உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4

kannanramasami

விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளை மேலும் ஆராயலாம்.
கோவை குண்டு வெடிப்பிற்காக(1998) கைது செய்யப்பட ஒரு தீவிரவாதி, அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி(2002) தான் என்று காலத்திற்கு பிந்தைய ஒரு சம்பவத்தை கூறுகிறாராம்! இது படத்தில் உள்ள ஒட்டையாம். இப்படி ஒரு கண்மூடித் தனமாக கருத்தை எப்படி வெட்கமே இல்லாமல் வெளியே சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை!
இதை சொல்லும் தீவிரவாதி அப்துல்லாவிடம் ‘நீ ஏன் கோவையில் குண்டு வைத்தாய்?’ என்று கேட்கப் படவில்லை. அவன், கோவையில் குண்டு வைத்ததற்கு இது தான் காரணம் என்று சொல்லவும் இல்லை.
தன்னுடைய மனைவியோடு செல் போனில் பேசும் ஒரு போலீஸ் காரரை பார்த்து, ‘எத்தனை பசங்க?’ என்று அவன் கேட்கும் போது, வாயை மூடச்

சொல்கிறார் இன்னொரு போலீஸ்(முசுலிம்). ‘இப்படியே வாயடைச்சு, வாயடைச்சு எங்க வந்து நிக்கிறோம் பாத்தீங்களா பாய்? நவாப்-ஆ இருந்தோம். இப்போ நாய் மாதிரி லோல் படுறோம்’ என்று கூறி, தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை பற்றிச் சொல்கிறான் அப்துல்லா. அவனுடைய அந்த காரணம், தன்னை இந்துக்கள் அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க சொல்லப் பட்டது. இதையும் கோவை குண்டு வெடிப்பையும் தொடர்பு படுத்தி கதையையே மாற்ற நினைக்கும் சில அறிவு ஜீவிகள், கமலின் புனைவுத் திறனை நோக்கி கேள்வி எழுப்புவதை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.
குஜராத் போன்ற இடங்களில் நடந்த இந்துத்துவ தீவிரவாதத்தை மக்கள் மறந்துவிட்டார்களே பராவயில்லையா? மீனம்பாக்கத்தையும், ஸ்ரீபெரும்புதூரையும் மட்டும் தான் நினைவில் வைத்திருக்க வேண்டுமா? என்று வேறொரு கேள்வியையும் எழுப்புகிறார்கள் சிலர். ‘மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது? மறதி ஒரு தேசிய வியாதி’ என்று காமன் மேன் கேட்பதை வைத்துத் தான் இந்த கேள்வி முன்வைக்கப் படுகிறது. அதோடு, மீனம் பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பை தமிழ் ஈழ ஆதராவாளர்கள் நடத்தினார்கள் என்று நினைவுபடுத்தி, குஜராத் கலவரமும், ஈழப் போராட்டமும் ஒன்றா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இங்கும், மற்றொரு முறை இவர்கள் பார்வையின் ஓட்டை விழுந்திருக்கிறது.
மீனம்பாக்கத்தை பற்றி சொல்லும் போது இப்படியும் காமன் மேன் சொல்கிறார்.
‘பம்பாயில் குண்டு வெடித்தால் தமிழ் சேனல்-ல போட்டுக் கூட காட்ட மாட்டோம். நமக்கு நடந்தா அது நாசம்; அவனுக்கு நடந்தா அது ந்யூஸ். நாம தமிழ் நாடு! அமைதிப் பூங்கா!’
அதாவது உங்களுடைய அமைதிப் பூங்காவில் குண்டு வைத்தால் மட்டும் அதை நாசமாகப் பார்ப்பீர்கள். அங்கு நடந்தால் மட்டும் ந்யூஸ் மாதிரி பார்க்கலாமா? என்று கேட்கிறார் காமன் மேன். ஆக இங்கும், விமர்சகர்களின் கேள்வியைத் தான் காமன் மேன் முன்வைத்திருக்கிறார். அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்பது தான் இங்கே பிரச்சனை.
மேலும், மீனம்பாக்கத்தை பற்றிச் சொல்லும் போது, விமர்சகர்கள் தவற விட்ட ஒரு வரியை சேர்த்து காமன் மெனின் வசனத்தை மறுபடியும் ஒரு முறை இங்கே குறிப்பிட்டால், பார்வையில் உள்ள ஓட்டை தெள்ளத் தெளிவாக நம் கண்களுக்கு தெரிந்துவிடும்.
“மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பை பற்றி எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது? மறந்துவிடுகிறோம்! மன்னிக்கிறோமோ இல்லையோ, மறந்துடுறோம்! மறதி ஒரு தேசிய வியாதி”, இப்படித் தான் கமல் சொல்கிறார்.
குஜராத் கலவரத்தையும், ஈழப் போராட்டத்தையும் கமல் ஒரே மாதிரியாக கருதியிருந்தால், இங்கு மட்டும் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தை எதற்காக வருகிறது? தூக்கு தண்டனைக்கு எதிராக கமல் ஏன் ஒரு முழு நீள படத்தை(விருமாண்டி) எடுக்க வேண்டும்? தன்னுடைய தாயை கற்பழித்துக் கொன்ற ‘தொப்பி’காரர்களை பற்றிச் சொல்லி தெனாலி ஏன் அழ வேண்டும்? (நான் இங்கே கமலுடைய கருத்தை மட்டும் தான் சொல்கிறேன். தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா என்ற விவாததத்தை நான் முன்னிறுத்தவில்லை)
உண்மையில், இது ஒரு இந்தி படத்தின் ரீமேக். அதனால், தமிழில் எடுக்கும் போது, ‘இது எங்கோ நடந்த கதை. நமக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் தமிழ் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும், நடந்து முடிந்துவிட்ட வழக்குகளையும் குறிப்பிட்டேன் என்று சொன்னார் கமல்.
மேலும், ‘இந்தி படத்தில் நடித்தவர் நசுருதீன் ஷா என்ற முசுலிம். அதனால் இயல்பாகவே இது முசுலிம்களுக்கு எதிரான படம் இல்லை என்ற கண்ணோட்டம் அங்கு வந்துவிட்டது. இங்கு நான் இந்துக்களுக்கு எதிரான சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை கேட்டிருக்கிறேன். இது எனக்கு(இந்து) நானே எழுப்பிக் கொண்ட கேள்வி” என்றும் சொன்னார்.
இது இப்படியானால், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற வார்த்தைகள் ஏன் படத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன என்று கேட்கிறார்கள்.
முதலில், தீவிரவாதிகளை விடுவிக்க கோரும் மற்றொரு தீவிரவாதியாகத் தான் தன்னை போலீஸ்-இடம் காட்டிக் கொள்கிறார் கமல். இதை அடுத்து, அந்த நான்கு பேரை பற்றிய விவரங்களையும், போனில் மிரட்டும் அந்த நபரின் அடையாளத்தையும் கண்டு பிடிக்கச் சொல்கிறார் மோகன்லால். இதை அடுத்து தான் ஒரு போலீஸ் காரர், அந்த நான்கு பேரை பற்றி விவரமாகச் சொல்கிறார். இந்த காட்சியில் தான் ஹமாஸ், ஹிஸ்புல்லா என்ற வார்த்தைகள் வருகின்றன.
ஆனால், தீவிர வாதிகளை கொன்ற பிறகு தான், போலீஸ்-ற்கு கமல் எதிரியாவது புரிகிறது. கதையின் நாயகர் பாசிசம் பேசும் மோகன் லாலோ, அப்துல்லாவோ அல்ல. போலீஸ்-ன் பாசிசத்திற்கும், உலகெங்கிலும் நிகழும் இசுலாமிய பயங்கர வாதத்திற்கு காஃபீர் எதிர்ப்பு தான் காரணம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் தீவிர வாதிக்கும் எதிரான காமன் மேன் தான் இந்தப் படத்தின் நாயகன்!
விளங்கச் சொல்ல வேண்டும் என்றால், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளையும் பொது மக்களுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்களாக பார்க்கும் போலீஸ்-இற்கும், அப்பாவிகளை கொன்றுவிட்டு, நியாயமான காரணங்களுக்காக போராடும் முசுலிம்களையும் துணைக்கு இழுக்கும் தீவிரவாதிக்கும் எதிரான ஒரு காமன் மேன் தான் நாயகன்.
ஆக, ஒடுக்கப்பட்டவர்களை காக்கும் உள்நாட்டு தீவிர வாதத்தை எதிர்க்கும் காமன் மேனாக தன்னை காட்டிக் கொள்ளவில்லை கமல்!
அவர், ‘இந்தத் தீவிர வாதிகள் என்னை விட புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?’ என்ற கேட்கும் கேள்வியையும் தவறான கண்ணோட்டத்தில் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வி,
“நூறு கோடி காமன் மேன்களை சுட்டுத் தள்ளும் 200 தீவிரவாதிகளை உங்களுடைய புத்திசாலி மூளை இன்னும் ஏன் விட்டு வைத்திருக்கிறது? Common intelligence உடைய என்னாலேயே அவனை வெல்ல முடிகிறதே! எனக்கு முன்பு நீங்கள் ஏன் தண்டனை வாங்கிக் கொடுக்கவில்லை? காந்தகாருக்கு பண மூட்டையை கொடுத்து அனுப்பி வைப்பதால் தான் அவனுக்கு பயம் போய் விடுகிறது. அதனால் தான் திரும்பி வந்து நெத்தியில துப்பாக்கி வெச்சு ‘என்ன ம** டா புடுங்க முடியும்’ என்று கேட்கிறான். இது ஏன்?’ என்று அர்த்தத்தில் தான் கேட்கப் படுகிறதே தவிர,
‘தீவிரவாதிகளை விசாரணை இல்லாமல் உடனே கொன்று விட வேண்டும்’ என்று கேட்கும் நோக்கில் அல்ல. இதை புரிய வைக்கவும் ஒரு காட்சி இருக்கிறது.
‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று மோகன் லால் கேட்கும் போது,
‘அப்துல்லா, இனாயத்துல்லா, கரம் சந்த் லாலா’ என்று கமல் சொல்கிறார். அதற்கு,
‘I understand. இவங்க எல்லாம்?’ என்று கேட்கிறார் மோகன் லால்.
‘ஓ! இவங்க யாரு-ந்குறதே மறந்து போச்சா?’ என்று கேட்கிறார் கமல். இந்தக் கேள்விக்கு, 1998-ல் நடந்த குண்டு வெடிப்பில் கைதான இவர்களை நீங்கள் 11 வருடங்களாக(படம் வெளியான வருடம்-2009) சட்டத்தின் முன் நிறுத்தாமல் இன்னும் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்பதாகத் தான் அர்த்தம். சட்டமே வேண்டாம்; தீவிர வாதம் மட்டும் போதும் என்ற எதிர்பார்ப்பு அல்ல. ‘Terrorism is instant; why could not justice be so?’ என்ற கேள்வியும், இந்த நோக்கில் தான் கேட்கப் படுகிறதே தவிர, விசாரணையை தவிர்க்கச் சொல்லும் நோக்கில் அல்ல.
ஆக, இந்தப் படம் முசுலிம் எதிர்ப்பையோ, பாசிசத்தையோ நம்முடைய மனதில் விதிக்கவில்லை என்று நிரூபணம் ஆகிறது. கமல் பிறப்பால் ஒரு பிராமணர். ஆக, அவர் நேர்மையான முசுலிம் ஆதரவாளராக இருக்கவே முடியாது என்று விமர்சகர்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதனால் தான் படத்தில் பாதியை மட்டும் புரிந்து கொள்கிறார்கள். இவர்களுக்காகத் தான் சில காட்சிகளையும் வசனங்களையும் இணைத்துள்ளார் கமல். அவர் இந்து முஸ்லிம் விளையாட்டை நிறுத்தச் சொல்வது இவர்களை பார்த்துத் தான். ஆனால் இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்ற கருத்து தான் இப்படி பட்ட விமர்சனங்களை பார்க்கும் போது நம் மனதினுள் எழுகிறது.
நேரடியாக பல காட்சிகள் இருந்தாலும், சில சூசக சாடல்களை மட்டும் சுட்டிக் காட்டி, ‘மக்களுக்கு புரிந்து கொள்ளும் அறிவு இருக்காது; அதனால் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும்’ என்று சுலபமாக சிலர் பேசி விடுகிறார்கள். அவர்களிடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.
இந்தப் படம் ‘U’ சான்றிதழோடு வெளியாகவில்லை. அதாவது இது பெரியவர்களுக்கான படம். குழைந்தையின் அறிவு உள்ளவர்களுக்கு படம் புரியாது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார்கள். அதற்குப் பின்பும் படத்தை பார்த்து, ஒரு ஓட்டை விமர்சனத்தை முன்வைத்தால், அது உங்களின் தவறா? கமலின் தவறா? பாப் கார்ன்-ஐ கொரித்தபடி, நண்பருடன் அரட்டை அடித்துக் கொண்டே படத்தை பார்ப்பவர்களுக்கு இந்த படம் புரியது தான்!
கமலும், ஆவணப் படம் எடுக்கும் ஒரு நபரும், சகட்டு மேனிக்கு இணையத்தில் எழுதித் தள்ளும் என்னைப் போன்ற கட்டுரையாளரும் ஒன்றல்ல.
இது போன்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினாலே படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர் முழுமையான ஒரு படத்தை கொண்டு போய் ‘Film Certification Board’ –இடம் நீட்டுகிறார். அவர்கள், ‘இந்த காட்சி வேண்டாம்; அந்த காட்சி வேண்டாம்’ என்று சொல்லி நீக்கி விடுகிரார்கள். போதாக் குறைக்கு, ஹே ராம் வெளியாகும் முன்பே அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு! விஸ்வரூபத்தை வெளியிடும் முன்பே முசுலிம் சங்ககளிடம் இருந்து எதிர்ப்பு! விசுவரூபம் போர் குற்றங்களை பற்றிய படம்; முசுலிம் எதிர்ப்பு படமோ, அமரிக்க எதிர்ப்புப் படமோ அல்ல என்று கமல் சொல்லிவிட்டாலும் ஏற்றுக் கொள்வதில்லை.
நிலைமை இப்படி இருக்கும் போது, நேரடியான விமர்சனங்களை அவர் முன்வைக்கவே இல்லை என்று எப்படி விமர்சிக்க முடியும்? அவர் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதால் தான் இந்த மாதிரியான ஒரு தலை பட்சமான விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டு, Certification Board-ஐயும் பகைத்துக் கொள்ளாமல் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் என்பது பெயரளவில் தான் உளது என்ற கருத்தை அவர் நேரடியாக பல நேர்காணல்களில் சொல்லி வந்திருக்கிறார். தன்னுடைய படங்களின் முக்கிய காட்சிகள் நீக்கப் படக் கூடாது என்று அவர் பல நாட்களாக போராடியும் வந்திருக்கிறார்.
விஸ்வரூபத்திலும் இதே போன்ற விமர்சனங்கள் எழும் என்று தெரிந்தே, எந்த பெரிய நடிகரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை அவர் செய்திருக்கிறார்.
விஸ்வரூபத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டால் நாங்கள் ‘U’ சான்றிதழ் கொடுக்கிறோம் என்று தணிக்கை குழுவினர் உறுதி அளித்திருக்கிறார்கள். அந்த சான்றிதழ் இருந்தால், படத்தின் தயாரிப்பாளரான கமல், தமிழக அரசின் வரிச் சலுகையை அனுபவிக்கலாம். மேலும் அதிக மக்களை இந்த படம் சென்றைந்து வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், ஏற்கனவே மிகப் பெரிய பட்ஜெட்-ல் படத்தை எடுத்திருக்கும் அவர், படத்தின் தரம் குறையக் கூடாது என்பதற்காக இந்த சான்றிதழை வேண்டாம் என்றும் மறுத்து விட்டிருக்கிறார்.
தன் பணத்தை எல்லாம் செலவு செய்து, கடன் வாங்கி இது போன்ற ஒரு சமூகப் பார்வை உள்ள படத்தை எடுத்து வெற்றி காண்பது என்பது கமல் போன்ற ஒரு பெரிய நடிகருக்கு சாதாரண விஷயம் அல்ல. அதை செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் அவருக்கு இல்லை. அவருடைய போட்டி நடிகர்கள் எல்லாம் மக்களுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு வியாபார சினிமா எடுத்து சுலபாமாக வெற்றி கண்டு வரும் போது, முட்டி மோதி வெற்றி காணும் இவருக்கு தலை வலிகள் அதிகம்.
அவர், இந்துக்களுக்கு எதிரானவர் என்று ஒரு தரப்பு இந்து மதத்தையே புரிந்து கொள்ளாமல் அர்த்தமின்றிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை நான் எழுதியதற்குக் காரணமே சில ஊடங்கங்கள் இவர், முசுலிம்களுக்கு எதிரானவர் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் தான். அவர், ‘நான் யாருக்கும் எதிரி இல்லை; ஒற்றுமையாய் வாழ வேண்டிய நாம் மதவாதத்தாலும், தீவிரவாதத்தால் பிரிந்து கிடக்கிறோம். இந்த நிலைக்குத் தான் நான் எதிரி’ என்கிறார். இரு வேறு தரப்புகளும் எதிர்க்கும் இது போன்ற ஒரு நபர் தான் நடுநிலையாளர். நடுநிலையில் தான் உண்மை இருக்கிறது என்பது புத்தர் சொன்ன பாடம்!
இந்தப் படத்தில் இருந்த பாசிச ஆதரவுக் கருத்துக்களை இணையப் பதிவாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை என்பது ஆபத்தான ஒரு விஷயம் என்று சிலர் சொல்கிறார்கள். விஜயகாந்த்-ஐயும், அர்ஜூனையும் கமலோடு ஒப்பிடும் இவர்கள், யாருமே படத்தை எதிர்க்கவில்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகாவது, ‘ஒரு வேளை நாம் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமோ?’ என்று யோசித்திருக்க வேண்டும்.
இவர்களைப் போல பெரும்பாலானவர்கள் இந்தப் படம் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரவாதத்தை வலியுருத்துவதாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், ஒரு பக்கம் அவர்களுடைய கோபத்தை காண்பித்து, மற்றொரு புறம், ‘ஆயுதத்தை தூக்கும் முன்பு தன்னுடைய கடமையை செய்ய அரசை நிர்பந்திக்க வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்துவதன் மூலம், பொது மக்களுக்குள்ள கடமையையும் புரிய வைத்திருக்கிறார் கமல். ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிற வசனங்களை மறுத்துப் பேசுவது எந்த வகையிலும் சரியாகாது.
இதைத் தவிர படத்தை தவறாக புரிந்து கொள்ளாத சிறுபான்மையினரை கண்டு எனக்கு மகிழ்ச்சி! பாசிசத்தை எதிர்க்கிறார்களோ இல்லையோ, முசுலிம்களை ஆதரிக்கிறார்களோ இல்லையோ! அவர்களுக்கு சினிமாவை புரிந்து கொள்ளத் தெரிந்திருக்கிறது!
முற்றும்

Series Navigationரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டிதவம்