ஒற்றைத் தலைவலி

Spread the love

ஒற்றைத் தலைவலி என்பது கண் , வயிறு பிரச்னையுடன் அடிக்கடி ஏற்படும் தலைவலியாகும்.மன உளைச்சல் காரணமாக உண்டாகும் தலைவலியும் ( tension headache ) ஒற்றைத் தலைவலியும் ஒரே மாதிரி உள்ளதால் இரண்டுக்கும் வித்தியாசம் காண்பதில் குழப்பம் உண்டாகலாம்.மக்கள் தொகையில் 10 சத விகிதத்தினருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

ஒற்றைத் தலைவலி எப்படி உண்டாகிறது என்பது சரிவர தெரியவில்லை.ஆனால் மரபு வழியாக சில குடும்பங்களில் இது உண்டாவது தெரிய வருகிறது.

விண் விண் என்று வலிக்கும் ஒற்றைத் தலைவலி இரத்தக் குழாய்கள் விரிவடைவதாலும் வீக்கம் காரணமாகவும் உண்டாவதாகக் கருதப்படுகிறது.இதனால் அருகிலுள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு வலி உணர்வை உண்டு பண்ணுவதாக நம்பப்படுகிறது.இரத்தக் குழாய்களை தூண்டக் கூடிய நைட்ரிக் ஆக்ஸ்சைட் ( nitric oxide ) இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.வலி துவங்குமுன் 5 – ஹைட்ராக்சிறிப்டமின் ( 5 -hydroxytryptamine ) எனும் அமிலம் இரத்தத்தில் அதிகரித்து, வலி வந்ததும் குறைகிறது.

கைகால்களில் துடிப்பு , பேசமுடியாமல் போவது மற்றும் உடல் பலவீனம் போன்றவை மூலையில் பாதிப்பால் உண்டாகலாம்.

குறிப்பிட்ட காரணத்தினால்தான் வலி உண்டாகும் என்பதில்லை.ஆனால் ஒருசில காரணங்கள் வலியை உண்டு பண்ணலாம் என்று தெரிகிறது.

* சிலருக்கு ஓய்வாக இருக்கும் நேரத்தில் குறிப்பாக வார இறுதியில் ( weekend migraine ) வலி உண்டாகலாம்.

* சிலருக்கு சாக்லட் ( chocolate ), வெண்ணை ( cheese ) உட்கொண்டால் வலி உண்டாகிறது.

* பெண்கள் வயதுக்கு வரும் வேளையில் ஒற்றைத் தலைவலி துவங்கலாம்.

* மாதவிலக்கு வருமுன் வலி வரலாம்.

* மெனோபாஸ் எய்தும்போது உண்டாகலாம்.

* கருத்தடை ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்ளும் பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி உண்டாகலாம்.

* கர்ப்ப காலத்திலும் வலி உண்டாகலாம்.

* இரத்தக் கொதிப்பு உண்டாகும்போதும் வலி ஏற்படலாம்

ஒற்றைத் தலைவலி உண்டானால் மூளையில் பெரிய வியாதி உள்ளது என்ற பயம் தேவை இல்லை எப்போதாவது மூளையில் கட்டி இருக்க நேர்ந்தால் ஒற்றைத் தலைவலியும் சேர்ந்து வரலாம்.

தலையில் அடிபட்டதால் ஒற்றைத் தலைவலி வருவதில்லை.

ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

* வலி வருமுன் நலமாக இருப்பது

* வலி வருவதின் அறிகுறி

* தலைவலி, குமட்டல், வாந்தி.

ஒற்றைத் தலைவலி உண்டாகும் விதங்கள்

* அறிகுறியுடன் வரும் ஒற்றைத் தலைவலி – இந்த அறிகுறியை ஆரா ( aura ) என்று அழைப்பதுண்டு. இது உண்டானால் வலி வரப்போகிறது என்று நோயாளிக்குத் தெரிந்துவிடும்.இது பெரும்பாலும் கண் தொடர்புடையதாக இருக்கும்.பார்வையில் வட்டமான பகுதி தெரியாமல் போவது ( scotoma ), ஒரு பக்கம் தெரியாமல் போவது ( hemianopia ). பளிச் பளிச் என்று மின்னுவது ( teichopsia ), வரி வரியான கோடுகள் ஓடுவது ( fortification spectra ) போன்றவவை சில உதாரணங்கள்.

தற்காலிகமாக பேசமுடியாமல் போவது ( aphasia ) ஏற்படலாம்.

ஒரு பக்க கைகால்களில் துடிப்பும், மதமதப்பும், ( tingling ) உண்டாகி பலமின்றி போகலாம்.

குமட்டல் ( nausea ) உண்டாகும்.

இதுபோன்ற அறிகுறிகள் 15 நிமடங்கள் முதல் 1 மணி நேரம் தொடரும். அதன்பின் கடுமையான தலைவலி உண்டாகும்.இந்த வலி தலையை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியில் உண்டாகும். அல்லது ஒரு பகுதியில் ஆரம்பித்து மறு பகுதிக்கு பரவும்.குமட்டல் அதிகரித்து வாந்தி வரும்.

நோயாளிக்கு அதிக எரிச்சல் உண்டாகும்.இருண்ட அறையில் இருப்பதை விரும்புவார்.

இது போன்று சில மணி நேரங்கள் தலைவலி நீடித்த பின்பு வலி நின்று விடும். அப்போது நிறைய சிறுநீர் வெளியேறும்.

* அறிகுறி இல்லாத ஒற்றைத் தலைவலி.- இதுவே பெரும்பாலோருக்கு வரும் வகை.இதில் கண் தொடர்புடைய அறிகுறிகள் வருவதில்லை. குமட்டலும் பலமின்மையும் தோன்றலாம்.விட்டு விட்டு வலிக்கலாம்.

இவை தவிர பக்கவாத ஒற்றைத் தலைவலி ( hemiparetic migraine ), கண் நரம்பு ஒற்றைத் தலை வலி ( ophthalmoplegic migraine ) முக நரம்பு ஒற்றைத் தலைவலி ( facioplegic migraine ) என ஒற்றைத் தலைவலி ரகங்களும் உள்ளன.

ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை

முதலில் இது பற்றி விளக்கி இதனால் ஆபத்து இல்லை என்று கூறி நோயாளியை அமைதி படுத்த வேண்டும். கருத்தடை மாத்திரைகள் உட்கொண்டால் அதை நிறுத்தவோ அல்லது வேறு பெயர் கொண்ட ( different brand ) மாத்திரையை உட்கொள்ளலாம்.

பேரசிட்டமால் ( Paracetamol ) ,பான்ஸ்டான் ( Ponstan ) ஆஸ்பிரின் ( Aspirin ) , புருபென் ( Brufen ) போன்ற வலி குறைக்கும் மாத்திரைகள் பயன்படுத்தலாம்.

திரிப்டேன் ( tryptan ) வகை மருந்துகள் இரத்தக் குழாய்களை சுருக்கமுறச் செய்வதின் மூலம் வலியைக் குறைக்கின்றன.

கேபெர்காட் ( Cafergot ) மாத்திரையும் பயன் அளிக்கும்.

சிலருக்கு புரோப்புரோநோலால் ( Propronolol ) , அமிட்ரிப்டிலில் ( Amitriptyline ) போன்ற மருந்துகள் சாப்பிட நேரலாம்.

ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பரபரப்பு கொள்ளாமல் அமைதியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நல்லது. இரவில் போதுமான உறக்கம் வேண்டும். வலி வந்ததும் அமைதியான இருண்ட அறையில் ஓய்வெடுக்க வேண்டும்.

( முடிந்தது )

Series Navigationலெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமைஇப்படியாய்க் கழியும் கோடைகள்