இராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி

நம் பாரதத்தின் வரலாறு நீண்ட தொன்மை மட்டும் கொண்டதல்ல,எப்போது நினைத்தாலும் விழியோரம் ஈரப் பூக்களை உதிர்க்கும் அதிர்வுகளும் நிறைந்தது. இவற்றில் இரண்டினைப் பற்றிய சிந்தனைதான் இக்கட்டுரை. ஒன்று இராணி பத்மினியைப் பற்றியது,இன்னொன்று ஜாலியன் வாலாபாக் பற்றியது.இரண்டு நிகழ்வுகளின் காலத்தையும் நோக்க முதல் நிகழ்வே முதலில் பார்க்க வேண்டியது.

இராஜபுதனம்;
இன்று இராஜஸ்தான் என வழங்கப் படுவதே இராஜபுதனம் ஆகும்.இராஜபுத்திரர்கள் வீரம் செறிந்தவர்கள். நில அமைப்பு இயற்கையாகவே மலைகளும் காடுகளும் நிறைந்ததாகும்.நம் தென்னகம் எப்படி மூவேந்தர்களாலும் குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டதோ அப்படியே இந்நிலமும் பல அரசுகளாய்ப் பிரிக்கப் பட்டிருந்தது..

எட்டாம் நூற்றாண்டில் சிசோடியா வம்சத்தின் ஆட்சியைத் தோற்றுவித்தார் பாபா ராவல்.அவருக்கு சோலங்கி வம்சத்து இளவரசியோடு வரதட்சணையாகக் கிடைத்தது சித்தூர்.ஆரவல்லி மலைத்தொடர் வியாபித்துள்ள மலைப்பாங்கான இடம் இது, காம்பிரி நதிக்கரையில் அமைந்துள்ளது (ஏழு மைல் நீளக்குன்றில்) சுமார் 7000 ஏக்கர் பரப்பளவில் ,180 மீட்டர் உயரத்தில் சித்தூர்க் .கோட்டை அமைந்துள்ளது.குன்றின் அடிவாரத்தில் பெரோச் ஆறு பாய்கிறது. இக்கோட்டையினுள் கலைநயமிக்க அரண்மனைகள்,கோபுரங்கள்,கோவில்கள்,வாயில்கள், மாளிகைகள் அமைந்துள்ளன. வரலாற்றின் ஏடுகளில் மூன்று முறை இது சந்தித்த பயங்கரமான போர்கள் குறிப்பிடப் பெறுகின்றன.
இது இரண்டாம் முறை சந்தித்த போர் 1535ல் குஜராத் சுல்தான் பகதூர்ஷா சித்தூரின் மீது தாக்கியது.(1527ல் ராணா சங்கா பாபருடன் நடத்திய போரில் தோற்று 1528ல் போர்க் காயங்களால் நலிவுற்று மரணமடைகிறார்.இராணி கர்ணாவதி ஆட்சி புரிகிறார்.)

.1567ல் மகாராணா இரண்டாம் உதய்சிங் அக்பரை எதிர்த்துப் போரிட்டது மூன்றாவது போராகும்.

முதல் போரே நாம் இங்கு காணப்போகும் நிகழ்வின் காரணியாகும்.1303ல் ராவல் ரத்தன்சிங் மேவாரின் அரசராகப் பொறுப்பேற்று ஆட்சிக்கு வருகிறார்.அவருக்கு இராஜா கந்தர்வ சேனனின் நிகறற்ற அழகு மகளை மணம் செய்து வைக்கிறார் அவரது அன்னையார். ஆட்சித் திறனும் வீரமும் நிறைந்தவர்.நல்லாட்சி புரிந்து வருகிறார்.
அவருடைய மனைவி இராணி பத்மினி நல்லழகும் அறிவும் நிறைந்தவள்.இவளுடையப் பேரழகைக் கேள்வியுற்ற டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி சித்தூரின் மீது போர் தொடுக்கிறான்.(இராவல் ரத்தன் சிங்கால் நாடு கடத்தப் -பட்ட சேட்டன் என்பவன் செய்த வஞ்சனை`என்றும், ரத்தன்சிங்கின் தம்பியரின் வஞ்சனையெனவும் சொல்லப்படுகிறது.எது உண்மையெனத் தெரியவில்லை)

அலாவுதீன் கில்ஜியும் ரத்தன் சிங்கும்;
சித்தூரை முற்றுகையிட்ட அலாவுதீன் இராவல் ரத்தன்சிங்கிடம் இராணி பத்மினியைத் தனது சகோதரியாக நினைப்பதாகவும் அவளை ஒருமுறை பார்க்க அனுமதித்தால் போதும் முற்றுகையைக் கைவிட்டு நட்புடன் திரும்ப விரும்புவதாகவும் செய்தி அனுப்புகிறான்.
அரசனும் போரைத் தவிர்ப்பது நல்லதுதான் என நினைத்து `கில்ஜியோடு ஓரு சில அதிகாரிகளே வரவேண்டும், அவர்களும் கோட்டை வாயிலில்தான் காத்திருக்க வேண்டும். அலாவுதீன் மட்டும் உள்ளே அழைத்துச் செல்லப்படுவார், கண்ணாடியில் பத்மினியின் பிம்பம் ஒரு முறை பார்க்க அனுமதிக்கப்படும் திரும்பி மறுபடியும் பார்க்க நினைத்தால் தலை துண்டிக்கப்படும்` என்று பதில் அனுப்புகிறார். அலாவுதீனும் இதனையேற்றுச் செல்கிறான், ஓரு தாமரைத் தடாகத்தின் அருகில் நின்ற பத்மினியின் பிம்பத்தைக்கண்ணாடியில் கண்ட அலாவுதீன் சொக்கிப் போகிறான். அவன் வாயிலுக்கு வந்ததும் ஏற்கெனவே திட்டமிட்டபடி அவனது ஆட்கள் அரசனைச் சிறை பிடிக்கின்றனர். அலாவுதீனின் பாசறையில் ரத்தன்சிங் காவலில் வைக்கப்படுகிறார். இராணி பத்மினிக்கு ,`அவளது கணவன் விடுவிக்கப்பட வேண்டுமெனில் அவள் அலாவுதீன் விருப்பத்தினை ஏற்று அலாவுதீனிடம் வரவேண்டும்.`என்று செய்தி அனுப்பப்படுகிறது.

இராணி பத்மினியின் சாதுரியம்;

அலாவுதீனின் கொடூர எண்ணம் அறிந்த பத்மினி அமைச்ச சுற்றத்தினரோடு ஆலோசித்து முடிவு செய்து அப்படியே வருவதாக அவனுக்குச் செய்தி அனுப்புகிறாள்.மறுநாள் காலையில் நூற்று ஐம்பது பல்லக்குகள் அலாவுதீன் முகாமிட்டிருந்த பாசறைக்குப் புறப்பட்டன. சித்தூர்க் கோட்டையிலிருந்து வெளிவந்த பல்லக்குகளைக் கண்ட அலாவுதீன் தன் எண்ணம் ஈடேறியது என மகிழ்கிறான்.அவை பாசறையை அடைந்ததும் அலாவுதீனின் அதிகாரிகள் வழிவிட்டு அழைத்துச் செல்ல அவை ரத்தன்சிங் காவல் வைக்கப்பட்டிருந்த கூடாரத்தின்
முன் நிற்கின்றன.பத்மினியும் அவளது பணிப்பெண்களும் இறங்குவார்கள் என நினைத்த வேளையில் ஆயுதமேந்திய வீர இரஜபுத்திரர்கள் வெளிப்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்தன்சிங்கை விடுவித்து எதிர்ப்பட்டவர்களை வெட்டிச்சாய்த்து சித்தூருக்கு மீண்டனர்.எதிர்பாராத தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனது அலாவுதீன் வீரர்களால்.

அலாவுதீனின் ஆவேசம்;

அவமானத்தால் சீறியெழுந்த கில்ஜி தனது பெரும் படையோடு தாக்க எழுகிறான்.ஏறத்தாழ எட்டு மாதங்கள் முற்றுகை நீடிக்கிறது.இனியும் காலந்தாழ்த்தக் கூடாதென ரத்தன்சிங் வெற்றி அல்லது வீரமரணம் என முழக்கமிட்டு கோட்டைக் கதவுகளைத் திறக்க ஆணையிடுகிறான். நாடும் மானமும் காக்க வீறு கொண்டு எழுந்த வீரர்கள் தகாத ஆசைக்குத் தக்க பதிலடி கொடுக்க மனிதாபிமானம் என்னவெனத் தெரியாத கில்ஜியின் கடல் போன்ற படைகளோடு மோதுகிறார்கள்.விதியின் விளையாட்டு வேறாக இருந்தது. இரஜபுதனப் படை வீரர்களோடு இராஜா ரத்தன்சிங்கும் வீரமரணம் அடைகிறார்.போர்க்கள நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொண்டிருந்த இராணி பத்மினி கலங்கவில்லை.உடனே முடிவெடுக்கிறாள்.அரண்மனையின் நடுவில் யாகம் வளர்ப்பது போல் பெருந்தீ வளர்க்கப்பட்டது. ஏற்கெனவே போர் மூண்டதும் குழந்தைகளும் வயதானவர்களும் சித்தூரிலிருந்து இராணி பத்மினியின் ஆலோசனைப்படி நம்பிக்கையானவர்களின் துணையோடு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
இரஜபுதனப் பெண்கள் மணப்பெண்களைப் போல் அலங்கரித்துக் கொண்டனர். இராணி பத்மினியும் மணக்கோலத்தில் முன் நடக்க ஆனந்தமாகப் பாடிக் கொண்டு தீயை வலம் வந்தனர்.வெற்றிக் களிப்பில் கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த அலாவுதீன்
புகை மண்டியதைக் கண்டு விரைந்து கோட்டை வாயிலை அடைகிறான்.எதிரில் கண்ட காட்சியால் திகைத்து தடுக்க குரல் கொடுக்கிறான்.அவனைக் கண்ட இராணி பத்மினி இதுதான்,’ இரஜபுதனப்பெண் உனக்குத் தரும் வரவேற்பு’ என்று சொல்லி தீயில் பாய்கிறாள்.அத்தனைப் பெண்களுக்கும் அக்கினித்தேவன் புகலிடமானான்.மிரண்டு போன அலாவுதீன் கோட்டையிலிருந்து வெளியில் ஓடினான். கோட்டையில் எஞ்சியிருந்த பணியாளர்களும் இந்தச் சாம்பலை நெற்றியில் பூசி வீரமுழக்கமிட்டு எதிர்த்து மடிந்தனர்.சித்தூர் வெறும் மயானமாகக் காட்சியளித்தது. இது
நடந்தது கி.பி.1303 ஆகஸ்ட் 26ம் நாள் என்கின்றனர்
வரலாற்றறிஞர் சிலர்.

அன்று மொத்தம் 74500 பெண்கள் தீக்குளித்தனர். சுவாமி விவேகானந்தரும் இதனை அமெரிக்காவில்,’ இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். அதோடு இவர் ,`ஒருவருக்கு எழுதும் கடிதத்தின் உரையில் 74.1/2 என்றெழுதி முத்திரை இடுவது ஏன் தெரியுமா? அனுமதியின்றி ஒருவர் அதனைப் படித்தால் 74500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவர். என்பதனால்` என்று குறிப்பிடுகிறார்.(இந்தியப் பெண்கள்-சுவாமி விவேகானந்தர் ) விவேகானந்தரின் காலத்தில் இந்த வழக்கம் இப்பெண்மணிகட்கு அளிக்கும் மதிப்பாகச் சமுதாயத்தில் இருந்தது.

இராணி பத்மினியின் இச்செயல்,`ஜௌஹர்`அதாவது `கூட்டுத் தீக்குளிப்பு`எனப்படுகிறது.(ஜௌ-உயிர் அல்லது வாழ்க்கை,ஹர்-துறப்பது,தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது.-சமஸ்கிருதம்) பின்னாளில் முகமதியர்களின் படையெடுப்பில் நெருக்கடியான தருணங்களில் இரஜபுதன அரசியர் இதனைப் பெருமையுடன் மேற்கொண்டனர். சித்தூரின் இரண்டாவது போரில் இராணி கர்ணாவதியுடன் மற்ற பெண்களும் தீக்குளித்தனர்.

சித்தூரின் மூன்றாவது போரில் மகாராணா இரண்டாம் உதய்சிங்கை எதிர்த்துப், பல மாதங்களின் முற்றுகைக்குப் பின்னர் கைப்பற்றிய கோட்டையில் பிரவேசித்த அக்பர்(1568 பிப்ரவரி-22) கூட்டுத் தீக்குளிப்பு நடத்தி சாம்பலாகிப் போன இரஜபுத்திரப் பெண்களைக் கண்டு மனம் வருந்தினார் என்று அபுல் பசல் எழுதிய ,`அக்பர் நாமா`வில் குறிப்பிடப் பெறுகிறது. இவை தவிர இரஜபுதனத்தின் மற்றோர் அரசான ஜெய்சல்மீர்க் கோட்டையை இதே அலாவுதின் கில்ஜி முற்றுகையிட்ட போது 24000 பெண்கள் தீக்குளித்தனர்.
துக்ளக் ஆட்சிக் காலத்திலும் இங்கு மற்றோர் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்ந்தது. இரஜபுதனத்தின் சந்தேரிக் கோட்டையிலும் ஒரு கூட்டுத் தீக்குளிப்பு நிகழந்துள்ளது.(வேறு விவரம் தெரியவில்லை.) இராணி பத்மினிக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகளில் பெண்கள் குழந்தைகளோடு தீயில் இறங்கியதாக அறிகிறோம்.

ஜாலியன் வாலாபாக்;

நம் பாரததேசம் வளமானது, நல்ல தட்பவெப்ப நிலையும்,விளைச்சலுக்கேற்ற மண்வளமும்,நீர் வளமும் கனிமவளமும்,தாதுவளமும்,நல்ல பண்பாட்டு வளமும் பெற்று, யோகியர் பலர் வாழ்ந்ததால் யோகபூமியாகத் திகழ்ந்தது.இதனாலேயே அந்நியர் பலரின் படையெடுப்புக்கு ஆட்பட்டது.(அலெக்ஸ்டாண்டரின் தந்தை அலெக்ஸ்டாண்டரிடம்,`எனக்கொரு ஆசை இருந்தது ஆனால் நிறைவேறவில்லை,இந்தியா என்றொரு வளமான தேசம் இருக்கிறதாம்,அதற்கு எப்படியாவது சென்று வா` என்று சொன்னாராம்) இயற்கை நமக்கு
அளித்திருக்கும் கொடையை நம்மிடம் குறைந்த ஒற்றுமையால் தொலைத்தோம்.கைபர் ,போலன் கணவாய்களால் நேர்ந்த அந்நியர் வரவிற்குப் பின் கடல் வழியாக வாணிபத்தின் வடிவில் நுழைந்தது ஆங்கில ஏகாதிபத்தியம்.ஒரு வகையில் பல துண்டுகளாக இருந்த
நம் தேசத்தை ஒன்று படுத்தியவர்கள்.

ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆண்டிருந்த ஆல்கிலேய அரசின் பிடியலிருந்து விடுபட தலைவர் பலர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மகாத்மா காந்தியின் தலைமையில் சத்தியாக்கிரகம் வழி நடத்தப்பட்டது. ஆங்காங்கே உரிமைக்குரல் ஒலித்தது.நமது விழிப்புணர்வை ஒடுக்கத் தடியடிகளும் ,கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன.ஆனால் இந்திய தேயத்தின் இரத்த நாளங்களில் விடுதலை வேட்கை அடங்காமல் பெருக்கெடுத்தது.இதனால் அரசாங்கம் ரௌலட் சட்டத்தைப் பிறப்பித்தது.

ரௌலட் சட்டம்;
சிட்னி ரௌலட் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைப்படி இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.இதன்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரையும் அனுமதியின்றி கைது செய்யலாம்,விசாரணை இல்லாமலே சிறையில் அடைக்கலாம்.என காவல்துறையினருக்கு வழி வகுத்தது.இச்சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே கூட்டங்களும், கண்டனங்களும் நடைபெற்றன.பஞ்சாப் அமிர்தசரஸ் நகரிலும் கண்டனக் கூட்டங்களும், கடையடைப்பு 1919 மார்ச் 30லும் நடந்தது. இதன் எதிரொலி ஏப்ரல் 13ல் நடந்தது .ஜாலியன் வாலாபாக் படுகொலை;

பஞ்சாபில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று குரு கோவிந்த் சிங் அறப்படை இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய விழா கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி 1919 ஏப்ரல் பதின்மூன்றாம் தேதியன்றும் ஏராளமான பெண்களும்,குழந்தைகளும், ஆண்களும் ஜாலியன் வாலாபாக் திடலில் (அமிர்தசரஸ்) கூடினர்.
இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்டு டயர் என்பவன் 100 ஆங்கிலேயச் சிப்பாய்களும்,50 இந்தியச் சிப்பாய்களும் அடங்கிய படையோடு அங்கு வந்தான்.

ஜாலியன் வாலாபாக் திடலானது மூன்று புறமும் உயர்ந்த மதில்களும் ஒரு புறம் மட்டும் உள்ளே செல்வதற்கான குறுகிய வாயிலும் கொண்டதாகும்.டயரும் அவனது படையினரும் அவ்வழியை அடைத்து நின்றனர்.யாருக்கும் எந்த அவகாசமும் தராமலும்,என்ன ஏது என்று எதுவும் கேட்காமலும் டயர் கூட்டத்தினரை நோக்கிச் சுட ஆணையிட்டான்.திடீரென்று தாக்கியதில் அதிர்ந்து போன மக்கள் அங்குமிங்கும் ஓடித் தப்பிக்க முனைந்தனர்.இருந்த ஒரு வழியும் தடுக்கப் பட்டதனால் குருவிகளைப் போல் வீழ்ந்தனர்.வேடன் கூட கூண்டில் அடைபட்ட குருவிகளைச் சுட மாட்டான்.அந்தத் திடலின் நடுவில் ஓர் கிணறு இருந்தது.பெண்கள் தங்கள் குழந்தைகளோடு அதில் வீழ்ந்தனர்.கூட்டங்கூட்டமாக அதில் வீழ்ந்தவர்களும் தப்பவில்லை.இராணுவத்தினர் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுட்டனர்.அத்தனை மக்களும் மாண்டனர். ரௌலட் சட்டத்தின் உச்சகட்ட வெறியாட்டம் இப்படி அரங்கேறியது.
அரசின் கணக்குப்படி உயிரிழந்தோர் 379 பேர், காயமடைந்தோர் 1000 பேர். தனியார் குழுக்கள் மற்றும் காந்தியடிகள் அமைத்த குழுவின் கணக்குப்படி இறந்தோர் 1000 பேர், காயமடைந்தோர் 2000 ற்கும் அதிகம்.
படுகொலைக்குப் பின்;

பஞ்சாப் படுகொலையை மற்ற நாடுகளும் கொடுமை எனக் கண்டித்தன. நாடெங்கும் இதனைக் கணடித்து கூட்டங்களும் ,பத்திரிகைகளில் கண்டனங்களும் வலுத்தன.இதனால் ஆங்கிலேய அரசு 1919 அக்டோபர் 14ஆம் தேதியன்று லார்ட் வில்லியம் ஹண்டர் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைத்தது.
டயர் தனது அரசுக்குத் தெரிவித்த வாக்கு மூலத்தில், தான் வேண்டுமென்றுதான் சுட்டதாகவும் தவறு செய்ததாக நினைக்கவில்லை எனவும்,இன்னும் அதிகமாகக் கடுமை காட்டியிருக்க வேண்டும் அதற்கு இன்னும் அதிகமான வீரர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும்,இந்தத் தாக்குதலால் அவர்கள் மட்டுமல்ல, பஞ்சாப் முழுவதுமே நடுங்க வேண்டும் .என்றும் சொல்லியிருந்தான்.

அவனது செயல் அரக்கத்தனமானது என்று அறிந்தும் அவனைப் பணியிலிருந்து விடுவித்து அவனுக்கு வெகுமதியும் தந்தனுப்பியதாம்.

ஆனால் இந்த ரெஜினால்ட் டயரை இருபத்தியோரு ஆண்டுகளுக்குப் பின் உத்தம்சிங் 1940 மார்ச் 13ஆம் தேதியன்று லண்டனில் சுட்டுக் கொன்றார்.தப்பியோடவில்லை.கைதானார்,1940 ஜுலை 31ல் பென்டோன்வில் சிறையில் இவர் தூக்கிலிடப் பெற்றார்.அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
டைம்ஸ் ஆப் லண்டன்` ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங் டயரைப் பழிவாங்கியது ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் உணர்ச்சி வெளிப்பாடு என்று எழுதியது.பொதுவாக நம் தேச மக்களுக்கு உத்தம்சிங் செய்தது அரக்கத்தனத்திற்கு
கொடுத்த தண்டனை, சரியென்றே தோன்றியது.

இரு பெரும் நிகழ்வுகள்;

ஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் குருவிகளைப் போல் சுடப்பட்டு இறந்தனர்.அன்று சித்துரிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் போரினால் மாண்டனர். நாடு பிடிக்கும் ஆசையும்,நம் வளத்தைக் கொள்ளையடிக்கும் ஆசையும் (மண்ணாசையும் பொன்னாசையும்) காரணமாகவே அந்நியர்கள் உள்ளே நுழைந்தனர்.இந்த இரண்டினையும்
தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மனிதாபிமானத்தைத் தூக்கி எறிந்தனர்.டயரின் செயலானது அதிகார வர்க்கம் நாங்கள்,அடிமை வர்க்கம் நீங்கள் ‘எங்களை எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தின் வெளிப்பாடு. இந்தியத் திருநாட்டின் மண்ணும், பொன்னும் மட்டுமல்ல, மங்கையரும் அதுவும் அடுத்தவன் மனைவியாக இருந்தாலும் எனக்குச் சொந்தம் என்ற திமிரின் எதிரொலி அலாவுதீன் கில்ஜி இராணி பத்மினியை அபகரிக்க நினைத்தது.

இரண்டு நிகழ்வுகளிலும் மக்கள் ஆதரவற்ற நிலையில் இறப்பை எதிர் கொள்கின்றனர்.இராணி பத்மினியின் காலம் முடியாட்சி நிறைந்திருந்த காலம்.எங்கும் போர்தான். ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் காலம் முடியாட்சி விடை பெற்றுக் கொண்டிருந்த காலம்.மக்களாட்சி மலர மக்கள் குரல் கொடுத்த காலம்.

பெண்களின் நிலை;

இராணி பத்மினியும் மற்ற பெண்களும் அந்நியன் கையில் சிக்கிச் சீரழிவதை விட மரணம் சிறந்தது எனத் தீயில் இறங்கினர்.நம் பாரதப் பெண்ணியம் உறுதியானதெனக் காட்டினர். ஜாலியன் வாலாபாக்கில் பெண்களும் குழந்தைகளும் காயம்பட்டவர் பாதி, மீதி கிணற்றில் குதித்தனர்.

அநீதிக்குத் தண்டனை;

இராணி பத்மினியைக் கைப்பற்ற பல மாதங்கள் முற்றுகையிட்டு, போரிட்டு வெற்றி பெற்றும் அலாவுதீனின் எண்ணம் நிறைவேறாமல் போனது மிகப் பெரிய ஏமாற்றம், இது அவனுக்கு இராணி பத்மினி அளித்த தண்டனை.

டயருக்கு இருபத்தியோரு ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த தண்டனை உத்தம் சிங் பழி தீர்த்தது. அலாவுதீன் கில்ஜிக்கும், டயருக்கும் தீயினில் கரிந்த பக்கமும் இரத்தக்கரை படிந்த பக்கமும் தந்திருப்பது வரலாற்றின் உச்சகட்ட தண்டனை. எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை.அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான்!

அண்மையில் இராஜஸ்தான் சுற்றுலா சென்றபோது சித்தூர்க் கோட்டையில் இராணி பத்மினியின் நினைவுகள் விழியோரம் பூத்தபோது ஜாலியன் வாலாபாக் நினைவு வந்ததுதான் இக்கட்டுரை உதிக்கக் காரணமானது.

Series Navigationஇரணகளம் நாவலிலிருந்து….நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.