கடவுளும் கடவுளும்

 

கடவுளும் கடவுளும்
பேசிக்கொள்கிறார்கள்.

“உன்னை இருக்கிறது
என்கிறார்கள்
என்னை இல்லை
என்கிறார்கள்”

“ஆமாம் புரியவில்லை.”

“இல்லையை
இல்லை என்று சொன்னால்
இருக்கிற‌து
என்று ஆகி விடுகிற‌து”

“இருக்கிற‌தை
இல்லை என்று சொன்னால்
இல்லை என்று ஆகிவிடுகிற‌து.”

“ம‌ண்டையில்
ம‌த்து க‌டைகிற‌ “அல்ஜீப்ரா” தான்
க‌ட‌வுளால‌ஜி.

க‌ட‌வுள் புராண‌ங்க‌ளின் ப‌டி
க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள்
எங்குபார்த்தாலும்
க‌ட‌வுள்க‌ள்.

எங்கு பார்ப்ப‌து?
க‌ட‌வுளுக்கு
தீர்வு சொன்ன‌வ‌னே
ம‌னித‌ன்.

க‌ட‌வுள் போய்விட்டார்.
க‌ட‌வுள் எங்கு போனார்?
ம‌னித‌ன்
சொன்ன‌ இட‌த்துக்கு.

க‌ட‌வுள் அதிச‌ய‌ப்பட்டார்.
ம‌னித‌ன் சொல் ப‌டி
க‌ட‌வுள் போவ‌தா?
க‌ட‌வுள் கேட்டார்.

க‌ட‌வுள் ப‌தில் சொன்னார்.
க‌ட‌வுளை
வ‌ர‌ச்சொன்ன‌வ‌ன் ம‌னித‌ன்.
போக‌ச்சோன்ன‌வ‌ன் ம‌னித‌ன்.

ம‌னித‌ன் இட‌த்தில் க‌ட‌வுளை
க‌ட‌வுள் இட‌த்தில் ம‌னித‌னை
மாறி மாறி வைத்துக்கொண்டு
க‌ண்ணாடிக‌ள்
முக‌ம் பார்த்துக்கொன்ட‌ன.

ம‌னித‌ன் இட‌த்தில் ம‌னித‌னை
மனிதன்
எப்போது பார்க்க‌ப்போகின்றான்?

அர்ஜுன‌ன் கேட்டான்.
கிருஷ்ண‌ன் சொன்னான்.

நானே த‌ர்ம‌ம்
நானே அத‌ர்ம‌ம்
நானே ர‌த்த‌ம்
நானே ச‌த்த‌ம்
நானே யுத்த‌ம்
நானே ச‌மாதான‌ம்.
நானே பிம்பம்.
நானே பிம்பத்தின் பிம்பம்.

பிம்பம் பெற்ற பிம்பம்
பிர‌ம்மம் ஆனது.
மனிதம் வந்து கணிதம் சொன்னது.
பிம்ப‌த்தின் பிம்ப‌ம் இன்ஃபினிடி என்றது.
உடைத்துப்பார் சீரோ வந்திடும்.
இதுவும் கூட‌ விஸ்வ‌ரூப‌ம்.
நாத்திக‌த்தின் விஸ்வ‌ரூப‌ம்.

இருப்ப‌தை க‌ட‌வுள் என்றால்
இல்லாத‌தை “கிட‌வுள்” என‌லாமா?
“அடி கிடி”ப‌ட்டுவிட‌ப்போகிற‌து
பார்த்து போ
க‌ட‌வுள் க‌ட‌வுளிட‌ம் சொல்கிறார்.
க‌ட‌வுள் கிட‌வுள் வ‌ந்துவிட‌ப்போகிற‌ர்
சீக்கிர‌ம் போ.

கிருஷ்ண‌னிட‌ம் இந்த‌ “கி” புர‌ட்ட‌ல்க‌ள்
ப‌லிக்காது.
புர‌ட்டினாலும்
கிருஷ்ண‌ன் கிருஷ்ண‌ன் தான்.

கிருஷ்ணனின் ஸ்லோகங்களில்
நாத்திக வாடையே அதிகம்.
“என்னையே நினை” என்று சொல்வது
மனிதனாக என்னை நினை
என்று சொல்வ‌தே ஆகும்.
க‌ட‌வுள் எனும் பாம்புச்ச‌ட்டையை
உரித்துப்போட்டுவிட்டு விட்ட‌
சாண‌க்கிய‌ங்களின் ம‌னித‌ன் அவ‌ன்.

ம‌னித‌ன்
க‌ட‌வுளாக‌ அவ‌தார‌ம் எடுத்து
நான் தான் கடவுள் என்று சொல்வதை விட‌
க‌ட‌வுள் ம‌னித‌னாக‌
அவ‌தார‌ம் எடுத்து
நான் தான் ம‌னித‌ன் என்று சொல்வ‌தே
க‌ட‌வுள்க‌ள் ம‌னித‌னிட‌ம்
புராண‌ங்க‌ள் கேட்க‌வ‌ந்திருக்கிறார்க‌ள்
என்று புல‌னாகிற‌து.

க‌ட‌வுளும் க‌ட‌வுளுமாய் தான்
வ‌ந்தார்க‌ள்.
அத்வைத‌த்தை
அவ‌ர்க‌ள் புரிந்துகொண்டார்க‌ள்.

அவ‌ர்க‌ளே புரிந்து கொண்ட்டார்க‌ள்
அவ‌ர்க‌ள் யாருடைய‌ பிம்ப‌ங்க‌ள் என்று.

ம‌னித‌ அறிவு
ஒரு க‌ல்
அதோ க‌ண்ணாடி.
பிம்ப‌ங்க‌ள் நொறுங்கின‌.

க‌ல்.
ஆம் க‌ல்..
க‌ல்லும் வ‌ரை க‌ல்.

ருத்ர‌ங்க‌ள் ஜ‌பித்தாலும் ச‌ரி.
மீமாம்ச‌ங்க‌ள் ப‌டித்தாலும் ச‌ரி.
அந்த‌ க‌ல் தான் கல்.

==========================================

Series Navigationமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23நூபுர கங்கை