ஓர் இறக்கை காகம்

Spread the love

முட்டை விரிந்து வெளிவரும் போதே
ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது
அக்காகக் குஞ்சுக்கு … சக முட்டைகள் விரிந்து
அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க
இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து எதுவும் புரியாமல்
மறுபக்கம் பார்த்தது .. சிறகு இருக்கும் இடத்தில்
வெறுமொரு சிறு முளை மட்டுமே அதற்கு..
பறக்கத் துவங்கிய குஞ்சுகள் கண்டு
ஒற்றை சிறகினை ஓங்கி வீசி எம்பிப் பார்த்தது ..
முடியாது போக கூட்டுக்குள்ளே முடங்கிப் போனது..
தாய்க் காகம் அதற்கு கொண்டு கொடுத்தது

சக காகங்கள் சொல்லும் ஊர் கதைகள்
கேட்டு ஆசை ஊற்றெடுக்க
ஒருநாள்
கூட்டிலிருந்தது தாவிக் குதித்து தரைக்கு வந்தது..
மிகத் துரித நடையது தானாய் பழகி
அடிமரப் பொந்தொன்றில் தனக்கானக்
கூட்டை தானே அமைத்தது ..

காலை முதல் மாலை வரை
நடந்து நடந்தே இரை தேடித் திரிய
ஊர்மக்கள் கவனம் அதன்மேல் திரும்பி
ஒவ்வொரு வீடும் அன்பாய் அதற்கு உணவுகள்
கொடுக்க …. பறக்கும் காகங்கள் பொறாமையில்
எரிந்தன… நடந்தே திரியும் காகத்தை ஒழிக்க
திட்டங்கள் தீட்ட கூட்டங்கள் போட்டன …அவற்றால்
ஒன்றும் செய்ய முடியாமல்ப் போக
எதனையும் பொருட்படுத்தாது
நடந்து நடந்தே வாழ்ந்து முடித்து
போய்ச் சேர்ந்தது ஓர் இறக்கைக் காகம் ..

பறக்கும் காகங்கள் சாதாரணமாய்ப் போக
நடக்கும் காகத்தை ஊர் தேடி அலைந்தது
அது மரணித்த பின்பும் பரம்பரை பரம்பரையாய்
கதை வழி இன்னும் வாழ்கிறது மனதுள்….

– பத்மநாபபுரம் அரவிந்தன் –

Series Navigationஞானோதயம்சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்