என் வீட்டுத் தோட்டத்தில்

மீனாட்சி சுந்தரமூர்த்தி

என் வீட்டுத் தோட்டத்தில்

மணம் தரும் மலர்கள்

மிகவுண்டு

ஆனாலும்

பூ விற்கும்

அம்மாவிற்காகக்

காத்திருப்பதில்

சுகம் எனக்கு.

நெற்றியில் நாமமிருக்கும்

நாவினில்

நாராயணன் இருப்பான்.

வயதோ எழுபதுக்கு

மேலிருக்கும்

நடையோ இருபது

போலிருக்கும்

வெற்றிலை மெல்லும்

வாய், சுண்ணாம்பின்

கறை விரலில்

கருணையில் ஊறிய

கண்கள் கையிருப்பு.

கனிவான

பேச்சு செலவழிப்பு.

அன்றொரு நாள்

விடியலில்

காய்ச்சலில்

தள்ளாடி வாசல்

தெளிக்கக் கண்டவள்

கோபித்து

வாளிநீரை வாங்கி,

தெளித்து,

கூட்டிப் பெருக்கி

மாக்கோலமிட்டாள்.

என் விழிகளில்

கோலமிட்டது நீர்.

வானகம் போன

அன்னையாய்த்

தெரிந்தாள்.

. திங்கள் ஒன்று

கடந்து விட்டது.

அவள் வரவில்லை

எவரும் அறியார்

அவளின்

ஊரும் பேரும், வீடும்

எங்கு சென்றாளோ?

நலமிழந்தாளோ?

சொல்வார் எவருமில்லை.

நித்தம் அவள்

நாவினில் வசிக்கும்

நாராயணா நீ

அறிவாயே பதில் சொல்.

Series Navigationமனச்சோர்வு( Depression )தொடுவானம் 212. ஆலய சுற்றுலா