ஒரு தவறான வாயில் வழியாக …

 

கூடையில் சுமந்து சென்ற

சொற்களைக்

கொட்டிக் கவிழ்த்தான் அவன்

 

தீயின் தகிப்புடனான

அவள் எதிர்வினையின் வீச்சில்

அடிக்கடி சிறைப்பட்டு

மீள இயலாமல் திணறினான்

 

அவன் அறியாமை

நைந்து நைந்து

இருள்

இழை இழையாக

அவனைவிட்டு விலகியது

 

திராவகம் வீசப்பட்ட

பெண் முகம் போல

அவன் முகம்

சிதைந்து கிடந்தது

 

பிரவேசம் வெகு எளிமையாகவும்

வெளியேறுதல் அவனுக்கு

உயிர் வாதையாகவும் இருந்தது

 

இருளோடு நுழைந்து

சுயத்தின் கசுடுகள் உதிர உதிர

ஒளி பெற்றுத் திரும்பினான்

 

அவன் வாசிப்பு அனுபவங்கள்

ஒரு தவறான வாயில் வழிப்

பிரவேசத்தால்

அவனுக்கு உதவவேயில்லை

இந்த முதுமையிலும் கூட …

————————————–

Series Navigationஎனது ஜோசியர் அனுபவங்கள்பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!