எனது அடுத்த புதினம் இயக்கி

அன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம் இயக்கி. ஆதரவு தாருங்கள்

முன்னுரை

இன்றைய மதுரைக்குத் தென்கிழக்கில், பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில், திருப்புவனத்திற்கு அருகே இருக்கும் பள்ளிச்சந்தை மேட்டுத் திடலில், செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காகத் நிலத்தைத் தோண்டிய ஒருவர், மிகப்பெரிய செங்கற்சுவரைப் பார்த்து, அதிர்ந்து போய் ஆராய்ச்சியாளர்களிடம் சொல்ல, அவர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது அந்த இடத்தில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன.

மேட்டுத் திடலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராயும் பொழுது, அந்தக் காலத்திலிருந்த செங்கற்சுவரைத் தவிர, உறை கிணறுகள், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள், சூது, பவளம், பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல்கள், தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மண்பாண்டங்கள், தாயக்கட்டைகள், எழுத்தாணிகள், சுடுமண் பொம்மைகள் போன்ற பொக்கிஷங்கள் கிடைக்க, நமது பராம்பரிய சரித்திரமும், வேர்களும் நன்றாகப் புரிந்தது. இதுவரை புறநானுறிலும், அகநானுறிலும் சொல்லப்பட்ட விவரங்கள் இலக்கியச்சுவை கொண்ட பாடல்கள் மட்டுமல்ல, மறுக்க முடியாத சரித்திர உண்மைகள் என்பதும் புலனாகியது. கரிமத்தேதியிடல் முறையில் செய்யப்பட்ட சோதனையில், கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று உலகிற்குச் சொன்னது.

அதன் பின் முந்நூறு வருடங்கள் கழித்து அதாவது, இன்றிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு (கி.மு. 245-220 வாக்கில்) பெருமணலூர் என்று அழைக்கப்படும் மதுரையிலிருந்து (தற்போதைய கீழடி) பாண்டிய மாமன்னர் பூதப்பாண்டியர் ஆட்சி புரிந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்தப் புதினம் புனையப்பட்டுள்ளது. பெருமணலூரிலிருந்து கோலோச்சிய பாண்டிய மாமன்னர் பூதப்பாண்டியர் செய்த தவறினைச் சுட்டிக்காட்டிய கதையின் நாயகி இயக்கி, பாண்டிய நாட்டின் முன்னேற்றத்திற்கு எப்படி உதவினாள் என்பதைச் சொல்லும் இந்தப் புதினம், கீழடியில் கிடைக்கப்பெற்ற பல பொருட்களின் பயன்பாடுகளையும் சொல்கிறது.

சென்ற வருடம் நான் எழுதிய பொன்னி புதினத்தில், கதையின் மாந்தர்களான பொன்முடியும், பொன்னியும் ஜலசமாதி அடைந்து, இன்றும் நம்மைக் காத்து வருகிறார்கள் என்று முடித்திருந்தேன். பொன்னியம்மனுக்கு இணையான தெய்வம்தான் இசக்கியம்மனும். தென்தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் கலந்து போன இசக்கியம்மன், ஏமாற்றுபவர்களை, தவறு செய்பவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டாள் என்றும் அநீதி இழைத்தவர்களை இசக்கியம்மனை வேண்டும் பொழுது, அவர்களைத் திருத்துகிறார் என்றும் அம்மனை வழிபடுபவர்கள் நம்புகிறார்கள்.

இசக்கியம்மனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட இந்தக் கதையின் நாயகி இயக்கி, நாட்டுப்பற்று கொண்டவள். பாண்டிய நாட்டுக்கு எதிராக யார் என்ன செய்தாலும், அது தளபதியாக இருந்தாலும்.. ஏன் பாண்டிய நாட்டின் மன்னராக இருந்தாலும் கூட மன்னிக்கமாட்டாள் என்ற நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் புதினம் அந்தக் காலத்தில் மதுரை எப்படி இருந்திருக்கும் என்பதை இன்று கீழடியில் தொடரும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் விவரிக்கிறது.

இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, நேர்மையான ஆட்சி நடந்திருக்க முடியுமா என்று புதினத்தைப் படிக்கும் வாசகர்களுக்குச் சந்தேகம் வரலாம். புறநானூனற்றில் பூதப்பாண்டியரைப் பற்றி இருக்கும் குறிப்புகள், அந்தக் காலத்திலும் ராஜாங்கம் மேம்பட்ட முறையில் நடந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.

சங்ககால அரசர்களின் ஒருவரான பெருஞ்சாத்தான், பாண்டிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஒல்லையூரை தனதாக்கிக் கொள்கிறார். பாண்டிய மன்னர் அவரை வென்று அதைப் பாண்டிய நாட்டுடன் மீண்டும் இணைத்து ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியர் என்று போற்றப்பட்டார் என்பது புறநானுறு சொல்லும் வரலாறு. வஞ்சினக்காஞ்சித் துறையில் உள்ள இந்தப் புறநானுறு பாடலில், படையோடு என்னுடன் வந்து போரிடுவதாகக் கூறுபவரைப் புறமுதுகிட்டு ஓடச்செய்வேன்; அப்படி நான் செய்யாவிட்டால், எனது அன்பு மனைவியைப் பிரிவேன்; அறநிலைத் திரியாத என அவைக்களத்தில் திறமை இல்லாதவனை அமர்த்தி வலிமை இல்லாத ஆட்சி புரிவேன்; சுடுகாட்டைக் காக்கும் பிறவி அடைவேன் என்று வஞ்சினம் கூறுகிறார். இந்தப் பாடலில் அன்றிருந்த நீதி வழுவாத ஆட்சி, பெண்களை மதிக்கும் பண்புடமை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. அவர் எப்படித் தன்னை எதிர்த்த மன்னர்களை வென்றார் என்பதையும், என்ன தவறு செய்தார் என்பதையும், அதற்கு அவருக்கும் அவனது மனைவி மாதரசி பாண்டிமாதேவி கோப்பெண்டு தனக்குத்தானே விதித்துக் கொண்ட தண்டனையும் பற்றியும் சொல்கிறது இந்தப் புதினம்.

கற்பனையைக் கலந்து சொல்வதுதானே புதினம். இந்தப் புதினத்தில் பெருஞ்சாத்தான் சோழ நாட்டின் மன்னரை, ஒல்லையூர் விடுதலை பெற உதவிக்கு அழைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒல்லையூர் யுத்தத்திற்கு ஆதாரம் இருந்தாலும், சோழ மன்னர் உதவியதற்கு ஆதாரம் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிற்றரசரான ஒல்லையூர் கிழார், அருகில் இருக்கும் நாடுகளின் உதவி இல்லாமல் ஒல்லையூர் யுத்தத்தை நடத்தி இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கற்பனைச் சித்திரம்தான் இந்தப் புதினம்.

இந்தப் புதினத்தின் முக்கிய நோக்கம், நாட்டுப்பற்றினை இன்றைய இளைஞர்களிடையே வளர்ப்பதுதான். இயக்கி போன்ற பெண்களின் மனஉறுதியும், யார் தவறு செய்தாலும், அதைத் தட்டிக் கேட்கும் தைரியமும், நாட்டின் மீது கொண்ட பக்தி போன்றவற்றையும் இந்தப் புதினத்தைப் படிப்பவர்கள் தாங்களும் அது போன்று நடக்க வேண்டும் என்ற எண்ணினால் அதுவே இந்தப் புதினத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.

புறநானுறு மற்ற தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டதைத் தவிர இந்தப் புதினத்தில் எழுதப்பட்டது அனைத்தும் கற்பனையே. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவையல்ல.

எப்பொழுதும் போல எனது வலதுகரமாக விளங்கும் திரு. சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் தனது திறமையான திருக்கரத்தால் இந்தப் புதினத்தையும் திருத்திக் கொடுத்தார்கள். எனது ஆருயிர் நண்பர் சுந்தரம் அவர்கள் இந்தப் புதினத்தை மேம்படுத்த உதவினார்கள். அவர்களுக்கு எனது என்றும் மறவாத நன்றியை இந்தத் தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

புத்தகம் தயாரானதும், வானதி இராமநாதன் அவர்களைப் பதிப்பித்துத் தருமாறு கேட்டேன் மனமகிழ்ந்து உதவினார்கள். அவர்களுக்கும், வானதி குழுமத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அன்புக்கும், மரியாதைக்கும் உரிய வாசக எஜமானர்களே, எனது இந்தப் புதிய புதினத்தை வாங்கி எப்பொழுதும் போல உங்களது ஆதரவை என்றும் தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்ளும்,

உங்களின் அன்பான

10/07/2020                                                                              டாக்டர் எல். கைலாசம்

எண். 17, சேரமாதேவி சாலை,                                                       9444088535

திருநெல்வேலி 6.

Series Navigationசர்வதேச கவிதைப் போட்டிமுதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது