சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32

This entry is part 13 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

நல்ல வெய்யில். ராஜ கஹத்தின் மூங்கில் வனத்திலிருந்து ஜேதாவனம் செல்வது பழகிய பாதை தான். எந்தப் பாதையாய் இருந்தாலும் புத்தரின் நடையில் சீரான வேகம் இருக்கும். ஆனால் இப்போதோ புத்தர் பல இடங்களில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்து நடக்கிறார். சீடர்களால் மேலே செல்வதா அல்லது நின்று நின்று செல்வதா என்று முடிவெடுக்க இயலவில்லை. ஆனந்தன் சைகை காட்டி அவர்களைப் போகச் சொன்னார். புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்து மௌனமாயிருந்தார். ஆனால் தியானத்தில் இல்லை.

கண்ணுக்கு எட்டும் தூரத்தில் மற்றொரு பாறையில் அமர்ந்து ஆனந்தன் புத்தரையே நோக்கியிருந்தார்.

தொடங்கிய காலம் போலவே இன்றும் தாமே பிட்சை எடுத்து உண்கிறார். தம் குடிலை சுத்தம் செய்வதோ துணிகளைத் துவைப்பதோ எதற்குமே யார் உதவியையும் எடுத்துக் கொள்ளாமல் ஏன் சிரமப் பட வேண்டும்? சீடரோ பொது மக்களோ யார் காண வந்தாலும் தடையின்றி சந்திக்கிறார். தியானம் என்று அமரும் நேரம் தவிர அவருக்கு ஓய்வே இருப்பதில்லை. நடை தளர்ந்து விட்டது. சுவடிகளைப் படிப்பதில் சிரமம் இருக்கிறது. குளிர் நாட்களில் குடிலின் கதவை மூட மறந்து விடுகிறார். புத்தர் குளிரில் நடுங்கிய பிறகு ஆனந்தன் தாமே சென்று அவர் மூடி அறையின் உஷ்ணம் அதிகரிக்கும் வரை புத்தருக்கு எவ்வளவு வாட்டம்? ஞானமே வடிவான இவர் இந்த அளவுக்கு ஏன் தன்னை வருத்திக் கொள்ள வேண்டும்?

“தாங்கள் அனைவருடனும் சேர்ந்து நடந்து வர வேண்டுமென்பதில்லை.ஒரே இடத்தில் கூட இருந்து விடலாம். ஓய்வு இல்லாமல் உங்கள் உடல் தளர்ந்து விடுகிறது”

“இதைச் சொல்லவா இவ்வளவு நேரம் யோசித்தாய் ஆனந்தா?”

“இல்லை புத்த தேவரே. சில நாட்களாகவே உங்களுக்கு ஒன்றைத் தெரியப்படுத்த எண்ணினேன். அந்த துக்க செய்தியைக் கேட்டு என் மனம் சமாதானம் ஆகவே இல்லை. உங்களிடம் சொல்லுமளவு மனம் சமனப்படவே இத்தனை நாள் ஆனது” அது என்ன என்பது போல ஆனந்தனின் கண்களை புத்தர் ஊடுருவிப் பார்த்தார்.

“பிம்பிசாரர் கொல்லப்பட்டு விட்டார் புத்ததேவரே. அவரது மகன் அஜாதசத்ருவின் ஆணைப்படி அவரைக் காவலர்கள் கொன்று விட்டார்கள்” ஆனந்தன் குரல் விம்மி கண்ணீர் பெருக்கெடுத்தது.

எவ்வளவு நேரம் புத்தர் மௌனமாக இருந்தார் என்று ஆனந்தனால் அவதானிக்க முடியவில்லை. இருவரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

புத்தர் எழுந்து தளர்ந்த நடையைத் தொடர்ந்தார். சில நிமிடங்கள் கழித்து ” பிம்பிசாரர் தமது முடிவை முன்பே யூகித்திருந்தார்”

‘எப்படி சொல்கிறீர்கள் புத்தரே?”

“அங்க தேசத்துக்கு அஜாதசத்ருவை மன்னராக்கிய போதே புத்தர் என்னிடம் குறிப்பிட்டார். அப்போதும் அவர் அஜாதசத்ருவை குறை கூறவில்லை. தனது பல திருமணங்கள் வழியாக மகதத்தை விஸ்தரித்தது தவறு என்று அவர் வருந்தினார்”

“உண்மையில் அது காரணமே இல்லை புத்தபிரானே. தேவதத்தன் அஜாத சத்ருவின் மனதை நஞ்சாக்கி விட்டார்”

“இருக்கலாம் ஆனந்தா. ஆசை என்னும் தீ மனதைக் கருக்கும் போதெல்லாம் சமநிலை இழக்க ஏதோ ஒரு காரணம் அமைகிறது. பிம்பிஸாரர் தம் இறுதிக்குள் பௌத்தம் தழைக்க விரும்பினார். வரலாறு தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்”

“மகதத்தில் அவருக்கு இணையான மரியாதை பெற்றவர் தாங்கள் அல்லவா புத்தரே!

“இந்த புத்தன் என்பவன் அழியக கூடியவன் ஆனந்தா. அழியாது மனித நேயம் எல்லா மனங்களிலும் ஆழ வேரூன்ற வேண்டும்”

அன்றும் மறுநாளும் புத்தர் உபவாசம் இருந்தார். ஆனந்தனால் அதைத் தாங்க முடியவில்லை. புத்தர் போலக் கடுமையான உபவாசம் தானும் இருந்தால், அவரிடம் பேச நினைப்பவற்றைப் பேச இயலாமலேயே போய் விடும் என்றே ஆனந்தன் நினைத்தார்.

மூன்றாம் நாள் காலை, பிறருடன் சேர்ந்து பிட்சை எடுக்க புத்தரும் கிளம்பினார். ஆனந்தன் அவரது கால்களைப் பற்றி “தாங்கள் இன்று எங்கள் பிட்சையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

புத்தர் பதில் ஏதும் பேசாமல் திரும்பிக் குடிலுக்குள் சென்று விட்டார். பகல் முழுதும் யாரேனும் அவரைப் பார்க்க வந்தபடியே இருந்தார்கள். மாலையில் பலத்த மழை துவங்கிய போது அதிர்ஷ்டவசமாக ஆனந்தன் புத்தருடன் குடிலினுள் இருந்தார். மழையின் சாரல் தாரை தாரையாகக் குடிலின் பல இடங்களில் கொட்டியது. ஆனந்தன் குடிலின் வெளியே வெறித்துப் பார்த்தபடி இருந்தார். மழை தன் இயல்பான இரைச்சலும் அதிர்வுமாக விழுந்து கொண்டிருந்தது.

“பிம்பிசாரரின் மரணம் உன்னை மிகவும் பாதித்திருக்கிறது ஆனந்தா”

ஆனந்தன் மௌனமாயிருந்தார்.

“நாம் மகதத்தின் நடப்புகளில் தலையிடுவதில்லை. ராஜாங்க விஷயங்களில் குடும்பத்துக்கு வெளியே இருந்து யார் தலையிட்டும் பயனில்லை என்பது உனக்குத் தெரியாதா? நாம் அவரைக் காக்கும் நிலையில் இருந்தும் காக்காமல் விட்டு விட்டோம் என்று நினைக்கிறாயா?”

“தங்களைக் காக்கும் கடமையிலிருந்து நாங்கள் தவறுகிறோமோ என்று சங்கத்தின் மூத்த பிட்சுக்கள் அஞ்சுகிறோம் புத்த தேவரே”

“என்ன் சொல்ல வருகிறாய் ஆனந்தா? இது என்ன விபரீத பயம்?”

“அஜாத சத்ருவையோ தேவதத்தனையோ தங்களால் புரிந்து கொள்ள முடியாது புத்த தேவரே. அவர்களது அடுத்த இலக்குத் தாங்களாகவே இருக்க முடியும்”

“ஏன் ஆனந்தா? தர்மத்தைப் பரப்பும் நம்மால் என்ன இடையூறு அவர்களுக்கு? ஏன் உனக்கு இந்தக் கற்பனை?”

“நீங்கள் மகா ஞானி புத்தரே. ஆனால் தேவதத்தனை ஏனோ எப்போதுமே குறைத்தே எடை போடுகிறீர்கள்”

“இல்லை ஆனந்தா. பரம் பொருள் என்னை அழைக்கும் காலம் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அப்படியே அவர் திட்டமிட்டு என்னைக் கொன்றாலும் அவர் ஒரு கருவியே”

“எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டீர்கள் புத்த தேவரே. ” ஆனந்தனின் உதடு துடித்துக் குரல் நடுங்கிக் கண்ணீர் பெருக்கெடுத்தது. “நான் உயிரோடு இருக்கும் வரை உம்மை நிழல் போல் காப்பேன். என்னைக் காவலாளி என்னும் கருவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று புத்தரின் பாதம் பணிந்தார்.

“நீ என்ன தான் சொல்ல வருகிறாய் ஆனந்தா? ”

“நான் இனி உங்களுடனேயே இருந்து உங்களுக்குப் பணிவிடை செய்வேன். உங்களின் பாதுகாவலனாகவும் இருப்பேன்”

புத்தர் பதில் ஏதும் பேசவில்லை. மழை ஓய்ந்தது. சிறிய நீர்த் திவலைகள் வாயிற் கூரையிலிருந்து சொட்டிக் கொண்டிருந்தன. தும்பிகள் பறக்கத் துவங்கின.

‘என் அன்பை நிராகரிக்கத் தங்கள் தெய்வீக இதயத்தால் இயலாது. ஆம் என்று ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?”

“சரி உன் இஷ்டம்” என்றார் புத்தர்.

“சில சிறிய விண்ணப்பங்களுடன் உங்களுக்கு சேவை செய்வேன் தேவரே”

“என்ன அவை?”

“முதலாவதானது தங்களுக்கு என அன்புடன் அளிக்கப் படும் உடைகளைத் தாங்கள் எனக்குத் தரக் கூடாது. தாங்களே பயன் படுத்திக் கொள்ள வேண்டும்”

“இரண்டாவது தங்களுக்கு என வழங்கப் படும் பிட்சை உணவை எனக்கு வழங்கக் கூடாது”

புத்தர் பதிலேதும் சொல்லாமல் புன்னகையுடன் கேட்டபடி இருந்தார். “உங்கள் ஒப்புதலைக் கூறாமல் புன்னகைகிறீர்களே புத்த தேவா?”

“முடித்து விட்டாயா? இன்னும் கொஞ்சம் இருக்கிறதா ஆனந்தா?”

“இன்னும் கொஞ்சம் இருக்கிறது புத்தபிரானே”

“முடித்து விட்டாயா? இன்னும் இருக்கிறதா ஆனந்தா?”

“இன்னும் கொஞ்சம் இருக்கிறது புத்த பிரானே”

“சொல்லி முடித்து விடு முழுமையாக ஆனந்தா”

“மூன்றாவது தங்களுக்கு என ஒரு குடிலோ அல்லது வனமோ தயாரானால் அதை எனக்குத் தரக்கூடாது. ஏதேனும் ஒரு வீட்டிலோ இடத்திலோ உங்கள் போதனையைக் கேட்க விருந்து ஏற்பாடு செய்திருந்தால் அங்கே என்னை அழைக்கக் கூடாது”

“இத்தனையும் ‘கூடாது…கூடாது ‘ என்று எதிர்மறையாக இருக்கிறதே .. நேர்மறையாக எதுவுமே இல்லையா ஆனந்தா?”

“உண்டு புத்தரே. என்னை விருந்துக்கு அழைத்தால் உங்களை அங்கே நான் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். வெகு தூரத்திலிருந்து மக்கள் வந்தால அவர்களை உங்களிடம் அழைத்து வர அனுமதி வேண்டும்”

“முடிந்து விட்டதா ஆனந்தா?”

“இன்னும் ஒன்றே ஒன்று உண்டு புத்த தேவரே”

“சொல் ஆனந்தா”

“தாங்கள் உபதேசம் செய்யும் போது ஏதோ காரணத்தால் என்னால் கேட்க முடியாமல் போயிருந்தால் நான் வந்த பின்பு அதை எனக்கு மட்டுமே என மறுபடி நிகழ்த்த வேண்டும்”

புத்தர் “உன் அன்புக்கு நான் கட்டுப்பட்டவன் ஆனந்தா. இவை எதையும் மறுத்துச் சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை” என்றார்.

ஜேதாவனத்துக்குச் செல்ல வேண்டிய காலம் மழைக் காலம். சிடர்கள் அனைவரும் மகதத்தின் பல பகுதிகளுக்கு செல்ல முடிவெடுத்திருந்தனர். புத்தரும் ஆனந்தனும் மழை நாளில் வெய்யில் தென்பட்ட ஒரு இடை நாளில் ஜேதா வனம் நோக்கி நடந்தனர்.

‘தேவதத்தன் சங்கத்துக்கு வருவதே இல்லை புத்த தேவரே”

“கட்டாயப் படுத்தியோ அல்லது ஒரு சட்டம் போலவோ ஒருவர் சங்கத்துக்கு வருவது சாத்தியமா? அதையும் விடு. துறவியாக இருப்பது சாத்தியமா?”

“அனேகமாக இதற்கான விடை எல்லோருக்குமே தெரிந்தது தான் புத்தர் பிரானே. ஆனால் தேவதத்தன் ஏன் இங்கே வர வேண்டும்? ஏன் எங்களுடன் வந்து சங்கத்தில் இணைய வேண்டும்?”

“துறவு என்னும் எண்ணத்துடன் சங்கத்துக்கு வந்த அவர் பின்னாளில் அஜாத சத்ருவின் நட்பினால் அரசியல் விஷயங்களில் ஈடுபட்டு பிறழ்ந்திருக்கலாம் இல்லையா?”

“இந்த அளவா?”

“ஒருவரின் மனமானது அதிகாரம், காமம், உடைமைப் பற்று இவற்றில் ஈடுபடும் போது அதற்கு அளவோ எல்லைக் கோடோ உண்டா ஆனந்தா?”

“தேவதத்தனுக்கே இந்த நிலை என்றால் சாதாரண ஜனங்களுக்கு நல்வழி எப்படிக் கிட்டும் தவசீலரே?”

“திருவிழாவில் குழந்தை கூட்ட நெரிசலில் என்ன செய்யும் ஆனந்தா?”

“காணாமற் போய் விடாமல் இருக்கத் தாயின் கரத்தை உறுதியாகப் பற்றும்”

“அதே போல தர்மத்தை உறுதியாகப் பற்றிக் கொள்வதே ஒரே வழி. வேறு வழியே இல்லை ஆனந்தா”

ஒரு அடர்ந்த காட்டைத் தாண்டினால் தான் ஜேதாவனம் போக இயலும். வனத்தில் ஆனந்தனின் உடைகள் முட்களில் சிக்கின. கூழாங்கற்கள் இடறிச் சரிந்தன. ஆனால் புத்தருக்கோ அந்தப் பாதை மிகவும் பரிச்சயமானது போல இயல்பாக லாகவமாக முன்னேறிக் கொண்டிருந்தார். மெல்லிய, கரடான முனகல் ஒன்று கேட்டது. “இது ஒரு மானின் குரல்” என்றார் புத்தர்.

இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தனர். தென்படவில்லை. ஆனந்தன் என்ன செய்வது என்று அறியாது நின்ற போது புத்தர் நெருக்கி வளர்ந்திருந்த செடிகளை விலக்கி முனகல் வந்த திசையில் பார்த்தார். நீண்ட கோரைப் புற்களின் நடுவே பெரிய இடைவெளி தெரிந்தது. இருவரும் அந்த இடத்தை நெருங்கினர். கயிறு போல முறுக்கிச் சுற்றப் பட்ட கோரைப் புற்கள் ஒரு மானின் பின்னங்கால்களுள் ஒன்றை இறுக்கிப் பிணைத்திருந்தன.

“புல்லில் மாட்டிக் கொண்டது மான்”

“இல்லை ஆனந்தா. இது அதைப் பிடிக்க வைத்த பொறி . மான் துள்ளாத போது சமமாக அழுத்தமின்றிப் பாதம் பதிக்கும். பின் அதிகம் காலை உயர்த்தாமல் நகரும். நெகிழ்ந்த முடிச்சுப் போட்ட நீண்ட வளையமான கோரைப் புல் கயிறு புல்லோடு புல்லாக இருக்கும். அது காலைத் தூக்காமல் முன்னேறும் போது அதை அப்படியே சுருக்கிப் பிடித்து இறுக்கி விடும் முடிச்சு”

மான் திமிறித் திமிறி மீண்டும் மீண்டும் புற்களின் மீது சரிந்து எழ இயலாமல் தடுமாறி விழுந்து கொண்டே இருந்தது. அதன் கண்கள் அச்சத்தில் மருகின.

புள்ளி மான். புத்தர் குனிந்து அதன் காலை விடுவிக்க முயன்ற போது, அதன் வயிற்றுப் புறத் தோல் சுருங்கி விரிந்து சிலிர்த்தது. கட்டை எடுத்து விட்ட போது , முதலில் நொண்டியபடி எழுந்த மான், ஒரு சில கணங்களில் புற்களைத் தாண்டித் துள்ளி ஓடியது. அதைத் தொட்டுச் சென்றது ஒரு அம்பு. மான் அம்பைக் கண்டதும் இன்னும் விரைவாக ஓடி மறைந்தது.

மூச்சிரைக்க ஒரு வேடுவன் ஓடி வந்தான். “மரத்தின் மேலிருந்து நான் பார்த்த போது மான் பொறியில் சிக்கியிருந்தது. யார் அதை விடுவித்தது?”

“நான் தான்”

“துறவி என்றால் தவத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வேட்டை என் தொழில். என் ஜீவனம். அதைப் பறித்த உம்மை வெட்டிச் சாய்ப்பேன்.” கூரிய மூங்கிலால் செய்த ஆயுதம் ஒரு அடி நீளத்துக்கு அதன் முனை ஓரு கத்திக்கு இணையாகக் கூர்மையாயிருந்தது. அதை புத்தர் மீது ஓங்கினான். ஆனந்தன் குறுக்கே சென்று நின்றார் “அவர் புத்தர் . ஞானி”

“நான் வேடுவன். வேட்டையையும் எதிரியையும் கொல்வது என் உரிமை” ஒரு கையால் ஆனந்தனை ஓங்கித் தள்ளி புத்தரின் முகத்தருகே அந்த மூங்கிற் கத்தியை உயர்த்தினான். “அவரை விடு. என்னைக் கொல்” என்று கதறியபடியே எழுந்தார் ஆனந்தன். அந்தப் பதட்டம் வேடுவனை ஒரு கணம் நிறுத்தியது.

“நீ மௌனமாயிரு ஆனந்தா. வேடுவனே என்னால் உன்னிடம் சண்டையிட்டு உன்னை வீழ்த்த முடியுமா?”

“முடியாது”

“தெரிந்தும் ஏன் அந்த மானை விடுவித்தேன்? சொல்”

‘இது ஒரு கேள்வியா? உமது சாவு உம்மை நெருங்கி விட்டது. அது தான் என் வேட்டையில் குறுக்கே வந்தீர்கள்”

“இது சரியான பதிலா வேடுவனே? யோசித்துப் பார். நீ என்னக் கொல்லும் ஆபத்து இருந்தும் ஏன் செய்தேன்? சொல்”

சில கணங்கள் மௌனமாயிருந்த வேடுவன் ‘ உம்மைக் கொல்லா விட்டாலும் காயப் படுத்துவேன். பேச்சுக் கொடுத்து என்னை திசை திருப்பாதீர் என்று புத்தரை மீண்டும் நெருங்கினான்.

எந்தச் சலமும் இல்லாமல் நின்ற புத்தர் “என்னைக் குத்து. அதே சமயம் பதில் சொல். ஏன் நான் அந்த மானை விடுவித்தேன்?”

வேடுவன் கை நடுங்கியது “துறவியே நீரே சொல்லும்”

‘அந்த மானின் உயிர் வாழும் உரிமை உன் வேட்டையாடும் உரிமைக்கு இணையானது. நான் முன்பின் அறியாத அந்த மானையும், உன்னையும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதரையும் உயிரினங்களையும் நேசிக்கிறேன். அந்த அன்பு என் உடலுக்குள் இல்லை. என் ஆன்மாவில் இருக்கிறது. அந்த அன்பு என்னும் செய்தி சத்தியமானது என்பதாலேயே உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்த உடல் உன் கையால் இன்று அழியா விட்டாலும் ஒரு நாள் அழியும். அதன் அழிவு பற்றி நான் அஞ்சுவதே இல்லை. ”

எத்தனையோ நகரத்து மனிதர்கள், வனவாசிகள், விலங்குகள், பிற வனத்து வேடுவர்கள் – இவர்களைத் தன் ஆயுதத்தின் முன் நடுங்கும் விழிகளோடு கண்டவன் அவன். அளப்பறிய வீரமும் உறுதியும் தெளிவும் நிறைந்த புத்தரின் விழிகள் அவனை ஊடுருவின. “நீர் தேவன். நீர் சத்தியவான்” என்று அவர் காலில் விழுந்து “என்னை மன்னியும்” என்றான்.

புத்தர் அவன் தோள் பற்றி அவனை எழுப்பிய போது அவன் விழிகள் ஈரமாயிருந்தன.

‘உன் பெயரென்ன வேடுவனே?”

“அங்குலிமால்”

Series Navigationதீவுகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *