இளமை வெயில்

 

 

என்னைச் சுமந்தபடி

அம்மா சூட்டில் நடந்தது

 

அம்மாவும் நானும்

காய்ந்த நெல்லைக்

கோணியில் சேர்த்தது

 

மதியம் அத்தா சாப்பிட

நான் விசிறிவிசிறி நின்றது

 

அம்மை ஊசிக்கு

ஓடி ஒளிந்தது

 

பனந்தோப்பில்

காணல்நீர் கண்டது

அங்கு நுங்கு குடித்தது

 

கரிக்கண்ணாடியில்

கிரகணம் பார்த்தது

 

காயும் கறிக்கு

காவல் இருந்தது

 

கொலுசுவீட்டுச் சுவரேறி

கொய்யா பறித்தது

 

நவ்வாப்பழக்காரி

பொன்வண்டு தந்தது

அது முட்டையிட்டது

 

பசு பார்வதியை

பொங்கலன்று கழுவியது

 

குழந்தைகள் தினத்தில்

காலைக்காட்சி காசின்றி

கண்டு திரும்பியது

 

தூண்டிலில்

விரால் விழுந்தது

 

கூண்டுக்கிளி பறந்துபோனது

என் பாட்டி பிரிந்துபோனது

 

கூடிக்கூடி

கூட்டாஞ்சோ றாக்கியது

 

தேன்கூடு கலைத்தது

தேனீ கொட்டியது

 

தூரத்தில்

விமானம் பார்த்தது

 

பம்பரம் கோலி

கிட்டிப்புல்லென்று திரிந்தது

 

முதல் செருப்பு வாங்கியது

முதல் சைக்கிள் ஓட்டியது

 

ஒரு நட்பு முளைத்தது

அது சண்டையில் முறிந்தது

 

காலணா தொலைத்தது

எட்டணா கண்டது

 

பள்ளிக்கூடம் சென்றது

குச்சி ஐஸ் சூப்பியது

 

இன்னும் எத்தனையோ

எல்லாமுமே என்

இளமைக்கால

வெயில் நினைவுகள்

 

அமீதாம்மாள்

 

 

 

Series Navigationதொட்டனைத்து ஊறும்…மோ