இளஞ்சிவப்பின் விளைவுகள்

Spread the love

எஸ். ஸ்ரீதுரை
நன்றி கெட்ட எனது எஜமான நிறுவனம்
நேற்றைய டூட்டியின் முடிவில்
நீட்டிய இளஞ்சிவப்புக் காகிதம்
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கேயுரிய
களவாணித் தனத்துடன்
வார்த்தைகளால் விளையாடி
வஞ்சகமாய் மனம் வருந்தி
“போய்வா!” என்று பிடரியைப் பிடித்துத்
தள்ளிய கணம் முதலாகக்
கவலைப்படத் துவங்கி விட்டது
என் பலகீன மனசு….
கடனில் வாங்கிய கைனடிக் வண்டியின்
பாக்கித் தொகை குறித்தும்,
அக்காவின்
கல்யாணச் செலவுகளில் கால்வாசிக்கு
நானே பொறுப்பென்று
நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவைப்பற்றியும்,
ஆஸ்துமாவின் உடன்பிறப்பாக
அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்
அம்மாவின் மருந்துச் செலவைக் கணக்கிட்டும்,
கல்யாணம் என்று ஒன்று நடப்பதற்குள்
சென்னை மாநகரத்தின் எல்லைக்குள்ளாக
அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைப்
பத்திரப் பதிவு செய்யும் என்
நித்தியக் கனவு கலைகின்ற
கையறு நிலையை எண்ணியும் ….
எல்லாவற்றுக்கும் மேலாய் –
அலுவலக வாசல் டீக்கடையருகில்
அன்றாடம் எனது உபயமாய்
வீசப்படும் பிஸ்கெட்டுக்காக
வால் குழைத்துக் காத்திருக்கும்
என்புதோல் போர்த்திய அந்த
பிளாட்பார நாய்க்காகவும் சேர்த்துத்தான்….

Series Navigationதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.