எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?

Spread the love

முனைவர் பி.ஆர். இலட்சுமி

 

தமிழ்மொழி காலத்தால் மிகவும் பழமையானது. ஆனால், சமீப காலமாகத் தமிழ் கற்க மாணவர்கள் உலகளாவிய அளவில் குறைந்து வருகின்றனர். தமிழ்பேசும் குடும்பத்தினர் தொழில் காரணமாகவோ,அல்லது வேறு காரணங்களினாலோ புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்வதால் அச்சமூகநிலையை ஒட்டி வாழவேண்டிய கட்டாயத்திலும், தொழில் அடிப்படையிலும் வாழ வேண்டியிருப்பதால் தமிழ்மொழி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பண்பாட்டுச் சீரழிவு குடும்பத்திலும், சமுதாயத்திலும் பிரதிபலித்துக்கொண்டிருப்பது உலகளாவிய அளவில் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.

வாழ்க்கையின் தேவையே பணமாகிவிட்ட நிலையில் சுயநலம், மனிதநேயமின்மை,பொறாமை,தீவிரவாதம் போன்றவை நச்சுவேர்களாகப் புரையோடிக் கிடக்கின்றன. இந்நச்சுவேர்கள் பாடம் இயற்றும் வல்லுநர் குழு முதல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வரை

பரவிக் கிடக்கின்றன. கற்றுக் கொடுக்கும் நிலையில் இந்நிலை காணப்பட்டால் சமுதாயம் எவ்வாறு திருந்தும்?

அன்பே உருவான புத்தரும், பிறர் வாழத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசாவும் மக்களுக்கு மறந்து வெகுநாட்களாகிவிட்டன.

நாட்டைத் திருத்திய உத்தமர் வரலாறும், உபதேசித்த கருத்துகளும் ஆண்டிற்கு ஒருமுறை சுயமுன்னேற்றத்திற்காகத்தான் திருப்பிப் பார்க்கப்படுகின்றன.

இதற்காகத் தமிழ்மொழி பயின்றவர்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் பல உள்ளன. தமிழ் அறியாதவர்களுக்குத் தமிழினைக் கற்றுத் தர முன்வரவேண்டும்.தமிழ்மொழியின் பெருமையினைப் புத்தகமாக எழுதவேண்டும். தமிழ்ப்பேராசிரியர்களும், தமிழ் ஆசிரியர்களும் மொழியின் பெருமையை மாணவர்கள் விளங்கும்வண்ணம் வெளிப்படுத்திக் கற்பித்தல்திறனை வெளிப்படுத்தவேண்டும். ஒரு மொழி தேய்வடைகிறது என்றால் முதற்காரணம் அம்மொழிக்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்புத்தன்மை வெளிப்படுத்தப்படாதிருப்பதாகும்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அவற்றில் உள்ள சிறப்பான கருத்துகள் யாவும் பாமர மக்களிடம் சென்று சேராதிருத்தலாகும்.

உயரிய நடையில் எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகளும், ஆராய்ச்சி ஏடுகளும் பாமர மக்களால் வாசிக்கப்பெறுவதில்லை. இன்றைய மனித சமுதாயம் படிக்கும் அளவிற்கு நூல்கள் தரம் வாய்ந்தவையாக அமைக்கப்பெறுதல்வேண்டும்.

நூல் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கும் இதுவும் ஒரு காரணமாகிறது.

ஊடகங்களின் தாக்கம் சராசரி மக்களைச் சென்றடையும்போது நூல்களினால் சாதிக்க ஏன் இயலவில்லை என்பதை எழுதும் நூலாசிரியர்கள் சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.

சமுதாயத்திற்கும், அரசியல் மாற்றங்களுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்களும் இதற்கு முக்கியக் காரணங்களாக  அமைகின்றன.

பாடங்கள் படிப்பது மாணவர்களை நன்னடத்தைக்கு உட்படுத்துவதற்கும், மொழியில் உள்ள பிற நற்கருத்துகளை அறிந்து நாட்டிற்கும், உலகிற்கும் நன்மை அளிக்கத்தான் இருக்கவேண்டும். சமீப காலமாக நடைபெற்றுவரும் தீய நிகழ்வுகள் வருந்தற்குரியது.

தமிழ்மொழி

  • பண்பாடு
  • வரலாறு
  • அறிவியல்
  • உடல்நலம்
  • இயற்கை
  • நுண்கலைகள்

போன்ற அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது. பிற மொழிகளில் இல்லாத பல சிறப்புகள் தமிழ்மொழியில் மிகுந்து காணப்படுகிறது.

காணாமற்போனதாகக் குறிக்கப்பெறும் குமரிக்கண்டம் குறித்து இன்னமும் ஆய்வுகள் நடத்தப்பெறவேண்டும்.

ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சு சர்ச் க்வார்டு 1931 இல் எழுதிய காணாமற்போன மூ எனும் கண்டம் என்ற நூலில் இலெமூரியாக் கண்டம் தொடங்கிப் பிஜித்தீவு வரைக்கும்,ஈஸ்டர் தீவுகளில் தொடங்கி மரியானாவரை பரவியிருந்ததாகக் குறிப்பிடுகிறார். தொடர்ச்சியான கடற்கோளின்விளைவாக மனிதன் தென்னமெரிக்கா வழியாக அட்லாண்டிக் கண்டத்தின் கடலோரம் வழியாக ஆப்பிரிக்காவரை பரவியதாக ஆய்வுச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்ரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளும், சாவாத்தீவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளும்,தமிழ்நாட்டில் கிடைத்த எலும்புக்கூடுகளும் மிகவும் பழமைவாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.தொடர்ச்சியாகத் தாய்லாந்தில் காணப்படும் பெரிய கல்தூண்களும்,ஈஸ்டர் தீவுகளில் காணப்படும் கல்தூண்களும் குமரிக்கண்டத்தைச் சார்ந்தவையாக இருந்திருக்கலாம்.மரபு சார்ந்த சோதனைகளின்வழி பெறப்பட்ட தகவல்கள் தமிழ்மொழிபேசும் மனிதனின் பழமையை உறுதிப்படுத்தியுள்ளது. இன்னமும் இது குறித்த ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன.

தமிழ்ப்பழமை வரலாறு காட்டும் ஆண்டுக்கணக்கு அட்டவணை(ஆய்வு அடிப்படை)

கி.மு9990 முதல்ஊழி
கி.மு1850 மூன்றாவது ஊழி
கி.மு6087 குமரிக்கண்டம் மூழ்குதல்
கி.மு6000-3000 இரண்டாம் தமிழ்ச்சங்கம் தொடங்குதல்(கிருஷ்ணர் கலந்து கொள்ளவில்லை)
கி.மு5000 சிந்துசமவெளி தொடக்கம்
கி.மு 4500 இராமாயண காலம்(வேதங்கள்-ரிக்,யசூர்,சாமம்)
கி.மு 4000 நாட்குறிப்பு ஆரம்பம்-உலகம்
கி.மு 3200 சிந்துசமவெளியினர்-27 விண்மீன்கள் இடத்தொடர்பு
கி.மு 3113 அமெரிக்கத் தமிழினத்தவராகிய மயன் கணக்கு தொடக்கம்
கி.மு 3100-3000 ஆரியர் வருகை
கி.மு 2600 எகிப்தியப் பிரமிடு-ஆரம்பம்
கி.மு2387 இரண்டாம்முறை கடல் கொந்தளிப்பு
கி.மு 2381 கபாடபுரம் அழிவு-ஈழம்-பிரிதல்
கி.மு 2000 ஆரியர்-வடபுலத்தமிழ்மன்னர்கள்,சிந்துவெளித்தமிழர்-போர்
கி.மு 1915 திருப்பரங்குன்றம்-3ஆவது தமிழ்ச்சங்கம்
கி.மு 1900 வேதகாலமுடிவு(சரஸ்வதிஆறு வற்றியது)
கி.மு 1500 துவாரகை மூழ்குதல்
கி.மு1500-300 ஆண்டுகளுக்குப் பின் ரிக் வேதம் பாடப்படுதல்

தமிழ் மன்னன் பற்றிய குறிப்பு-இருத்தல்

கி.மு 1316 மகாபாரதக்கதை அமைக்கப்படுதல்
கி.மு 623 புத்தர்காலம்
கி.மு 302 அர்ததசாஸ்திரக்காலம்
கி.மு 302 மெகஸ்தனீஸ்

இன்னமும் கண்டறியப்படாத சிந்துசமவெளிக்குறியீடுகள் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டுக்கூறுகளாக இருக்கலாம்.உடலை மூடும் ஆடையின் பயன்பாட்டினையும், இரும்பின்பயன்பாட்டினையும், மரக்கலங்களை உருவாக்கத் தெரிந்த பழமையான குமரிக்கண்டமக்கள் குறித்த  ஆய்வுகள் வெளிவர வருங்காலச் சமுதாயத்தினருக்குத் தகுந்த தரவுகள் அளிக்கப்படவேண்டும்.

பத்துவயதுள்ள மாணவனால் திக்கித் திணறி ஒரு பாடலைப் படிக்கின்றநிலை  இருந்தால் உலகெங்கிலும் விரவிக்கிடக்கும் தமிழ் தொடர்பான ஆவணங்களை வருங்காலச் சமுதாயத்தினரால் வெளிக்கொணர இயலுமா? இந்நிலை மாற

 

அடிப்படைக்கல்வி முழுமையாகப் படைப்பாற்றலுடன் அளிக்கப்பட்டால் தமிழ்மொழியின் பெருமை தழைத்தோங்கும்.

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்-என்பது வருங்காலச் சந்ததியினருக்கு என்ன பொருள் என்பதே புரிபடாமல் போகும் நிலை உருவாகாமல் இருக்கத் தமிழ்மொழி வளர உலகெங்கிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும். ஒவ்வொரு தமிழ் கற்ற மனிதனும் நம் தாய்மொழிக்கு இன்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதளவில் உணர்ந்து வாழ்தலே சிறந்தது. தன்னாலான சிறு தமிழ்ப்பணிகளைச் செய்து வாழ்ந்தாலே தமிழ்மொழி உலகளவில் தழைத்து வளரும். முனைவர் பி.ஆர் இலட்சுமி.,

பி.லிட்.,எம்.ஏ(தமிழ்,மொழியியல்,ஜெஎம்சி).,எம்ஃபில்.,டிசிஎஃப்இ(டிப்.ஆங்கிலம்).,புலவர்.,பிஎச்.டி.,(பிஜிடிசிஏ).,

தமிழ்த்துறை வல்லுநர்

சென்னை.

 

 

 

 

Series Navigationசொல்லின் ஆட்சிதறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு