இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது

Spread the love

(1)

இது
இறந்தவர்கள் பற்றிய
க(வி)தை .

அதனால்
மர்மங்கள் இருக்கும்.

இறந்தவர்கள்
மர்மமானவர்கள் அல்ல.

இருப்பவர்களுக்கு
சாவு பயமானதால்
இறந்தவர்கள் மர்மமானவர்கள்

இருப்பவர்களுக்கு

இறந்தவர்கள் உலகை

யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஏனென்றால்
இருப்பவர்களின் சாவை
இறந்தவர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

(2)
இரண்டாம் எண்
அலுவலக அறையில் இருந்தவர்
’ரெக்டம்’ கான்சரில்
செத்துப் போனார்.

இரண்டாம் எண் அறைக்குப்
புதிதாய் வந்தவரும்
இரண்டே மாதங்களில்
’லங்’ கான்சரென்று
செத்துப் போனார்.

முதல் அறையில் இருந்தவர்
சுகமில்லையென்று
மாற்றலாகிப் போய் விட்டார்.

அவரிடத்தில் வந்த
அதிகாரியின் கணவரை
ஒளிந்திருந்த பாம்பாய்
மார்பு வலி வந்து
உயிர் பறித்துப் போயிருக்கும்.

அசகு பிசகாய் வதந்திகள்
திகுதிகுவெனக்
காற்றின் கிளைகளில் பரவும்.

(3)
இரண்டாம் எண் அறை
காலியாய் இருக்கும்.

காலி அறையில்
தனிமை கரந்திருக்கும்.

தனிமை
தீனிக்குத்
தன் வாலையே வாயில்
திணித்துக் கொண்டிருக்கும்.

காலி அறையின்
மேல்விதான வளையங்களில்
தூக்குக் கயிறுகள்
யாருக்கும்
தெரியாமல் தொங்கும்.

யாராவது
உள்ளே நுழைந்தால்
வளத்து விழுங்க
மலைப் பாம்புகளாய்க் காத்திருக்கும்.

சாயங்கால வேளையிலிருந்து
சடசடவெனப் பெய்யும் மழை
விடாது.

மேகப் பொதியில்
மின்னல் வெட்டி எரிய
இரண்டாம் ஜாம இருள்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

இப்போது
இரண்டாம் ஜாம இருள் திணிந்த
இரண்டாம் எண் அறை
திக்கு முக்காடிக் கொண்டிருக்கும்.

(4)
இரண்டாம் எண் அறையில்
ரெக்டம் கான்சரில் இறந்தவர்
உட்கார்ந்திருப்பார்.

“காகம் அழைத்தால் சென்று விடு
கடைசி விடுதலை அது” என்று
முதல் சூத்திரம் எழுதிவிட்டு
மறைந்து போவார்.

மனைவியை மீண்டும் பார்க்க
மார்பு வலியில் போனவர்
திரும்பி வந்திருப்பார்.

இரண்டாம் ஜாம இரவில்
மனைவி இல்லத்தில்
காணமல் போயிருப்பாள்.

மனைவி மேல்
அவரின் காதல் நினைவு
நிலா வெளிச்சத்தைக்
கூட்டி விடப் பார்க்கும்.

நிலா வெளிச்சத்திற்கு
வர்ணம் பூசி விட்டு
மாய இருள் சேரும்
மறுபடியும் இருமடங்காய்.

(5)
நெரிசல்
கூடிக் கிடக்கும்
நடு முற்றத்தில்.

நிலா வெளிச்சத்திற்குப்
பயந்து
உயிர்த் திருவிழாவில்
தொலைந்து போனவர்களின்
கூட்டமாய் இருக்கும் அது.

மார்பு வலியில் போனவர்
காணாமல் போன மனைவிக்குக்
காத்துக் காத்து
அலுத்துப் போயிருப்பார்.

”வாழ்ந்தும் காணாமல் போகலாம்.
செத்தும் காணப்படலாம்.”
இரண்டாம் எண் அறையில்
இருந்து கொண்டு
இரண்டாம் சூத்திரம் எழுதுவார்.

(6)

ஒருக்களித்திருக்கும் கதவின் பின்
ஒளிந்து கொண்டிருக்கும் பயம்
ஒரு பூச்சியின் நிழலை
விழுங்கியிருக்கும்.

பூச்சியின் நிழல்
“லங் கான்சரில்”
செத்துப் போனவருடையது.

பாதியே நினைவு கொள்ளும்
சுருக்கெழுத்துப் பெண்
மாய இருளின்
மறு பக்கத்தில் இருக்கும்
மீதிப் பாதி நினைவு தேடி
வந்திருப்பாள்.

நூற்கண்டைப் பிரிக்கப் போய்
அடி நூலிலிருந்து
ஆரம்பிப்பாள்
சுருக்கெழுத்துப் பெண்.

இருள் நூற்கண்டைப்
பிரித்துப் போடும் வழி
இது
என்பாள்.

காணும் கடைவழிக்கும்
வாராத
காதில்லா ஊசியை
நூல் கோர்க்கத்
தேடிக் கொண்டிருப்பாள்.

பாதி மறதியில்
சுருக்கெழுத்துப் பெண்
கசக்கிப் பிழிந்த
பாதி எலுமிச்சம் பழம் போல்
களைப்படைந்திருப்பாள்.

(7)

நடு முற்றத்தில்
நாற்காலிகள்
இறைந்து கிடக்கும்.

இரண்டாம் எண் அறையின்
மாய நிசப்தம்
தீவிர நெடி கொளுத்தி
மயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

சுருக்கெழுத்துப் பெண்ணின்
பாதி மறதி
முக்கால் மறதியாய்க்
கூடிப் போயிருக்கும்.

நடுமுற்றத்தின் நாற்காலிகளை
அனாதை வெளியில்
இழுத்துப் போட்டு விட்டு
தனியாய் நின்று கொண்டிருப்பாள்.

எது கரைவது
அகால வேளையில்?
காகமா?

காதல் பேசிக் கொண்டிருக்கும்
அவளின்
கழுத்தை நெறிப்பது யார்?

”காகம் அழைத்தால் சென்று விடு.
கடைசி விடுதலை அது”
என்று எழுதப்பட்ட
காகிதம் கிடக்கும்
அவள் உடல் கிடக்கும் பக்கத்தில்.

அந்த வாசகம்
இருக்கும் எல்லோருக்கும்
பரிச்சயமானதாய்
பயமாய் இருக்கும்.

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்சாயப்பட்டறை