ஓரிரவில்

கு. அழகர்சாமி

இருள் ஏற்கனவே உறங்கிக் கொண்டிருக்கிறது

என் அறையில்.

நிலவுக்கு நிலவன்றி

ஆதரவின்றி அலைகிறது.

எதிர் வீடு பூட்டியே

கிடக்கிறது.

ஆஸ்பத்திரியில் இருக்கிற எதிர்வீட்டுச் சிறுமி  பிழைத்து

வீடு திரும்பக் காத்திருக்கிறது அவளின் நிழல் வாசலில்.

வழி தெரியாமல் அல்லாடியிருந்த அணிலொன்று தப்பி ஓடுகிறது

இருளின் வாசலைத் திறந்து.

கட்டிப் போட்ட காவல்நாயின் குரைப்பில்

கடிபடும் நிலவு.

திரியும் தெருநாயின் ஊளையில்

திகிலுறும் தாரகைகள்.

எம் மரம் காத்திருக்கும்

இன்னும் அடையாமல் இருள் கிழித்துப் பறக்கும் ஒரு காகத்திற்கு?

ஏன் பழைய புகைப்படத்தில் இருப்பவனைப் போல்

என்னை இடுங்கிப் பார்க்கிறது  இந்த இரவு?

கு. அழகர்சாமி

Series Navigation2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்