எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு

author
0 minutes, 10 seconds Read
This entry is part 44 of 51 in the series 3 ஜூலை 2011

கவிஞர் முல்லை முஸ்ரிபா, இலங்கை

கவிதை பொங்கிப் பிரவாகிக்கும் அற்புதம்; அந்த  அற்புதத்தைப் பருகத் தொடங்குகையில் மனசில்  குதூகலிப்பு மீளப் பொங்குதல் தொடங்கும். அந்தப் பொங்குதல் இன்பமாக அல்லது இன்பத்தின் வலியாக அல்லது துன்பமாகக்  கூட தொடரலாம்.

 

கவிதை  எனும் தொன்மையூற்று தொட்டணைத்து அகலப் பரந்தூறி விரிகையில் அதன் ஈரத்தில் ஊறாமல்  யாரிருத்தல் முடியும்.

 

அத்தகைய ஈரத்தில் ஊறியபடிதான் கவிதை வாசித்தல் அல்லது நேசித்தல் வரலாறு இருந்து வந்துள்ளது.  அத்தகைய வாசிப்புக்கு ஊடு தருபவையாக கவிதைப் பிரதிகள் அமைந்து வருகின்றன.

 

நெடிதான கவிதைப் பிரவாகிப்பின் நிழல்கள் தொடரும் வேளையில்தான் `வீழ்தலின் நிழல்’ கவிதைப் பிரதி நமது வாசிப்புத் தளத்துக்குக் கிடைத்துள்ளது.

 

ஈழத்தின் சமகால எழுத்து வீச்சுப் புள்ளிகளில் தெரிகின்ற இன்னொரு முகம் எம். ரிஷான் ஷெரீபினுடையது. ரிஷானின் கவிதை நிழல் வாசிப்புக்கு குளிர்ச்சி சேர்ப்பதாயுமுள்ளது.

 

காலச்சுவடின்  வெளியீடாக  வந்துள்ள ரிஷானின் வீழ்தலின் நிழலில் 57  கவிதைகள் நிழலிடுகின்றன. ரிஷானின் கவிதை வெளி அற்புதமானது. அவரின் சொல்லாட்சியினூடு ஊறுகிற கவித்துவம் ரசிப்புக்குரியது. அவர் மொழியினூடாகக் கோலம் காட்டுகிறார்; அவர் காட்டும் கோலங்கள் வாசிப்பனுபவத்தில் விதவிதமாகவும் கலர் கலராகவும் ரசிப்பூட்டிச் செல்கின்றன.

 

வடக்குக் கிழக்குக்கு வெளியே மொழியை லாவகமாகக் கையாளும் படைப்பாளர்களில் ரிஷானது இடமும் குறிப்பிடத்தக்கது.

 

ரிஷான்  கவிதைக்கும் அப்பால் சிறுகதை, ஓவியம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் செயற்படுகிறார். தாள் எழுத்துக்கும் அப்பால் மின்னெழுத்துக்களிலும் அதிகம் இயங்குகின்றார்.

 

ரிஷான்  குறிப்பிடுவது போல “கணத்துக் கொவ்வொன்றாய் மாறும் சித்திரங்களானானது உலகம். அவற்றின் நகர்வுகள் விசித்திரமானவை. ஒலி செறிந்த வண்ணங்களைக் கொண்டவை. அழகும் அகோரமும் இசையும்  ஓலமும் வாசனையும் வீச்சமுமென  பல முகங்கள் அந்த ஓவியங்களில் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன’ வர்ணங்களை  ஒத்தியெடுத்திருக்கும்  தூரிகை ரிஷானினுடையது.

 

அந்தத் தூரிகையிலிருந்து விழும் நிழலில் குந்தி நிழலை வாசிக்கையில் அது மனசில் விரிக்கும் எல்லை எதுவுமற்றதான தேடல் வெளி அல்லது உணர்வு வெளி முக்கியமானது.

 

ரிஷான்  கோபப்படுகிறார்; ஆத்திரம் கொள்கிறார்; வேதனைப்படுகிறார்; சீறுகிறார்; சிரித்தும் கொள்கிறார்; மனசுக்குள் ஆறுதல் தேடி நமது சமூகப்  பரப்பில் பயணிக்கிறார். அவரது பயணிப்பினதும் தேடலதும் பதிவுகளாக  அனுபவத்தின் எல்லை தொட்டு நிற்கின்றன கவிதைகள்.

 

நான் நடக்கிறேன்

தெரு சபிக்கிறது

நிசி தன் பாடலை

வெறுப்போடு  நிறுத்துகிறது’

 

என்று  முடியும் நள்ளிரவின் பாடலில் `தெரு’ குறியீடாகத் தொனிக்கிறது.

 

ரிஷானின்  ‘கோடை’ இறுக்கமான பின்னல்.

 

பெருவனத்தை எரிக்குமொரு

ஊழியத்தீயின் கனல் நான்

 

என ரிஷான் கோடை வெக்கையாய் வெளிப்படுகின்றார். மேலும் ரிஷான்

 

`எல்லா  உயிரையும்  பொசுக்கும்

வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்

வலுஞ்சுடர் நான்’

 

எனக் கொதிக்கின்றார். அவரது பேனாச் சுடர் மூலம் நமது சமூகத்தின் கொடூரங்களுக்குத் தீயிடும் இளமைச் சுடர் அவர்.

 

ரிஷானின்  `மழைப்பாடல்’ பத்து வரிகளிலானது.

 

`தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க

சூழ்ந்திருந்த எல்லா வழிகளையும்

இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி

என்னைச் சிறையிலிட்டுக் கொண்டேன்

வெளியேற முடியா வளி

அறை முழுதும் நிரம்பி

சோக கீதம் இசைப்பதாய்க் கேட்டபொழுதில்

மூடியிருந்த யன்னலில்  கதவுகளைத் தட்டித் தட்டி

நீரின் ரேகைகளை வழிய விட்டது

மழை’.

 

ரிஷான் நமக்குள் வழிய விடும் மழை  ஓய்வதில்லை.

 


 

Series Navigationகுயவனின் மண் பாண்டம்மரணித்தல் வரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *