ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..

Spread the loveஅழகியசிங்கர்
    
    ‘சொல்லப்படாத நிஜங்கள்’  என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து சமீபத்தில் நான் படித்த கதை üபிற்பகல்ý என்ற சா.கந்தசாமியின் கதை. இந்தக் கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.
எளிய மொழிநடையில் சா.க.இந்தக் கதையை எடுத்துச் செல்கிறார்.
    சாரதா அரைநாள் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு ஆபிஸிலிருந்து வெளியே வருகிறாள். அவளுக்குத் தாங்க முடியாத பல்வலி.
    ஒருவருக்குப் பல்வலி வந்தால் தாங்க முடியாது.  சாரதாவிற்கும் அப்படித்தான்.  தாங்க முடியவில்லை.  பல்வலியோடு அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாது என்பதால் வீட்டிற்கு வருகிறாள்.
    சாரதாவிற்கு ஏற்படுகிற பல்வலியை நமக்கும் பல சம்பவங்களைக் கூட்டி ஏற்றுகிறார் கந்தசாமி.
    காலையில் பல்வலி தாங்காமல் அலுவலகத்திற்கு வருகிறாள் சாரதா.     மதியம் விடுமுறை எடுத்துக்கொள்கிறாள்.  அங்கிருந்து திரும்பவும் வீட்டிற்குத் திரும்புகிறாள். 
       பிளாட்டில் மாடி ஏறி வருகிறாள்.  கரண்ட் இல்லாததால் மாடிப்படிக்கட்டுகளில் நடக்க வேண்டி உள்ளது.  அப்போது நாலாவது மாடியிலிருந்து பிரதாப் ரெட்டி சினிமா ஆர்ட் டைரக்டர் கீழே இறங்கி வருகிறான்.
    அவள் அவனைப் பார்த்துப் புன்னகை பூக்கிறாள். 
    “என்ன மேடம் அரைநாள் ம்டடமா?” என்று கேட்கிறான்.
    அவன் என்ன காரணத்திற்காக மட்டம் என்று கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.  நர்த்தகியில் நடக்கும் ஷøட்டிங்குக்கு வரச் சொல்கிறான்..
    பதிலொன்றும் சொல்லாமல் மேலே ஏறிச் சென்றாள்..  இந்த இடத்தில் பல் வலியோடு இருக்கும் சாரதா அதைக் குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.
    ஈரக் கையைத் துடைத்தபடி-வெளியில் வந்து நாற்காலியல் உட்கார்ந்தாள்.  வாசல் கதவு மெதுவாகத் தட்டப்படும் சப்தம் கேட்டது.  தலையை நிமிர்ந்து பார்த்தாள்.  எழுந்து போய் கதவைத் திறந்தாள்.
    எலக்டிரிசிட்டி கார்டில் என்ட்ரி போட்டுகிட்டு வந்திருக்கிறான் வாட்சுமேன் நாராயணன்.  அவனிடம் இரண்டு ரூபாய் சில்லறையைக் கொடுத்து விட்டு கார்டை வாங்கி வைத்துக் கொள்கிறாள் சாரதா.
    இந்த இடத்திலும் தவறிப்போய் தனக்குப் பல்வலி தாங்க முடியவில்லை என்று சொல்லவில்லை சாரதா.
    ஆனால் அவளுக்கு ஏற்பட்ட பல் வலியை விவரிக்கிறார் கதாசிரியர்.
    ‘கடைவாய்ப் பல்லுக்குக் கீழே வலிப்பது மாதிரி இருந்தது.  இடது கையால் ஒரு முறை தடவிவிட்டுக் கொண்டாள்.  கை தாடையில் பட்டதுமே ஈறு வலிப்பது மாதிரி இருந்தது.  புரண்டு குப்புறப்படுத்து, கால்களைப் படபடவென்று மெத்தை மீது உதைத்துக்கொண்டாள்.’
    காலிங் பெல் அடிக்கிறது.  படுக்கை அறையில் தலைக்கு மேல் வைக்க வேண்டாமென்று எத்தனையோ முறை சொல்லியும் அவன் கேட்கவில்லை.
    சாரதா கதவைத் திறந்தாள்.  ஒரு பெண். இருபது இருபத்தொரு வயதிருக்கும்.  தோளில் காது வைத்த பையும், கையில் பிளாஸ்டிக் கூடையுமாக நின்றுகொண்டு இருந்தாள்.  இவளைப் பார்த்ததும் பல்லெல்லாம் தெரியப் பெரிதாகச் சிரித்தபடி,
    “மேடம் புதுசா வந்திருக்கிற லேடீஸ் டவல் மேடம்..” என்கிறாள். பொருளைக் காட்டி பல்லைக் காட்டியபடி விற்க வந்திருக்கிற பெண்ணை மெதுவாக அனுப்பி விடுகிறாள்.

    பல் வலியோடு பிரம்பு நாற்காலியை முன்னே இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.
    இந்தக் கதையில் இதுவரை அவளுடைய பல்வலியை யாரிடமும் பிரஸ்தாபிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
    பிரதாப் ரெட்டி போன் செய்து அவன் மனைவியிடம் ஹைதராபாத்து போவது பற்றிக் குறிப்பிடச் சொல்கிறான். மனைவியிடம்.  சாரதா சொன்னால் போதும் என்கிறான்.  மனைவியைக் கூப்பிட வேண்டாமென்கிறான். டெலிபோனைக் கீழே வைத்தாள்.  வாசல் கதவு தட்டப்பட்டது.  அவள் முன்னே சென்று கதவைத் திறந்தாள்.  இரண்டாவது பிளாட் மனோன்மணி சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.  
    “என்ன உடம்பு சரியில்லையா, ஆட்டோவில் வந்தீங்க போலிருக்கு?” என்கிறாள் மனோன்மணி.
    இப்போதுதான் சாரதா தனக்குப் பல்வலி என்பதைப் பற்றிப் பேசுகிறாள்.
    “ஐய்யய்யோ எது வந்தாலும் வரலாம்.இந்தப் பல்லு வலி மட்டும் வரக்கூடாது,” என்கிறாள் மனோன்மணி. 
    மனோன்மணி போய் விட்டாள்.  இப்போது பல்வலியுடன் சாரதா போராடுகிறாள்.  திரும்பவும் மணி அடிக்கிறது. கதவைத் திறந்தவுடன் வாசலில் பூ விற்கும் ராணி நிற்கிறாள்.
    இரண்டு முழம் ஜாதி மல்லியைத் தந்து விட்டு, உடம்பு சரியாய் இல்லையாம்மா என்று கேட்கிறாள்.  ‘நாளைக்கு வா’ என்று அவளுக்குப்  பதில் அளித்துவிட்டு கதவைச் சாத்துகிறாள்.  அவளிடம் அவள் பல்வலியைப் பற்றிப் பேசவில்லை.
    திரும்பவும் தொடர்ந்து மணி அடித்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் உடனே போய் கதவைத் திறக்கவில்லை சாரதா.  அவள் கண்ணாடியைப் பார்க்கிறாள்.  தலைமுடியை விரலால் கோதி சரிசெய்து கொண்டாள்.  மணி மறுபடியும் அடித்தது.  அவள் வாசல் பக்கம் ஒரு முறை பார்த்துக்கொண்டாள்.  ஆனால் வாசல் கதவைத் திறக்கப் போகவில்லை.  நிதானமாக ஒருமுறை இருமி எச்சிலை வாஷ்பேசினில் துப்பி விட்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.

    மணி விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருந்தது. அவளிடம் ஒரு அலட்சியம் கதவைத் திறக்க. 
    பின் அவள் ஈரக் காலை மிதியடியில் துடைத்தபடி பாத் ரூமை விட்டு வெளியில் வந்தாள். இப்போது கதவு படபடவென்று தட்டப்பட்டது.  அவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னே போய் கதவைத் திறந்தாள்.
    அவள் கணவன் ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தாள்.  அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.
    “எவ்வளவு நேரமா கதவைத் தட்டிக்கிட்டு இருக்கேன்.   உள்ள என்ன புடுங்கிக்கிட்டா இருக்கஎன்று அவளை இடித்துத் தள்ளியபடி உள்ளே சென்றான்.
    அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.  மின்னல் கீற்று போல ஒரு புன்னகை தோன்றி மறைந்து சென்றது.
    இத்துடன் இந்தக் கதை முடிந்து விடுகிறது.  அவளிடம் அவள் தனக்குப் பல்வலி என்ற சொல்லாமல் புன்னகை மூலம் சொல்லப் பார்க்கிறாள்.  அந்தப் புன்னகையும் ஒரு நொடியில் போய் விடுகிறது.
    மனித உறவுகளைப் பற்றி நுணுக்கமாக விவரிக்கப்படுகிறது இந்தக் கதையில். சாரதா கதவைத் திறக்காமல் ஏன் அவசரப்படாமலிருந்தாள்..  ஒரு சமயம் அவள் கணவன்தான் வரப்போகிறான் என்று ஊகித்திருந்தாளா? அவனும் தாமதமாகக் கதவைத் திறக்கிறாளென்று கோபமாக அவளைத் திட்டிவிட்டு உள்ளே நுழைகிறான்.
    சா கந்தசாமியால் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை இது.     

    
    
      
    
    
    
    
    
   

Series Navigationமரணத்தின் நிழல்புதுப்புது சகுனிகள்…