இரு கவிதைகள்

Spread the love

லாவண்யா சத்யநாதன்

அழிவியல்

 

உயர்ந்து

வளரவேண்டிய குருத்துகள்

ஊட்டமிலாது புவியில் அங்கங்கே

மண்ணுக்கு உணவாகின்றன.

ஓட்டுநரில்லா விமானம்

சோற்றுப்பொட்டலம் வீசுமென்று நினைத்தேன்.

அதுவோ வேவு பார்த்தது.

வனத்தில் வசித்த செடிகளை, மரங்களை

வேருடன் வீசியெறிந்தது.

வீதியில் ஊதிய உயர்வு கோரிக்கை ஊர்வலமும்

உரத்த குரல்களும்.

சோதனைக்கூடமொன்றில்

வயிறும் வாயுமில்லா யந்திர மனிதன்

பிறந்ததும் நடக்கத் தொடங்கினான்

எஜமானர்களுக்கு  ஏவல் செய்ய.

மாடுகளுக்குத் தொழுவமுண்டு.

குதிரைகளுக்கு லாயமுண்டு.

மனிதருக்கு உறைவிடமில்லை.

மழைக்கு ஒதுங்கிடமில்லை.

ஏவுகணையும் ஏழாம் அறிவும்  உளவுபார்க்கும்.

இவை அறிவியல் என்பது அரசியல்.

சொல்மாற்று.

அழிவியல் என்பதே சரி.

 

—.

பார்வைகள்

 

எதுவும்

முதற்பார்வையில் ஒன்றாய் தெரியும்.

மறுபார்வையில் இரண்டாய் தெரியும்.

கூர்ந்து பார்க்க மூன்றாய் தெரியும்.

துருவிப் பார்க்க நான்காய தெரியும்.

அலசிப் பார்க்க ஆறாய் தெரியும்.

எது எதுவாகத் தெரிகிறதோ

அது அதுவாக இல்லாததால்

இத்தனை பார்வைகளைத் தவிர்க்க முடிவதில்லை.

என்ன செய்ய?

 

Series Navigationஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து – 2