“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….

This entry is part 20 of 29 in the series 12 மே 2013

 

அம்மா
உனக்கு ஒரு பரிசு வாங்க‌
கடை கடையாய்
ஏறி இறங்கினேன்.
என்ன வாங்குவது?

இறுதியாய்
கிரிஸ்டலில்
இதயம் வாங்கினேன்.
உள்ளே
பச்சை நரம்புகளில்
சிவப்புக்கடல்.
அந்த‌
உன் கருப்பையை
ஈரம் சொட்ட சொட்ட‌
என் கைப்பையில்
நான் திணித்துக்கொண்டேன்.

அந்த‌ ப‌த்துமாத‌ இருட்டுக்குள்
சூரிய‌ப்பிழ‌ம்பாய்
நான் உருப்பிடிக்க‌
நீ உன்னை
உலைக்க‌ள‌மாய்
காய்ச்சிக்கிட‌ந்த‌தை
எந்த‌ மெம‌ரி சிப்பில்
இட்டு வைக்க‌ முடியும்?
ம‌ல‌ட்டு டிஜிட‌ல் க‌ர்ப்பப்பையை
ம‌டிப்பொறியாய்
சும‌ந்து சும‌ந்து
ப‌ன்னாட்டுக‌ம்பெனியின்
ப‌ண‌ங்காட்டு க்யூபிகிள்க‌ளில்
வியூக‌ம் அமைத்துக்கிட‌க்கும்
வித்தைக‌ளில்
உன் ம‌க‌ள்
இந்த‌ உல‌க‌த்தையே
பாப்கார்னாய் கொறித்து
கொழித்து வாழ்கிறாள்.

அந்த ப‌தினைந்தாயிர‌ம் ரூபாய் கிரிஸ்ட‌ல்
அழ‌கான‌ ப‌ரிசு தான்.
என் கைப்பை
குலுங்கி குலுங்கி
வீடு நோக்கி வ‌ந்த‌து.

வ‌ரும் வ‌ழியில்
ஒரு பிளாட்பார‌த்தில்
ஒரு ந‌லிந்த‌ தாய்
தோளில்
துணித்தொட்டிலில்
சுருண்டுகிட‌க்கும்
குழ‌ந்தையை சும‌ந்துகொண்டு
வியாபார‌ம் செய்து கொண்டிருந்தாள்.
“அம்மா
இந்த‌ பொம்மையை வாங்கிக்கொள்ளுங்க‌ள்”
ஓலைக்கிலுகிலுப்பை.
ஓலைக்கிளிக‌ள்.
ஓலையில் கொண்டைச்சேவ‌ல்க‌ள்
அம்மா..அம்மா
ஐந்து ரூபாய்க்கு ரெண்டு
வாங்கிக்கொள்ளுங்க‌ள்..”

குழ‌ந்தையோ
அப்போது தான்
அரையும் குறையுமாய்
அவள் மார்பை
ச‌ப்பிப்பார்த்து ஏமாந்து
ப‌சி ம‌ய‌க்க‌த்தில்
க‌ண்மூடிக்கிட‌ந்த‌து..
“இந்த‌ ம‌ர‌ப்பாய்ச்சியையாவ‌து..
வாங்கிக்கொள்ளுங்க‌ள்
மூன்று ரூபாய் தான்…”

என்னால்
அவ‌ளைக்க‌ட‌ந்து போக‌முடிய‌வில்லை.
சிறுவ‌ய‌தில்
அம்மா வாங்கிக்கொடுத்த‌
அந்த‌ ஓலைக்கிளி
எழுப்பிய
கீச்சு மொழியின்
சி சி ப்ள‌ஸும்
ஊப்ஸும்
இப்போது தான் புரிந்த‌து.
பிர‌ச‌வ‌ வ‌லியில்
என் அம்மா குழ‌றிய‌
பைன‌ரி ஒலிப்பு அது..
“என் க‌ண்ணே
என் க‌ண்ணே”

அடுத்த‌ க‌ண‌ம்
அந்த‌ அம்மாள்
கையில் உள்ள‌
ஓலை உருவ‌ங்க‌ளை
எல்லாம்
அள்ளிக்கொண்டேன்
என் அம்மாவுக்கு.
கைப்பையில் இருந்து
ஆயிர‌ம் ரூபாய்க்க‌ட்டை
அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய்
அவ‌ள் கையில் திணித்து விட்டு
ந‌ட‌ந்து கொண்டே இருந்தேன்
“அம்மா
சில்ல‌றை இல்லையே..”
அவ‌ள் குர‌ல் என் காதுக‌ளில்
விழ‌வில்லை.

அவ‌ள் ஒரு தாய்.
அந்த‌ துணிச்சுருணையில் நான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=================================================ருத்ரா

Series Navigationமட்டக்களப்பில் வைத்துகொக்குகள் பூக்கும் மரம்

6 Comments

  1. Avatar sankaran

    பழைய தமிழ் சினிமா பார்த்தது போலிருந்தது கவிதையைப் படித்த பின்பு.

  2. Avatar e.paramasivan ruthraa

    உண்மை தான்.
    சினிமாத்தனமானது தான்
    பிரசவம்.
    முகத்துக்கு வேண்டுமானால்
    அரிதாரம் பூசலாம்.
    அந்த வலி
    கொடூரமான சினிமா.
    அதற்கு இந்தக்கவிதைகளின்
    “கட் அவுட்டு”கள்
    முட்டு கொடுக்க முடியாது.
    காமாட்சி அம்மன் கோவில்
    பிரசாதத்தை
    கண்களில் ஒற்றிக்கொள்வது கூட‌
    சினிமாத்தனம் தான்.
    ஸ்டைல் மன்னன்
    சிகரெட்டை உதடுகளில் சுருட்டி
    சிகரம் ஏறியபோதும்
    அவருக்கு ஒரு
    “அன்னை ஒரு ஆலயம்”
    சினிமா வேண்டியிருந்தது.
    இன்று “எந்திர”மனிதன்
    தன் சிவப்பு அணுக்களைக்கூட‌
    பூலியன் அல்ஜீப்ராவாய்
    ஆக்கிக்கொண்டவன்.
    சினிமாவின் அகர முதல‌
    உயிர் எழுத்து மெய் எழுத்து
    எல்லாம் பயணித்தது அன்று.
    இன்று
    ஆனா ஆவன்னா..க்குப்பிறகு
    “ஐ லவ் யூ”டா…தான்.
    காதல் ரசம் பூசாத‌
    எழுத்துக்களை
    ஈக்க‌ள் கூட‌ மொய்ப்ப‌தில்லை.

    அன்பு ந‌ண்ப‌ர் ச‌ங்க‌ர‌ன் அவ‌ர்க‌ளே
    உங்க‌ள் கூர்மையான‌ விம‌ரிச‌ன‌மே
    இக்க‌விதையின் வெற்றி.
    ந‌ன்றி.

    அன்புட‌ன் ருத்ரா

  3. “அந்த‌ ப‌த்துமாத‌ இருட்டுக்குள் சூரிய‌ப்பிழ‌ம்பாய் நான் உருப்பிடிக்க‌ நீ உன்னை உலைக்க‌ள‌மாய் காய்ச்சிக்
    கிட‌ந்த‌தை எந்த‌ மெம‌ரி சிப்பில் இட்டு வைக்க‌ முடியும்?” என்ற ருத்ராவின் வரிகள் புல்லரிக்கவைக்கின்றன.

  4. உங்கள் கவிதை மிகவும் அருமை கவிஞர் ருத்ரா.

    …. தேமொழி

  5. Avatar e.paramasivan ruthraa

    நன்றி கவிஞர் இராய.செல்லப்பா அவர்களே!

    நான் நெல்லைச்சீமையின் பனங்காட்டு நிழல்களிடயே ஊடிச் சென்றவன்.
    இந்த நிழல்கள் கூட சல சலக்கும்.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உதிர்ந்து கிடந்த அந்த ஓலைச்சுவடுகளில் நம் இனிய தமிழ் சிலிர்ப்பது போல்
    இந்த “ஓலைக்கிலுகிலுப்பைகளும்” ஓலைக்கிளிகளும் தாய்மையின் எட்டுத்தொகைகளையும் பத்துப்பாட்டுகளையும் இசை முழக்கும்.
    உணர்ச்சி இழைந்த உங்கள் பாராட்டுவரிகளுக்கு மிக்க நன்றி.

    அன்புடன் ருத்ரா

  6. Avatar e.paramasivan ruthraa

    அன்பு நண்பர் தேமொழி அவர்களே!

    இறைவன்
    ஆயிரம் அவதாரம் எடுத்தும்
    மூளியாய்த் தான் நின்றான்.
    அவன் “தாயுமானவன்”
    ஆகிய பிறகே
    அவன் ஒரு இறைவனைத்
    தேடி ஓடிக்கொண்டிருக்கிறான்.
    ஆம்.
    அவன் தாயைத்தேடி!

    உங்கள் மடல் கண்டு மகிழ்ச்சி.நன்றி.

    அன்புடன் ருத்ரா

Leave a Reply to e.paramasivan ruthraa Cancel reply

Your email address will not be published. Required fields are marked *