“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….

 

அம்மா
உனக்கு ஒரு பரிசு வாங்க‌
கடை கடையாய்
ஏறி இறங்கினேன்.
என்ன வாங்குவது?

இறுதியாய்
கிரிஸ்டலில்
இதயம் வாங்கினேன்.
உள்ளே
பச்சை நரம்புகளில்
சிவப்புக்கடல்.
அந்த‌
உன் கருப்பையை
ஈரம் சொட்ட சொட்ட‌
என் கைப்பையில்
நான் திணித்துக்கொண்டேன்.

அந்த‌ ப‌த்துமாத‌ இருட்டுக்குள்
சூரிய‌ப்பிழ‌ம்பாய்
நான் உருப்பிடிக்க‌
நீ உன்னை
உலைக்க‌ள‌மாய்
காய்ச்சிக்கிட‌ந்த‌தை
எந்த‌ மெம‌ரி சிப்பில்
இட்டு வைக்க‌ முடியும்?
ம‌ல‌ட்டு டிஜிட‌ல் க‌ர்ப்பப்பையை
ம‌டிப்பொறியாய்
சும‌ந்து சும‌ந்து
ப‌ன்னாட்டுக‌ம்பெனியின்
ப‌ண‌ங்காட்டு க்யூபிகிள்க‌ளில்
வியூக‌ம் அமைத்துக்கிட‌க்கும்
வித்தைக‌ளில்
உன் ம‌க‌ள்
இந்த‌ உல‌க‌த்தையே
பாப்கார்னாய் கொறித்து
கொழித்து வாழ்கிறாள்.

அந்த ப‌தினைந்தாயிர‌ம் ரூபாய் கிரிஸ்ட‌ல்
அழ‌கான‌ ப‌ரிசு தான்.
என் கைப்பை
குலுங்கி குலுங்கி
வீடு நோக்கி வ‌ந்த‌து.

வ‌ரும் வ‌ழியில்
ஒரு பிளாட்பார‌த்தில்
ஒரு ந‌லிந்த‌ தாய்
தோளில்
துணித்தொட்டிலில்
சுருண்டுகிட‌க்கும்
குழ‌ந்தையை சும‌ந்துகொண்டு
வியாபார‌ம் செய்து கொண்டிருந்தாள்.
“அம்மா
இந்த‌ பொம்மையை வாங்கிக்கொள்ளுங்க‌ள்”
ஓலைக்கிலுகிலுப்பை.
ஓலைக்கிளிக‌ள்.
ஓலையில் கொண்டைச்சேவ‌ல்க‌ள்
அம்மா..அம்மா
ஐந்து ரூபாய்க்கு ரெண்டு
வாங்கிக்கொள்ளுங்க‌ள்..”

குழ‌ந்தையோ
அப்போது தான்
அரையும் குறையுமாய்
அவள் மார்பை
ச‌ப்பிப்பார்த்து ஏமாந்து
ப‌சி ம‌ய‌க்க‌த்தில்
க‌ண்மூடிக்கிட‌ந்த‌து..
“இந்த‌ ம‌ர‌ப்பாய்ச்சியையாவ‌து..
வாங்கிக்கொள்ளுங்க‌ள்
மூன்று ரூபாய் தான்…”

என்னால்
அவ‌ளைக்க‌ட‌ந்து போக‌முடிய‌வில்லை.
சிறுவ‌ய‌தில்
அம்மா வாங்கிக்கொடுத்த‌
அந்த‌ ஓலைக்கிளி
எழுப்பிய
கீச்சு மொழியின்
சி சி ப்ள‌ஸும்
ஊப்ஸும்
இப்போது தான் புரிந்த‌து.
பிர‌ச‌வ‌ வ‌லியில்
என் அம்மா குழ‌றிய‌
பைன‌ரி ஒலிப்பு அது..
“என் க‌ண்ணே
என் க‌ண்ணே”

அடுத்த‌ க‌ண‌ம்
அந்த‌ அம்மாள்
கையில் உள்ள‌
ஓலை உருவ‌ங்க‌ளை
எல்லாம்
அள்ளிக்கொண்டேன்
என் அம்மாவுக்கு.
கைப்பையில் இருந்து
ஆயிர‌ம் ரூபாய்க்க‌ட்டை
அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய்
அவ‌ள் கையில் திணித்து விட்டு
ந‌ட‌ந்து கொண்டே இருந்தேன்
“அம்மா
சில்ல‌றை இல்லையே..”
அவ‌ள் குர‌ல் என் காதுக‌ளில்
விழ‌வில்லை.

அவ‌ள் ஒரு தாய்.
அந்த‌ துணிச்சுருணையில் நான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=================================================ருத்ரா

Series Navigationமட்டக்களப்பில் வைத்துகொக்குகள் பூக்கும் மரம்