எனக்கு வந்த கடிதம்

This entry is part 3 of 32 in the series 15 ஜூலை 2012

ரமணி

திண்டுக்கல்லிருந்து வெங்கடேச மாமா வந்து ரெண்டு நாளாகியிருந்தது. வெங்கடேச மாமா திண்டுக்கல் ஜங்க்ஷன் வி. ஆர். ஆர். என்றழைக்கப்பட்ட மரக்கறி உணவு சாலையில் வேலையில் இருந்தார். நல்ல வெங்கலக்குரல் அவருக்கு. தள்ளித் தள்ளி நட்டுவைத்த மரங்கள் போல சில பற்கள் மாத்திரம் இருக்கும் அவர் வாய்க்குள். எப்போது அவர் பொன்மலைக்கு எங்கள் வீட்டிற்கு வந்தாலும் எங்களுக்கு ஏதாவது தின்பதற்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ” மாவு மில் மாதிரி என்னடா வாய் அரைச்சுண்டே இருக்கு ” என்று அம்மா நாங்கள் தின்றுகொண்டே இருப்பதற்கு அணைபோட முயற்சி செய்வதை எல்லாம் அவர் தகர்த்து ” வளர்ற கொழந்தேள அப்படி எல்லாம் சொல்லாதே ! இப்போ திங்காம அம்பது வயசுலயா திங்கமுடியும் ? “என்று அம்மாவை கடிந்துகொள்வார். அம்மா அப்போதும் விடாது, ” அதுக்கில்லேண்ணா . இப்படி விடாம எதையாவது திண்ணுண்டே இருந்தான்னா, நாளைக்கி வயித்தப் புடிச்சுண்டு ஐப்பசி மாச மழை மாதிரி விசிறி விசிறி அடிச்சு டாய்லெட்டே கதின்னு கிடப்பாளே ! நான்தானே டாக்டர்கிட்ட ஓடவேண்டியிருக்கும் ? ” என்று வருத்தத்தோடு சொல்வதற்கு மாமாவால் சிரிப்பதைத்தவிர வேறு ஒன்றும் பதில் சொல்லமுடியாது போகும். மேலும் அவர் எங்கள் வீட்டில் இருக்கும் நாட்களில் எப்படியும் நைட் ஷோ சினிமா கட்டாயம் உண்டு. இப்படி எல்லாம் எங்களை மிகவும் கவர்ந்திருந்த வெங்கடேச மாமா மீது அன்று எனக்குக் கோபமான கோபமாயிருந்தது.

எட்டாம் வகுப்பு ” பி ” யில் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிருஷ்ண மூர்த்தி ஒரு நாள் , ” இதுவரைக்கும் உன் பெயருக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கா ? ” என்று கேட்டான். ” எங்கப்பா பேருக்கே எப்போதாவதுதான் லெட்டர் வரும் . எனக்கு எப்படி வரும் ? ” என்று சொன்னபோது அவன் பைக்குள்ளிருந்து ஒரு கவரை எடுத்து என்னிடம் காண்பித்தான். அந்தக் கவர் மீது ” வி. கிருஷ்ணமூர்த்தி, சன் ஆஃப் கே. வைத்திலிங்கம், ஏ – டைப் 11 /3, ரயில்வே காலனி, மாரியம்மன் கோவில் எதிர்புறம், கோல்டன் ராக், திருச்சி ” என்று அழகாக டைப் செய்யப்பட்டிருந்தது. அதன் உள்ளே அப்போது வெளிவந்துகொண்டிருந்த ” பேசும்படம் ” சைஸிலொரு புத்தகம் இருந்தது. ஜெர்மனி நாட்டைப் பற்றிய கலர் ஃபோட்டோக்களெல்லாம் நிறைந்திருந்த புத்தகம் அது. சில பக்கங்கள் கறுப்பு வண்ணத்தில் மங்கலான வெள்ளை எழுத்தில் இங்கிலீஷ் லெட்டர்ஸில் இருந்தாலும் அவை ஆங்கில வார்த்தைகளாக இல்லாமல் புரியாமல் இருந்ததில் கிருஷ்ணமூர்த்தி என்ன படித்து விளங்கிக்கொண்டானோ தெரியாது. ஆனால், அந்தப் புத்தகத்தின் மீதும் உள்ளே ஒவ்வொரு பத்து பக்கங்கள் விட்டும் அவன் பெயரை எழுதிவைத்திருந்தான் கிருஷ்ணமூர்த்தி. ஏற்கனவே கணக்குகளை எல்லாம் வேகமாகப்போட்டு லோகையன் சாரிடம் ” வெரி குட் ” வாங்கியிருந்த அவன் மீது எனக்கு இப்போது மேலும் பொறாமை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. அவன் இயற்கை உபாதைக்காகப் போயிருந்த பத்து நிமிடத்தில் அவன் பையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்து அது எங்கிருந்து வந்திருக்கிறது என்று அந்த முகவரியைக் குறித்துக்கொண்டேன்.

மூட் அவுட் ஆகி உட்கார்ந்திருந்த அன்றைய இரவில் என் அண்ணன் என் தம்பியிடம் ” என்னடா ஆச்சு இவனுக்கு ? ” என்று சந்தோஷமாகக் கேட்டபோது என் தம்பி, ” அந்த கிருஷ்ணமூர்த்தி இருக்கான் இல்ல . அவன் பேருக்கு ஒரு புஸ்தகம் போஸ்ட்ல வந்திருக்காம் ! அதப்பாத்ததுலேந்து ஐயா புஸ் ஆயிட்டாரு ” என்று அன்று எல்லா க்ளாசிலும் எல்லா வாத்தியார்களிடமும் அடிவாங்கியதை எல்லாம் மறந்து ஒரு சந்தோஷத் துள்ளலுடன் என் அண்ணனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான். திடீரென்று என்மேல் கரிசனம் கொண்ட என் அண்ணன், அது என்ன புத்தகம், எங்கிருந்து வந்திருக்கிறது என்றெல்லாம் கேட்டபோது நான் அந்தப் புத்தகத்தின்மேல் எழுதியிருந்த ஃப்ரம் அட்ரஸ்ஸைக் கொடுத்தேன். ” ப்பூ ! இவ்வளவுதானா ? நீயும் ஒரு லெட்டர் இந்த அட்ரஸ்ஸுக்குப் போட்டேன்னா ஒனக்கும் புஸ்தகம் வந்துடுமே ” என்றவுடன் நான் உற்சாகமாகி விட்டேன். எனக்கு ஏன் இது தோன்றவில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே என் அண்ணன் , ” நீ ஜெர்மன் கான்ஸுலேட்டிற்கு எழுதாதே ! ஃப்ரான்ஸுக்கு ட்ரை பண்ணு ” என்று ஏதோ நான் ஐ.எஃப் எஸ் பாஸ் பண்ணியபின் எந்த நாட்டிற்குத் தூதுவனாகப் போகலாம் என்பதற்கு ஐடியா கொடுப்பதுபோல் சொல்லிக்கொண்டிருந்தான். அண்ணன் இப்படி எனக்கு உபயோகமாய் இருந்ததில் மனசு வருத்தமாகி என் தம்பி உடனேயே தூங்கிவிட்டான். நான் மறு நாளே, ஃப்ரென்ச்சு கான்சுலேட் ஜெனரலுக்கு எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ” ரெஸ்பெக்டெட் சார் ! ஐ வாண்ட் டு நோ அபௌட் யுவர் கன்ட்ரி. ப்ளீஸ் சென்ட் புக்ஸ் ” என்று எழுதிப் போஸ்ட் செய்வதற்கு முன் திடீரென கிருஷ்ணமூர்த்திக்கு வந்த புஸ்தகத்தின் பக்கங்கள் ஞாபகம் வந்து ” வித் கலர் ஃபோட்டோஸ் ” என்பதையும் சேர்த்துக்கொண்டேன். நான் லெட்டர் போட்ட அடுத்த நாளிலிருந்து, ஏதோ பெண் பார்த்துவிட்டுப் போனவர்களிடம் இருந்து நல்ல சேதி வரும் எனக் காத்திருக்கும் பெண்ணின் தாய்தந்தை மாதிரி பதில் போஸ்ட்டை எதிர்பார்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் ஒன்றும் வராததால் ஃப்ரான்ஸ் நாட்டின் மீது போர்தொடுக்கும் அளவிற்குக் கோபம் வந்து பின் அந்த விஷயத்தை மெல்ல மறக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால், எப்போதெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அந்தப் புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தானோ அப்போதெலாம் என் அண்ணனின் அந்த நாளைய திடீர்க் கரிசனத்தின் மீது அப்போதே சந்தேகப்பட்டு, அவன் பேச்சைக் கேட்காமல் கிருஷ்ணமூர்த்தி போலவே ஜெர்மனிக்கே எழுதியிருக்கலாம் என்றும் தோன்றிக்கொண்டிருந்தது. ஃப்ரான்ஸின் மீது கடுங்கோபத்திலிருந்த நாட்களில் ” நம் நாட்டிற்கு ஈடுஇணை ஏது ” என்று எல்லா நாட்களும் சுதந்திர தினம் போல தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து என் அம்மா என்னை பாரதியாரைப் பார்ப்பது போல பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால், வெங்கடேச மாமா இந்த முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது , அம்மாவும் மார்க்கெட்டுக்குப் போயிருந்த ஒரு நன்னாளில் ” சார் போஸ்ட் ” என்ற கத்தலோடு சைக்கிள் மணியையும் அடித்துவிட்டு லெட்டரையோ அல்லது நமக்கு வந்திருக்கும் கவரையோ நிற்காமல் விட்டெறிந்துவிட்டுப் போகும் போஸ்ட்மேனின் அழைப்பை அலட்சியம் செய்து மாமா படுத்துக்கொண்டிருந்துவிட்டதில், வந்திருந்த கவர் என்ன என்பது யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. பின் அம்மா மார்க்கெட்டிலிருந்து வந்து கதவைத் திறந்தபோதுதான் தெரிந்தது போஸ்ட்மேன் விசிறியெரிந்த கவர் சரியாக அம்மா மறு நாள் வாசல் தெளிக்க வைத்திருந்த சாணியின் மேல் விழுந்திருந்தது. அது ஏதோ சாதாரணமாக விழுந்திருக்கவில்லை. அம்மா எடுத்து வைத்திருந்த சாணி காய்ந்துபோய்விடாமல் இருக்க அதன் நடுவில் குழிபறித்து வைத்திருந்ததில் அந்தக் கவர் விழுந்து ஆழ அமிழ்ந்து வெல்லப்பாகில் ஊறிக்கொண்டிருக்கும் பக்ஷணம் போலக் கிடந்தது. அம்மா அது என்னவோ ஏதோ என்று பயந்து மாமாவிடம் காட்டிக்கேட்டபோது அவருக்கும் சரியாகத் தெரியாமல், ” அது என்னவோ வெளி நாட்டுப் புஸ்தகம் மாதிரி இருக்கு. ஒண்ணும் முக்கிய சமாச்சாரமாத் தோணலை . யாரு பேருக்கு வந்திருக்குன்னு சரியாத் தெரியல்ல. ரமணின்னு போட்டிருக்கிற மாதிரிதான் தெரியறது . அட்ரஸ் எல்லாம் சாணியால மொழுகியிருக்கு. வேணும்ணா அதும்மேல சின்னதா ஒரு கோலத்தப்போடு ” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாராம். . போஸ்ட்மேன் கூப்பிட்டபோது கொஞ்சம் சிரமத்தைப் பார்க்காமல் மெல்ல எழுந்திருந்து அவர் எழுந்தவுடன் மூட்டுவலியோடு நடக்கும் சார்லி சாப்ளின் நடையில் போய் அதை எடுத்திருந்தால்கூட அந்த கவர் இவ்வளவு அசிங்கப்பட்டிருக்காது. அதனால்தான் எனக்கு மாமா மீது கோபமான கோபமாயிருந்தது.

நான் சாயந்திரம் ஸ்கூல்விட்டு வந்தவுடன், அம்மா அந்த கவரை என்னிடம் கொடுத்தாள். பக்கத்திலிருந்த என் தம்பி அதைப் பார்த்துவிட்டு, ” என்னம்மா இது ? இவனுக்கு வந்ததா ? பத்திரிகை மாதிரி இருக்கு ? ஆனா மஞ்சள் தடவறதுக்குப் பதிலா, சாணி தடவின மாதிரின்னா இருக்கு ? ” என்று சொல்லிக்கொண்டே மூக்கைப் பிடித்துக்கொண்டு தள்ளிப்போனான். எனக்குக் கோபமும் அழுகையும் ஒருசேர வந்தது. சின்னதாக உள்ளே இருந்த அந்தப் புத்தகமும் அதில் உள்ள அழகழகான படங்களும் நன்றாக ஊறிப்போய் வாசனை ஏறியிருந்தது. இதை எடுத்துக்கொண்டு போய் நான் எப்படி கிருஷ்ணமூர்த்தி மாதிரி பள்ளிக்கூடத்தில் காட்டிப் பீற்றிக்கொள்ள முடியும் ? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று கவலைப் படும்போதே அதுதான் கைக்கே அகப்படவில்லையே என்று தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது மீண்டும் ஒருமுறை முதலில் எழுதியது மாதிரியே எழுதிப்போட்டால் என்ன என்ற ஐடியா உதித்தது. அதை நிராகரித்து , மாதா மாதம் அவர்களை புத்தகம் அனுப்பச் சொன்னால் என்ன என்று யோசித்து, அடுத்த நாளே மீண்டும் ஃப்ரான்ஸ் கான்ஸுலேட் ஜெனரலுக்கு , ” ரெஸ்பெக்டட் சார் ! செண்ட் புக்ஸ் எவரி மந்த். தேங்கிங்க் யூ ” என்று ரத்தினச் சுருக்கமாகப் போட்ட கடிதத்திற்கு ஒரு வாரத்திலேயே பலன் கிடைத்தது. எனக்கு வந்த அந்த வழவழப்பான புஸ்தகத்தை நானும் பெருமையாக ஸ்கூலில் எல்லோரிடமும் காண்பித்தபின் வீட்டில் அதை வைத்துவிட்டுப்போன ஒரு நாளில் ” எதுக்காக இத வச்சுண்டு இவன் டான்ஸ் ஆடுறான் ” என அறிய ஆசைப்பட்டு அதை எடுத்துப் பார்த்த அம்மாவிற்கு அந்தப் புஸ்தகத்தின் ஒரு பக்கத்தில் போட்டிருந்த ஒரு யுவதியின் உடை அரைகுறையாய்த் தெரிய ,” மொளைச்சு மூணு எல விடல ! அதுக்குள்ள இந்த மாதிரி படம்போட்ட புஸ்தகமா ? ” என்ற தார்மீகக் கோபத்தில் அந்த புஸ்தகத்தை எரிந்துகொண்டிருந்த அடுப்பில், விறகிற்குத் துணையாக வைத்து விட்டாள்.

நாளாக ஆக , வெங்கடேச மாமாவின் மீதிருந்த கோபத்தின் அபத்தம் எனக்குப் புரிய ஆரம்பித்திருந்தபோது, அவர் எங்கள் வீட்டிற்கு வருவது வெகுவாகக் குறைந்துபோய் விட்டது. போனமுறை வந்திருந்த போது மாமாவிடம் காணப்படும் வழக்கமான உற்சாகம் இல்லாமல் முகத்தில் சோர்வு அதிகமாய்த் தெரிந்தது. நன்றாக இளைத்தும் போயிருந்தார். காலில் அடிபட்டிருந்ததால் கட்டு போட்டுக்கொண்டிருந்தது ஏதோ ஒருகாலுக்கு மட்டும் வெள்ளை கேன்வாஸ் ஷூ போட்டுக்கொண்டிருந்தது போல இருந்தது. மாமா சாதம் வேண்டாம் என்றும் சப்பாத்தி மாத்திரம் போதும் என்றும் சர்க்கரை எதிலும் சேர்க்கக்கூடாது என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் எங்களுக்கு மட்டும் ஸ்வீட்ஸ் வாங்கிவந்திருந்தார். இந்த முறை ஊருக்குக் கிளம்பும்போது, ” இதுதான் பொன்மலைக்கு வரது கடைசி தடவையாய் இருக்கும்னு நினைக்கறேன். பாத்துக்கோம்மா ! வர்றேன் ” என்று வாசலுக்கு வந்தவுடன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு மாரியம்மன் கோவிலைப் பார்த்து ஒற்றை விரலால் கன்னத்தில் போட்டுக்கொண்டார். நான், அவர் பையை வாங்கிகொண்டு ஒரு கையால் அவரைப் பிடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வரை சென்று வண்டி ஏற்றிவிட்டு வந்தேன். பஸ் கிளம்பும்போது கண்ணாடியை எடுத்துவிட்டுக் கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக்கொள்வது போல கண்ணீரைத் துடைத்துக் கொண்டதுபோல்தான் தெரிந்தது எனக்கு.

இரண்டு நாள் கழித்து வெங்கடேச மாமாவிடமிருந்து ஒரு லெட்டர் வந்திருந்தது. ரொம்பக் கிறுக்கலாய் இருந்த கடிதத்தை நான் தான் அம்மாவிற்குப் படித்துக் காட்டினேன். கடிதம் எந்தவித சம்பிரதாயமான ஆரம்பங்களும் இல்லாமல் நேரடியாக விஷயத்தை ஏந்தியிருந்தது. ஒருக்கால் மாமாவால் வழக்கமான, ” அன்புள்ள ஸ்ரீமதி சகுந்தலாவிற்கு ! அண்ணாவின் ஆசிர்வாதம். க்ஷேமம். உபய க்ஷேமபுரி ” என்ற பிரியமான அழைப்புகள், விசாரணைகள் எதையும் எழுத முடியாமல் போய்விட்டதோ என்னவோ ! என்ன வலியோ ? என்ன கஷ்டமோ? அவர் முகத்தில் சமீப காலங்களில் படர்ந்திருந்த கவலை ரேகைகள் இன்னும் அதிகமாகி அவர் விரல் வழி அந்தக் கடிதத்தில் படிந்திருந்தது போலத்தான் தோன்றியது . பிள்ளைகளெல்லாம் இருந்தாலும் , அவர்களின் இளமையில் இவர் பொழிந்த பாசத்தை வாங்கிக்கொள்ள மட்டுமே பாத்தியதைப் பட்டவர்கள்போல ஒரு வழிச்சாலைப் பயணிகளாக இருந்தார்கள். ” காயம்பட்ட காலை எடுத்துவிடவேண்டுமாம் . நாளைக்கு ஆபரேஷன் . கொஞ்சம் சரியானவுடன் சொல்லி அனுப்புகிறேன் . முடிந்தால் வா . ” இதுதான் கடிதம். அம்மாவின் முகம் நான் இதைப் படித்து முடித்தவுடன் மிகவும் இறுக்கமாகி விட்டதுபோல் எனக்குத் தோன்றியது. மறு நாள் அம்மா என்னை ரகசியமாக அழைத்து ஸ்கூலுக்குப் போக வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விட்டாள். அப்பாவும் ஆஃபிஸ் போன பின் என்னிடம முன்னூறு ரூபாயைத் தனியாகக் கொடுத்து, பஸ் பிடித்து திண்டுக்கல் போய் மாமாவை ஆஸ்பத்திரியில் பார்த்து கொடுத்துவிட்டு வரச் சொன்னாள். என் அப்பாவுக்கு மாத்திரமில்லாது வீட்டில் யாருக்கும் இது தெரியவேண்டாம் என ஏன் நினைத்தாள் என்று எனக்குப் புரியவில்லை. நான் அவள் சொன்னபடியே திண்டுக்கல் போய் சிரமப்பட்டு ஆஸ்பத்திரியைத் தேடிப்பிடித்து இளைத்துத் துரும்பாய் ஆபரேஷன் ஆகிக் கிடந்த மாமாவிடம் அம்மா கொடுத்த பணத்தைக் கொடுத்துவிட்டு சீக்கிரமே திரும்பி வீடு வந்து சேர்ந்தேன்.

பின் பத்து நாட்கள் கழித்து , என் பள்ளி முகவரிக்கு வெங்கடேச மாமாவிடமிருந்து ஒரு லெட்டர் எனக்கு வந்திருந்தது. நடராஜன் வாத்தியார்தான் அதை எடுத்துக்கொண்டு க்ளாஸிற்குள் வந்து , ” இதப் பார்றா ! இந்த ரமணிப் பயலுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. என்னடா லவ் லெட்டரா ? பின்னாடி ஃப்ரம் அட்ரெஸ்ஸைக் காணோம் ! ” என்று கண்ணடித்துக்கொண்டே அந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார். மாமாவிற்கு உடம்பு தேறி வருவதாகவும் , நான் கொண்டுவந்து கொடுத்த பணம் மிகவும் உபயோகமாக இருந்ததாகவும், அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லிக் கவலைப் படாமல் இருக்கச் சொல்லி எழுதியிருந்ததோடு அவ்ருடைய ஆசிர்வாதம் எனக்கு என்றென்றும் உண்டு என்றும் நடுங்கும் கையெழுத்தில் இருக்கும் அந்தக் கடிதம் இப்போதும் என் பெட்டிக்குள் இருக்கிறது. ஏனெனில் எனக்கு அவர் எழுதிப் போட்ட கடிதம் என்னை வந்தடையும் முன்னரே அவர் இறைவனிடம் சேர்ந்து விட்டார். நான் திண்டுக்கல் போய் வந்த இரண்டாவது நாளிலேயே தந்தி வந்து அம்மா அப்பாவெல்லாம் கிளம்பிப் போய் அவரைக் கரையேற்றி வந்துவிட்டர்கள். அவர் போனபின்னும் அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதம் இன்னும் எனக்கு அவரின் நேரடி ஆசியை வழங்கிக்கொண்டுதானிருக்கிறது.

—- ரமணி

Series Navigationகுணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)

7 Comments

  1. மதிப்பிற்குரிய திரு.ரமணி அவர்களுக்கு,
    “எனக்கு வந்த கடிதம்” மிக அருமையாக…
    சந்தோஷமாக ஆரம்பித்து வருத்ததுடன்
    முடிந்திருக்கிறது. ஒரு சோகத்தையும்
    சுகமாக ரசிக்கும்படி சொல்லிய விதம்…நெகிழ்வு..!
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. படித்து முடித்ததும் தொண்டை அடைத்துக் கொண்டதான உணர்வு. உயிரோட்டமான எழுத்து. வாழ்த்துக்கள்!

  3. Avatar punai peyaril

    இலகுவான மனம் தழுவிச் செல்லும் கதை… எண்ணத்தில் அப்படியே மிதக்கிறது… பொய்யாய் பழங்கதையாய் போனதுவே…

  4. Avatar punai peyaril

    ஒரு சோகத்தையும் ”””சுகமாக””” ரசிக்கும்படி சொல்லிய விதம்…—> யாருக்காவது இது மாதிரி இருந்தா சொல்லுங்க….

  5. Avatar s.ganesan

    beautiful story..though resembles sujathavin mamavin varavu..ofcourse ramani being a sujatha fan as his mentor narrates very serious theme in a lighthearted style……….outstanding…

  6. Avatar Mano

    Mamavin kaditham is an asset to be possessed for ever for its intrinsic value. Super writing.

  7. Avatar s.ganesan

    i wrongly quoted sujatha novel as mamavin varavu instead of mamavin vijayam…..sorry ramani….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *