் கூடிய அநாமதேய எழுத்தாளருக்கு விட்டுச் செல்கிறார். இந்தக் குழப்பமே கிறிஸ்தவத்தை பல பிரிவுகளாகப் பிரித்தது. தமது சீடர்களுக்குப் பதிலாக இயேசுவே தான் கொடுக்க விரும்பிய செய்தியை தெளிவாகவும், எளிமையாகவும் சொல்லிச் சென்றிருந்தால் எத்தனை தண்டனைகள், எத்தனை யுத்தங்கள், கசப்புகள், வெறுப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்?

 

மேலும், இயேசு தான் எதையும் எழுதி வைக்காததோடு தம் அப்போஸ்தலர்கள் எழுதியதைப் பாதுகாக்கவும் முயற்சி எடுக்கவில்லை. அசல் கையெழுத்துப் பிரதிகள் இருந்ததானால் அவை இது வரையிலும் கண்டறியப்படவில்லை. இது மிக மோசமான விஷயம். நாம் அப்பிரதிகளின் நகலை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறோம். யார் அவற்றைப் படியெடுத்தார்கள்? எப்பொழுது அவை நகலெடுக்கப்பட்டன? நாம் எந்த அளவுக்கு இந்த பிரதிகளை நம்ப முடியும்? ஏன் இப்படி பல்லாயிரம் விதமான நகல்கள் இருக்கின்றன? எதன் அடிப்படையில் நாம் ஒரு பிரதியை ஏற்க முடியும்? இயேசுவின் வருகையால் விளைந்தவை அநாமதேய, காலமறியாத நகல் பிரதிகள் தானா? கடவுள் தனது குமாரனை பூவுலகிற்கு அனுப்பி வைத்தது ஏன்? நாம் இப்படி பல நகல்களை ஆராய்ந்து ஏன் கடவுள் தன் குமாரனை பூமிக்கு அனுப்பினார் என்றும், அவரது குமாரன் என்ன போதித்தார் என்றும் கண்டுபிடிப்பதற்கா?

கிறிஸ்தவ திருச்சபை அசல் கையெழுத்துப் பிரதிகள் அழிந்து போனதற்கு ஒரே ஒரு காரணத்தைத் தான் கூற முடியும். அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இறைவனின் எண்ணத்தைக் கொண்டு புனித ஆவியின் அருட்கிளர்வால் எழுதப்பட்ட ஒரு மதிப்புமிக்க ஆவணம் திடீரென்று காணாமற் போனால் அதை எழுதிய தெய்வீகத் தன்மை உடையவர் அதைச் சுற்றிலிருந்து நிறுத்திவிட்டார் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் கூற முடியும்? கடவுள் புதிரான, நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் செயல்படுகிறார், என்பதே ஒரு விசுவாசியின் இறுதி வாதமாகும். ஆனால் இந்த வாதத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் வானத்தின் கீழ் எழுந்த எல்லா மதங்களையும், எல்லா இசங்களையும் உண்மை என்று நினைக்க வேண்டியிருக்கும். இஸ்லாமியர்களும், பிற மதத்தவர்களும் விசுவாசத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். விசுவாசத்தால் மறைக்க முடியாத அறிவின் ஒளி எதுவும் இல்லை. ஆனால் ஆதாரங்கள் இல்லாத விசுவாசம் மூடநம்பிக்கை இல்லையென்றால் மூடநம்பிக்கை என்றால் என்ன? கத்தோலிக்க திருச்சபை புனித சிலுவை, எருசலேமில் உள்ள புனித ஆலயம், இயேசுவின் அங்கி என இன்னும் பலவற்றை கடவுள் பாதுகாத்துள்ளதாக நம்புவது போல் நடிக்கிறது. அந்த நம்பிக்கையினால் சம்பாதிக்கவும் செய்கிறது. ஆனால் கடவுள் அசல் கையெழுத்துப் பிரதிகளை ஏன் பாதுகாக்கவில்லை என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை. அசல் கையெழுத்துப் பிரதிகள் இருந்ததேயில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். நான் இதைப் பற்றி உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் நகங்களும், எலும்புகளும் கடவுளால் பாதுகாக்கப்பட்டுள்ள போது ஏன் அசல் கையெழுத்துப் பிரதிகள் காணாமற்போயின? அருட்கிளர்வால் எழுதப்பட்ட நூற்கள் காணாமற்போக அல்லது பூச்சிகளால் அரிக்கப்பட்டுப் போக கடவுள் அனுமதிப்பாரா?

 

கிடைத்துள்ள ஆவணங்களையும் நாம் கவனமாக ஆராய்ந்தால் அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் காணலாம். மத்தேயு கொடுத்துள்ள இயேசுவின் வம்சவரலாறு லூக்கா கொடுத்துள்ள வம்ச வரலாற்றிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் அந்த வம்ச வரலாற்றை நாளாகமங்களில் இருந்தே எடுத்துள்ளார்கள் என்பது தெளிவு. ஒரு சுவிசேஷகர் இயேசு சாலமோனின் பரம்பரையில் வந்தவர் என்கிறார். அதாவது இயேசு கள்ளக் காதலின் மூலம் உருவான வம்சத்தில் வந்தவர் என்கிறார். இன்னொருவர் இயேசு நாத்தானின் பரம்பரையில் வந்தவர் என்கிறார்.

 

லூக்கா யோசேப்பின் தந்தையின் பெயர் ஏலி என்கிறார். மத்தேயு யோசேப்பின் தந்தையின் பெயர் யாக்கோபு என்கிறார். சுவிசேஷகர்கள் யோசேப்பின் சமகாலத்தவர்களாய் இருந்தால் அவர்களால் யாக்கோபின் தந்தையின் பெயரைத் தெளிவாகக கூறியிருக்க முடியும்.

 

    யோசேப்பு இயேசுவின் தந்தையில்லையென்றால் ஏன் இந்த சுவிசேஷகர்கள் யோசேப்பின் வம்ச வரலாற்றைக் கூறுகின்றனர்? மரியாள் தாவீதின் வம்சத்தவள் என்று அவர்கள் வம்ச வரலாற்றின் மூலம் நிரூபித்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட தகவல்கள் சுவிசேஷங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்குகின்றன. இயேசு உண்மையில் வாழ்ந்த மனிதராகவும், சுவிசேஷங்களை எழுதியவர்கள் இயேசுவின் சமகாலத் தோழர்களாகவும், அருட்கிளர்வு பெற்றவர்களாகவும் இருந்தால் ஏன் வம்ச வரலாற்றில் முரண்பாடுகளும், தவறுகளும் காணப்படுகின்றன?

 

இயேசு ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதை ஒரு நிகழ்வின் மூலமாக எடுத்துக் காட்டலாம். ஞானஸ்நானங்கொடுக்கும் யோவான் பகிரங்கமாக இயேசுவே கிறிஸ்து என்றும், தான் அவர் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதியுடைவன் அல்ல என்றும் கூறுகிறார். சுவிசேஷங்களின் கூற்றுப்படி புனித ஆவி ஒரு புறாவைப் போல் இயேசுவின் மீது வந்திறங்கி, வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் நான் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தம் புறப்பட்ட போது யோவானும் உடனிருந்தார்.

 

    சில அத்தியாயங்கள் கழித்து யோவான் தான் கூறியதை அப்படியே மறந்து விட்டு தனது இரண்டு சீடர்களை இயேசுவிடம் அனுப்பி அவர் யாரென்று விசாரித்து வரச் சொல்கிறார். இது நிகழக்கூடிய ஒன்றா? இதன்மூலம் நமக்குக் கிடைக்கும் முடிவு என்னவென்றால் எழுத்தாளர் தன்னிடமிருந்த இரண்டுவித கற்பனைக் கதைகளையும் ஒன்றாகக் கலந்துவிட்டார் என்பதாகும்.

 

சுவிசேஷ ஆசிரியர்களின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கு இன்னொரு உதாரணம் நான்காம் சுவிசேஷத்தின் முடிவாகும். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். இது ஒரு புராணக் கதையாசிரியரின் கூற்றாக இருக்கலாமேயொழிய சரித்திராசிரியனின் கூற்றாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றைத் தரும் ஒருவரின் மீது நாம் எந்த அளவு நம்பிக்கை வைக்க முடியும்? ஒரு மத ஸ்தாபகரின் பொதுவாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு வருடமே இருந்தது. அவரைப் பற்றி சொல்லப்படாதவை  உலகங்கொள்ளாதவையாம். சொல்லப்பட்டவை சில பக்கங்களாம். இதுவே சுவிசேஷகர்களது கூற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

 

நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இயேசுவின் வாழ்க்கை வரலாறு என்று வந்த நூற்கள் இயேசுவும் அவரது சீடர்களும் பேசியதாகக் கூறப்படும் மொழியில் எழுதப்படவில்லை. அவைகளில் எழுதப்பட்ட காலமும் இல்லை. எழுதியவரின் கையெழுத்தும் இல்லை. இயேசுவும் அவரது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் யூதர்கள். ஆனால் சுவிசேஷங்கள் ஏன் கிரேக்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன? அவை எபிரேய மூலங்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாயிருப்பின், நாம் மூலங்களை ஒப்பிட்டுப்பார்க்காமல் மொழிபெயர்ப்பு சரியானது என்று எப்படிக் கூற முடியும்? ஏன் சுவிசேஷங்கள் அநாமதேயமாகக் காட்சியளிக்கின்றன? ஏன் அவற்றில் காலம் குறிப்பிடப்படவில்லை? ஆனாலும் நாம் நமக்குக் கிடைத்துள்ள மூலங்களாகக் (சிறு துண்டுகள்) கூறப்படுபவற்றுள் நம் ஆய்வை அடக்கிக் கொள்வோம். பண்டிதர்கள் இத்தகைய பழங்கால சொற்களை வாசிப்பதும், தெளிவில்லாததைப் புரிந்து, முரண்களைக் களைந்து மொழிபெயர்ப்பதுங் கடினம் என்கிறார்கள். இது எதைக் காட்டுகிறதென்றால் இறைவனின் வார்த்தைகள் என்று திருச்சபை அழைப்பவை மனிதனின் வார்த்தைகள் என்பது மட்டுமல்ல, தெளிவில்லாத தன்மையுடையதும் ஆகும்.

 

இவ்வாறு, இயேசுவின் மீதான நம்பிக்கை திருத்தப்பட்டதும், மாற்றப்பட்டதுமான இரண்டாம் நிலை ஆவணங்களிலும், காணாமற் போன மூலப்பிரதிகளிலும், சம்பவங்கள் நிகழ்ந்து சில காலங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட கைப்பிரதிகளிலும் என ஒன்றுக்கொன்று முரண்படும் ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும். இதுவே சரித்திரப்பூர்வமான இயேசுவின் அடிப்படை. இப்படிப்பட்ட போதாமையே கிறிஸ்தவப் போதகர்களை பொய்யான கற்பனைகளின் அடிப்படையில் இயங்க வைத்தது.

 

    இயேசுவைப் பற்றிய போதுமான ஆதாரங்கள் இருந்தால் ஏன் கிறிஸ்தவப் போதகர்கள் பொய்க் கற்பனைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும்? ஆதாரங்களைக் கேட்டவர்களுக்கு பதிலளிக்க முடியாத போதகர்களின் நிலையைப் பற்றியும், அவர்கள் பொயக் கற்பனைகளின் அடிப்படையில் இயங்கியதைப் பற்றியும் கிறிஸ்தவ எழுத்தாளர்களே கூறுகிறார்கள். சபையின் சரித்திர ஆசிரியரான மோஷீம் கூறுகிறார், திருச்சபைப் பிதாக்கள் ஏமாற்றுவதையும், பொய்க்கற்பனைகளையும் புனிதமான செயலாகக் கருதினார்கள்.”

 

    மேலும் அவர் கூறுகிறார், மிகப் பெரியவர்களாகவும், புனிதமானவர்களாகவும் கருதப்பட்ட திருச்சபைப் பிதாக்கள் கூட இந்த நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். இயேசு சரித்திரப்பூர்வமான மனிதராயிருந்தால் அவரது இருப்பை நிரூபிக்க ஏன் இப்படிப்பட்ட ஏமாற்று வித்தைகள் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி ஒரு விசுவாசி நம்மிடம் கூறமாட்டாரா? இன்னொரு சரித்திராசிரியரான மில்மன் எழுதுகிறார், கிறிஸ்தவத்தின் ஆதிப் போதகர்களால் புனிதமான மோசடிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிஷப் எல்லிகாட், அது இலக்கிய மோசடிகளின் காலம் என்று இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் காலத்தைப் பற்றிக் கூறுகிறார். அதிக அளவிலான புத்தகங்கள் மோசடி வேலைக்காகவே எழுதப்பட்டன” என்று முனைவர் கைல்ஸ் கூறுகிறார். சில பிரிவினர்களின் கோணங்களிலிருந்து ஏகப்பட்ட போலியான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன என்று முனைவர் ராபர்ட்சன் ஸ்மித் கூறுகிறார். இப்பொழுது கிறிஸ்தவ திருச்சபையால் தடைசெய்யபட்ட நூற்கள் ஒரு காலத்தில் அருள்வெளிப்பாடுகளாகக் கருதப்பட்டன. இப்பொழுது நம்பப்படும் நூற்கள் ஒரு காலத்தில் அதிகாரமற்றவையாகக் கருதப்பட்டன. இயேசு சரித்திரப்பூர்வமான நபராயிருந்தால் அவரைச்சுற்றி ஏன் இத்தனை மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இயேசு கற்பனைக் கதாபாத்திரமாக இருந்தால் இத்தகைய செப்பிடுவித்தைகள் இயல்பானவையே என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

    இயேசுவின் ஆதிவிசுவாசிகள் இத்தகைய மறுப்பின் தாக்குதலைத் தாங்காமல் மோசடிவித்தைகளில் இறங்கினார்கள் என்பது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே.

 

    கிறிஸ்தவத்தின் துவக்க கால எதிரிகளில் ஒருவர் போர்பிரிரி என்ற சிலை வணக்கக் காரர் ஆவார். ஆனால் ஆதித் திருச்சபைப் பிதாக்கள் அவரது எழுத்துகளிலும் தங்கள் செப்பிடுவித்தையைக் காட்டாமல் விட்டுவைக்கவில்லை. முதலில் இவரது நூற்கள் அனைத்தையும் அழித்து விட்டார்கள். இறைவாக்கின் தத்துவம், என்று ஒரு கிறிஸ்தவ நூலை எழுதப்பட்டது. அதற்கு எழுத்தாளர் என்று இதே போர்பிரிரியை அறிவித்தார்கள். பரி.அகஸ்டின் இதை போலி என்று சொல்லி மறுதலித்தார். இப்படிப்பட்ட மோசடிவித்தைகளில் இருந்து இயேசுவின் இருப்பை நிரூபிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைகளும், தடுக்கப்பட்ட நூற்களும், போலியான ஆவணங்களும் இயேசுவின் இருப்பை நிரூபிப்பதற்கு உதவுகின்றனவா? இப்படிப்பட்ட சந்தேகோபஸ்தமான ஆவணங்களின் மொத்த உற்பத்தியும், பிற மதத்தவரின் இலக்கியங்களை வெறியோடு அழித்ததும் இயேசு கற்பனையல்ல என்று நிரூபிக்க முயற்சித்தவர்களின் செயல்களே. இப்படிப்பட்ட அனைத்தும் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உண்மை என்று நிரூபிக்க முயற்சி எடுப்பது எவ்வளவு கடினமானது என்பதைத் தெளிவாக்குகிறது.

3.கன்னியரின் குழந்தைகள்

    கன்னிக்குப் பிறந்த கடவுள்களின் கதைகள் எல்லா நாடுகளிலும், எல்லா காலங்களிலும் காணப்படுகின்றன. எத்தனையோ கன்னித் தாய்மார்கள் புராணங்களில் காணப்படுகிறார்கள். கன்னி மரியாள் தன் குழந்தையுடன் காட்சியளிப்பது ஒரு பழைய புராணத்தின் மொழிபெயர்ப்பு. சீனம், இந்தியா, கிரீஸ், பாபிலோன், எகிப்து, ரோம் முதலிய பிரதேசங்களிலும் கடவுள்கள் தாங்கள் பூமிக்குள் வர ஒரு நல்ல குடும்பப் பெண்ணை தேர்ந்தெடுத்ததாகப் பல கதைகள் உலாவுகின்றன. அவர்கள் தங்கள் மனித அவதாரத்திலும் தங்கள் தெய்வீகத் தன்மையைக் காப்பதற்காக ஒரு தெய்வீகத் தந்தையின் மூலமாக பிறக்கின்றனர். ஜுப்பிட்டர் ஒரு அன்னத்தின் வடிவத்தில் லெடாவை அணுகினார். யெகோவா புறாவின் வடிவில் மரியாளின் மேல் நிழலிட்டார்.

 

    ஒரு நதியில் குளித்துக் கொண்டிருந்த வனதேவதை ஒரு தாமரைச் செடியினால் தொடப்பட்டு தெய்வக் குழந்தையான ஃபோகிக்கு பிறப்பளித்தாள்.

 

    சியாமில் சூரியக்கிரணம் பதிவயதில் இருக்கும் ஒரு பெண்ணை அணைக்கிறது. கோதோம் என்னும் மகான் பிறக்கிறார். புத்தரின் கதையில் புத்தர் தெய்வீகத்தன்மை பொருந்திய ராணியாகிய மாயாதேவியின் கருப்பைக்குள் நுழைந்து உலகினைக் காக்க அவளது வலப்பக்கமாகப் பிறந்தார் என்று கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டில் அப்பொல்லோ ஏதென்சில் உள்ள ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறார். பிளேட்டோ பிறக்கிறார்.

 

    பழங்கால மெக்ஸிகோவிலும், பாபிலோனிலும், இக்கால கொரியாவிலும், பாலஸ்தீனத்திலும் கன்னிகள் குழந்தை பெறும் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

 

    இத்தகைய கதைகளுக்கு அடிப்படை எகிப்து நாட்டில் உள்ளது. இயேசு பிறப்பதற்கு 1800 வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டில் லக்ஸரில் உள்ள பெரிய ஆலயம் ஒன்றில் சுவரில் செதுக்கப்பட்ட காட்சிகளில் இதைப் பார்க்கிறோம். அங்கே மூன்றாம் அமென்ஹோதப்  அரசரின் அவதாரத்துக்கான அறிவிப்பும், கருத்தரித்தலும், பிறப்பும் செதுக்கப்பட்டுள்ளன. அவை இயேசுவின் வாழ்க்கைச் சித்திரத்தையே பிரதிபலிக்கின்றன. எகிப்தியர்கள் கத்தோலிக்கரிடம் இருந்து இந்தச் சித்திரக் கதையை கடன் வாங்கினார்கள் என்று நமது கிறிஸ்தவ பாதிரியார்கள் வாதிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்! மால்வெர்ட் கூறுகிறார், லூக்காவின் சுவிசேஷத்தின் ஒன்றாம், இரண்டாம் அத்தியாயங்கள் அமென்ஹோதப்பின் பிறப்புக் கதையிலிருந்தே களவாடப்பட்டன.

 

    எகிப்திய புராணக்கதைகளைப் பற்றி கூர்மையான அறிவுடைய ஜி.டபிள்யூ.பூட் தனது  வேதாகமக் காதல் கதைகள் என்றும் நூலில் லக்ஸர் சித்திரங்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார், இடப்பக்கத்திலிருந்து முதல் காட்சியில் தாஹ்த என்றும், லோகோஸ் (தெய்வீக வார்த்தை) என்றும் அறியப்படும் எகிப்தியக்கடவுள் கன்னியான அரசி ஒரு குழந்தைக்கு பிறப்பளிக்கப் போவதைப் பற்றி அவளுக்கு அறிவிக்கிறது. இரண்டாவது காட்சியில் க்னேப் கடவுள் (ஹாத்தோர் கடவுளுடன்) அவளுக்குள் ஒரு உயிரைச் செலுத்துகிறது. இதுவே புனித ஆவி அல்லது கருவை உண்டாக்கிய ஆவி எனலாம். அடுத்ததாக இருக்கும் காட்சியில் தாயார் குழந்தை பெற்றுவிட்டாள். ஒரு தாதி குழந்தையை கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாள். நான்காவது காட்சியில் அந்தக் குழந்தை அரியணையில் அமர்ந்திருக்கிறது. கடவுளரிடமிருந்தும், மனிதரிடமிருந்தும் பரிசுகளையும், பணிவையும் ஏற்றுக் கொள்கிறது. லக்ஸர் கோயிலில் இருக்கும் இச்சித்திரத்தை பெயரற்ற சுவிசேஷ எழுத்தாளர் தனது சுவிசேஷத்தின் மூலமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அவர்கள் எதனிடமிருந்து இக்கதையைக் கடன் பெற்றார்களோ அதை மறைத்து விட்டார்கள்.

 

    கன்னித்தாயின் கதை மட்டுமல்ல. அதிசயங்கள், மாட்டுக் கொட்டிலில் தொட்டில், வழிகாட்டி நட்சத்திரம், குழந்தைகளின் படுகொலை, எகிப்துக்கு ஓடுதல், உயிர்த்தெழுதல், உயிரோடு வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் போன்ற சம்பவங்களும் கடன் வாங்கப்பட்டவையே.

    ஆக ஆதிக்கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் கதையையும், தங்களின் பிற நம்பிக்கைகளையும் புற மதத்தவரின் நூற்களில் இருந்து கடன் வாங்கினர் என்று தெளிவாகிறது. எகிப்தியர்களைப் பற்றிய தனது நூலில் ஜெரால்டு மாஸே என்பவர் இயேசுவின் தாயாகிய மரியாளின் கதை ஹோரசின் தாயாகிய ஐசிசின் கதையோடு பொருந்துகிறது என்கிறார். மிகப்பழமையான, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட, புகை படிந்த  கன்னியையும், குழந்தையையும் கொண்ட பைஜாண்டிய ஓவியங்கள் நாசரேத்தில் உள்ள ஒரு மனிதத் தாயைக் காட்டவில்லை. ஐசிசையே காட்டுகின்றன. அறிவியலும், ஆய்வும் இதை உண்மை என்று நிரூபித்து விட்டன. ஒரு பக்கம் அறியாமையும், இன்னொரு பக்கம் ஆர்வமும் மட்டுமே அந்த அநாமதேய, தேதியிடப்படாத ஆவணங்களை அருள் வெளிப்பாடுகள் என்று சொல்ல வைக்கிள்றன. இயேசு செய்ததாக சொல்லி களவாடப்பட்ட அற்;புதங்களையும், கட்டுக்கதைகளையும், அவர் பிற மதங்களின் சாரத்திலிருந்து எடுத்து  உபதேசித்ததாகக் கூறப்பட்டவற்றையும் நீக்கி விட்டால் அவரிடம் என்ன மிச்சமிருக்கும்? அவரது உபதேசங்கள் என்பவை பிற மதங்களிலிருந்து எடுக்கப்பட்டு அவர் கூறியதாக அவர் வாயில் திணிக்கப்பட்டன என்றும், அவரைப் பற்றிய கதைகள் பிற மதங்களின் புராணங்களிலிருந்து தொகுக்கப்பட்டன என்ற அறிவும் மட்டுமே மிச்சமிருக்கும்.

 

    கிறிஸ்தவ மதத்தின் எல்லாக் கொள்கைகளும், விழாக்களும் பழைய மதங்களில் இருந்தே களவாடப்பட்டன. உயிர்த்தெழுதல், வானில் ஏறுதல், திருவிருந்து, திருமுழுக்கு, முழங்காற்படியிட்டு வழிபடுதல், மார்பில் கைகட்டிக் கொள்ளுதல், மணியடித்தல், தூபங்காட்டுதல், ஆலயங்களில் உபயோகிக்கப்படும் அங்கிகள், பாத்திரங்கள், மெழுகுவர்த்தி, புனித நீர் இவையனைத்துமே பழங்கால மதங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்தால் களவாடப்பட்ட சடங்குகள். திரியேக தத்துவம் கிறிஸ்தவ மதத்தைப் போல வேறு மதங்களிலும் உள்ளது. கடவுளின் மகன் என்னும் கோட்பாடு மிக மிகப் பழமையானது. எல்லா புராணக்கதைகளிலும் கதிரவனே வானத்தின் மகனாகக் காணப்படுகிறான். கதிரவன் உண்மை அல்லது கடவுளின் மகனாகவும், ஆகாயம் கடவுளாகவும் கூறப்படுகிறது. இயேசுவின் தலையைச் சுற்றியுள்ள ஒளிவட்டமும், பிறமதத்தவரின் கடவுளரின் கொம்புகளும், இந்து மதத்தவர் மற்றும் பிறமதத்தவரின் கடவுளரின் தலையிலிருந்து புறப்படும் ஒளிக்கிரணங்களும் கிறிஸ்தவ மதத்தவரின் நம்பிக்கைகள் புதுமையானதல்ல என்று நிரூபிக்கின்றன.

————————————————————-

Series Navigationமனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்