இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி


இந்த பிரபஞ்சத்தில் கண்விழித்துப் பார்க்க
மிக ஆவலோடு கருவறையில் காத்திருந்த
அந்த குழந்தையின் புன்னகையைக் கூட வெட்டிவீசினாய்
தொட்டில் சீலையான உம்மாவின் கவுணியில் தெறித்த
ரத்தவாடையின் உறைதலில் நகர்கிறது நடுச் சாமம்.
சாம்பல் மிஞ்சிய இருப்பிடமெங்கும் தொடரும்
கருகிய வேதனையின் வரைபடம்
சூலாயுதங்களின் கூர்முனைகளில்
பிறையும் பொழுதும் அறுபட்டுத் தொங்குகிறது.
மேசைமீது கிடந்த நினைவுக் குறிப்புகளிலிருந்து
வெள்ளைக் கொடி வீசி மெல்ல எழும்பிவந்த
கருணை சொரியும் அந்த கண்கள்
தீரா கோபத்தின் தாண்டவ உடல் மறுபடியும்
சீறிப் பாய்ந்த குண்டுகளில் சல்லடையானது
வெட்டுப்பட்ட கைகளும் தலைகளும்
அபயம் தேடிப் பாய்ந்தலையும்
திக்கற்று திசையற்று கதறிய ஓலங்கள்
எதற்கென்று தெரியாமல் ஒவ்வொருநாளும்
அடிவானத்து சூரியன் பீதியோடு மடிகிறது.
அறுபட்ட நாக்குகளைக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியவில்லை
பிணங்களின் குவியல்களில்
அல்லாஹ்வின் நாமஒலி படர்ந்திருந்தது.
ஜனாஸா தொழுகைக்கும் அபூபக்கர்கள் இல்லை
இரவின் அமைதியை அறுத்துப் பிளந்து பலிகேட்ட
ஆண்குறிகளின் பயங்கரவாதத்திற்கு
என் சகோதரிகளின் கிழிபட்டயோனிகள் கூட
சாட்சி சொல்கிறது.
ஹெச்.ஜி.ரசூல்
Series Navigationவிட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனைஏமாற்றம்