இருமை

குணா

இருமை இல்லா வாழ்க்கை இல்லை

இருமை உணர்ந்து வாழ்ந்தாரில்லை

இருமை உணராது ஏற்றத்தின் தாழ்வு

இரண்டும் உணர்வதே தெளிவுக்கு தூது

நல்லதும் கெட்டதும் நடைமுறை பழக்கம்

இருளும் ஒளியும் இயற்கையின் தோற்றம்

குளிர்தலின் எதிர்மறை வெப்பத்தின் தாக்கம்

உணர்தலை உணராது மரத்து போகும்

உள்ளும் வெளியும் ஒருங்கிட நாடும்

பிரிப்பதில் புரிந்திடும் இரு புற மாலமும்

உணர்வதில் குழப்பம் உணர்ந்தபின் தெளிவு

குழப்பத்தின் உச்சம் தெளிதலின் விளிம்பு

குறைவினை மறைக்கும் நிறைவின் தாக்கம்

நிறைவினில் முடியா நிறையின் குறைகள்

இருந்தால் தெரிவது இல்லாமைக் கொடுமை

உள்ளதும் போகும் இல்லாத நிலையில்

இல்லாமை என்பது நிலையான தன்மை

கற்றதும் காண்பதும் தெரிவிப்பதில்லை

இருப்பதாய் உணர்வது மயங்கிய நிலைமை

இருப்பதை இழப்பது நிதர்சன உண்மை

மனமும் மூலமும் சேர்ந்திட வேண்டும்

புரிந்ததன் மூலம் தெளிந்திட வேண்டும்

புறப்படு வழியை உணர்ந்திட வேண்டும்

தெரிந்திடில் நாடிட முயலுதல் வேண்டும்

நாடிடும் வழியை புரிபடல் வேண்டும்

நம் வழி அதுவாய் அறிந்திட வேண்டும்

சுழலுக்குப்பின் தான் அமைதி

அமைதியில் புரியா நிரந்தர தீர்வு

தீர்வில் தொடங்கும் அடுத்ததோர் குழப்பம்

நிலை நிலையற்ற தடுமாறும் தோற்றம்

தோற்றம் அறுந்த தொடர்நிலை ஆக்கம்

புரிபட தோன்றும் புறப்படும் மார்க்கம்

நின்றால் ஓடும் நில்லாதால் நிற்கும்

அலைபாயும் மனமும் அதுகாணும் நிலையும்

நான் என்றால் நீ நாம் என்றால் உணர்

பன்மையில் மறையும் இருமையின் கொடுமை

பலதும் புரிபட கூடும் குழப்பம் பதிலைத் தேடும் மறுபடி குழம்ப

எதிர்மறை தந்திடும் உள்ளதின் பதிலை இருந்தும் தேடும் குழப்பங்கள்  கூட

இருந்தும்

இருமை இல்லா வாழ்க்கை இல்லை

இருமை உணர்ந்து வாழ்ந்தாரில்லை.

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationகோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)பிராயச்சித்தம்