எவரும் அறியாமல் விடியும் உலகம்

Spread the love

பா. சத்தியமோகன்.
விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள்
அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும்

கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி
பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள்

விடை பெற்றுக் கொண்டிருக்கிறது
கோடைகாலத்தின் மார்பில் ஒட்டியிருக்கும் குளிர்

புலரப் போகும் இந்த உலகம்
இன்னும் சற்று நேரத்தில் விரைந்து இயங்கத் துவங்கும்

எவர் அறியக்கூடும் –
விடிந்து கொண்டிருக்கும் இந்த உலகம்
இன்று எதில் எதில் ஆழ்ந்து போகும்?
எத்தனை இலட்சம் குழந்தைகளுடன்
நகரப்பேருந்து நெரிசல் இயங்கத் தொடங்கும்?
எத்தனை இலட்சம் பேருக்கு இன்று மரண தேதி?
எவர் எவர் வாயில் என்னென்ன சொற்கள் புரளும்?
அணுக்கரு உலை கட்டுமானப் பணியால்
சுள்ளிகள் எடுத்து வந்த அலகுடன்
கூடு கட்ட வியலாமல் திரும்பும் பறவைகள் எண்ணிக்கை எவ்வளவு?
சாதாரண விஷயங்களில் அற்புதமும்
அற்புத விஷயங்களில் சாதாரணமும் நிகழும் மர்மம்பற்றின விவரம்?

எதுவும் கூறாமல்
என்னைக் கடந்து போகும் புலர்க்காலைக்காற்று
இரகசியம் ஈனுமென்று நம்பவைக்கும்
உற்று உற்று கேட்டாலோ
அப்பாவியாய் பொழுது விடிந்திருக்கும்!
******

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்