இலங்கை

 

நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று

கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று

தெரியாது.

 

தாழ்ந்து பறந்து விமானம்

இரைச்சலிட்டுத் தாக்கி விட்டுப் போவது எப்படியிருக்குமென்று

தெரியாது.

 

இழுத்துப் போய் எங்கோ

மிதி மிதியென்று

இராணுவ பூட்ஸ் கால்கள் மிதித்தால் எப்படியிருக்குமென்று

தெரியாது.

 

கைகளைப் பின்கட்டி கண்கள் வெறிக்க

திறந்த மார்பின் முன் தொடும் கொலைத்துப்பாக்கி முன்

தன் உயிர்க்குஞ்சு துடிதுடிப்பது எப்படியிருக்குமென்று

தெரியாது.

 

உற்றார் உறவினரெல்லாம் சிதறிப் போக

சொந்த மண்ணிலேயே அகதியாய்த் தனிமையில் முள்வேலிக்குள்

மனிதச் சிதிலமாய்க் கிடப்பது எப்படியிருக்குமென்று

தெரியாது.

 

இழுத்துப் போனது தான் தெரியும்

பெண்டு பிள்ளைகள் என்ன ஆனாரென்று

இன்று வரை தெரியாமல்

’விண்விண்’ணென்று உள்ளம் வலிப்பது எப்படியிருக்குமென்று

தெரியாது.

 

யாருமழ யாருமில்லாத படுகொலைச் சாவுகளில்

வாழ்வின் சூன்ய வெளிகள் எப்படியிருக்குமென்று

தெரியாது.

 

மலைக்காட்டுப் பெருந்தீயாய் எம் மனிதர் போர்த் துயரம்

தொலைவில் கண்டு யாம் பதைத்தோம் இங்கு.

 

காடழிக்கப்பட்டதாய் நிராதரவாய்

களத்தில் தொகை தொகையாய் எம்மனிதர் கொல்லுண்டார்.

 

காடு காக்க

மண்ணில் மரங்கள் ஆயுதங்களாகும்.

 

தூரத்துப் பறவைகளானாலும்

கொல் பகையைக் கொத்திச் செல்லும்.

 

எம்மனிதர் காக்க

யாம் என்ன செய்திருக்க வேண்டுமென்ற கேள்வி மட்டும்

நாணில் கூரம்பாய் எம்மை விடுவதாயில்லை.

 

.

 

கு.அழகர்சாமி

Series Navigationகவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்‘ என் மோனாலிசா….’