உல(தி)ராத காயங்கள்

Spread the love

நேற்கொழு தாசன்

வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த
நினைவுகளின் வெதும்பல்கள்
விளிம்பு நிலையொன்றில்
முனகிக்கிடக்கும்

பகலின் நிர்வாணத்தின் முன்
கூனிக்குறுகிக்கிடக்கும் அவை
இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து
அதீதமான பிரவாகத்துடன்
ஓரங்களை தின்னத்தொடங்கும்.

இரைமுகரும் எலியொன்றின்
அச்சம் கலந்த கரியகண்களை,
இரையாகும் தவளையொன்றின்
ஈன அவல ஒலிகளை
உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும்.

தகனமொன்றின் நாற்றங்களை
பின்னான எச்சங்களை
அருகிருக்கும் இலைகளில்
படிந்திருக்கும் புகைகுறியீடுகளை
விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை
பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த
துர்தேவதைகளின் கொலுசொலிகள்
நாளைமீதான வெறுப்பினை………..,

விதைகளை வெறுக்கும் விருட்சத்தின்
வேர்களில் படிந்திருக்கும்
ஒரு இலையுதிர்காலத்தின் கண்ணீர்.

ஆக்கம்: நேற்கொழு தாசன்

வல்வை.
Series Navigation“சபாஷ், பூக்குட்டி…!”நிம்மதி தேடி