ஈர்மிப் பெருந்திணை

sexual-identityஅழகர்சாமி சக்திவேல்

 

நீ பாதி நான் பாதி கண்ணே

தலைவன் முனகினான்

நான் பாதி அவள் பாதி கண்ணா

தலைவியும்  முனகினாள்

 

ஊடுதல் காமத்திற்கு இன்பம்….

அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் தலைவி…

தலைவன் முனகினான்.

நன்றி..நாளை என் தலைவியிடம் சொல்ல

ஒரு நல்ல வசனம் கிடைத்தது..தலைவா எனத்

தலைவியும்  முனகினாள்

 

பசலைப் பருவரலால்

உன் அம்மா போட்ட வளையல்கள்

கழன்று காணாமல் போனதுவோ தலைவி?

தலைவன் முனகினான்

அவை என் தலைவியின் கைக்கே பொருத்தம் தலைவா எனத்.

தலைவியும்  முனகினாள்

 

நீ என் இதயத்து வீணை தலைவி

தலைவன் முனகினான்

நீ என் இதயத்தில் வீணோ தலைவா? எனத்

தலைவியும்  முனகினாள்

 

உன் உதடுகள் இனிக்கிறதேன் தலைவி?

தலைவன் முனகினான்

அது என் தலைவியின் இதழ் முத்த மிச்சம் தலைவா எனத்

தலைவியும்  முனகினாள்

 

இந்தப் பிறவியில் உன்னைத் தவிர வேறு மாதை

என் சிந்தையாலும் தொடேன். தலைவி..

தலைவன் முனகினான்.

இந்தப் பிறவியில் உன்னைத் தவிர வேறு மாதை

என் சிந்தையால் தொட விடுவாயா தலைவா எனத்

தலைவியும் முனகினாள்.

 

நம் குழந்தை அழுகுரல் கேட்கிறதே தலைவி?

தலைவன் முனகினான்

ஐயையோ நம் குழந்தை அழுகிறான்..

பசி வந்ததோ என் கண்ணே? எனத் தலைவி பதறினாள்.

பிள்ளையிடம் ஓடினாள்.

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

Series Navigationகடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்சத்யஜித்ரேயின் சிறுகதைகள்