ஒரு சொல்

Spread the love

என் கவிதைகளின் விதையாக

ஒரு சொல்

சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு

சாம்பலாகாமல் திரும்பியது

ஒரு சொல்

என் தூக்கம் தின்று உயிரை மென்று

உதிர்ந்த நட்சத்திரமாய்

வந்து உட்கார்ந்தது

ஒரு சொல்

நிலவின் கரைகளைக்

கழுவிவிட்டு வந்தது

ஒரு சொல்

கடலின் ஆழத்தோடு

கதைபேசி மீண்டது

ஒரு சொல்

மேகத்துண்டாக

வானவில்லோடு வந்தது

ஒரு சொல்

ஆவியாகி மீண்டு

மழையாக இறங்கி ‘நலம்’ கேட்டது

ஒரு சொல்

வானத்தின் முகட்டில்

இளைப்பாறி வந்தது.

ஒரு சொல்

கானல்நீரைத் தொடர்ந்து

தாகித்து வெந்தது

ஒரு சொல்

நதியோடு நடந்து ஒதுங்கி

கடலைக் காணாமலே முடிந்தது.

ஒரு சொல்

நூலறுந்த பட்டமாய்

காணாமலே போனது

ஒரு சொல்

என் தோலை ஓலையாக்கி

எழுதிவிட்டுப் போனது

ஒரு சொல்

என் வியர்வையை

உதிரத்தை

கண்ணீரை

மையாகக் கேட்டது

ஒரு சொல்

என்னைத் திரியாக்கி எரித்து

உருகி ஓடவைத்து

ஒளியைத் தந்தது

அமீதாம்மாள்

Series Navigationவேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்மூட்டம்