ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.

Spread the love

ருத்ரா இ பரமசிவன்

நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
இது பீரா?பிராந்தியா?
எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து.
நான் கொஞ்சநேரம்
இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள்
என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன்.
அநியாயங்களை நியாயம் என்று
விற்றுக்கொண்டிருக்கும் இந்த‌
சமுதாய”ஷலக்கின்”கையில்
எப்போதும் ஒரு தராசும் கத்தியும்
ஆடிக்கொண்டிருக்கிறது!
வலுத்தவனின் ரத்தம் கசியும்
கொடூர கோரைப்பற்கள்
இங்கே நிழல் பரப்பிக்கொண்டிருக்கிறது.
அதன் கீழ்
எத்தனை ஆரவாரங்கள் நெரிசல்கள்.
அந்த கோரப்பல்லே
இவர்கள் வழி பாட்டில்…
இவர்கள் சள சளப்பு பேச்சுகளில்…
இவர்கள் வாழ்க்கை ஓட்டங்களில்…
ஏன் இது இவர்களின் “புரிதல்” பரிமாணங்களில்
விழவில்லை.
டிவிக்களில்… 4ஜி கைபேசிகளில்…
அதன் காமிராவின் அசிங்கப்பார்வையின்
ஏதோ சில கோணங்களில்…
இவர்கள் எதைத்தேடுகிறார்கள்?
மனிதனை மனிதன் செய்யும்
மௌனமான கசாப்புகள்
ஏன் இந்த மனத்திரைகளில்
அழுத்தமான பிம்பங்களாக பதியப்படவில்லை?
கொத்து கொத்தாய் கொலைகள்
சிற்றினங்களை
பேரினம் அப்படியே பிரியாணி பண்ணி சாப்பிடும்
அக்கிரமம் அநியாயம்…
அவை கலர் கலராய்
ஊடகங்களில் வாந்தியெடுக்கப்பட்ட போதும்
மனம் மரத்துப்போனவர்களாய்
சாலைகள் தோறும் ஈசல்கள் அப்பி அப்பி செல்வது போல்
எங்கே இவர்களின் பயணம்….இலக்கு?
“போதும்..போதும்
உன் புலம்பல்களையே
போதையாக்கி..
இப்படியும் ஒரு பாசாங்கா?”
திடீரென்று கோபம் முறுக்கேறுகிறது.
கண்ணாடிக்கிண்ணம்
உடைந்து தூள் தூள் ஆகிறது!
அந்த ரத்தச்சிதிலங்கள்
சிலந்திப்பூச்சி வலையாய்…
என் காரின் முகப்புக்கண்ணாடியில்!
எதுவும் எனக்குள் இன்னும்
அடங்கவே இல்லை.
அதற்குள் அந்த “டமார்”.
ஒரு விபத்து நிகழ்ந்த‌
அந்த பிரம்ம முகூர்த்தத்தில்
ரெண்டு கடவுள்கள் மண்டையில்
தேங்காய் உடைத்துக்கொண்டனர் போலும்!
சிவப்புச் சகதியாய்
அந்த சிதறு தேங்காய்கள்.
இந்தக்குப்பையைக்கொண்டு
என்ன செய்யப்போகிறார்கள்?
காவலர்கள் சாக்பீஸில் வரைந்த‌
வட்டத்துள் கிடந்தேன்.
ஈக்களை நான் மொய்த்துக்கொண்டு!

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – பிரபஞ்சம் எத்தனை வேகமாக விரிகிறது என்பதற்குப் பேரொளி மின்மினிகள் [Quasars] விடை தருகின்றன