கண்ணதாசன்

ஒரு துளி உன்னிடத்தில்தான்

நீர்வீழ்ச்சி ஆகிறது

 

விதை தந்த மறுநொடி

கனிகள் தருகிறாய்

 

ஒரே பொருளுக்கு

இத்தனை சொற்களா?

தமிழ் திகைக்கிறது

 

ஒற்றை வரியில்

படத்தின் மொத்தக் கதை

சாத்தியமாக்கியவன் நீ

 

தமிழ்க் கடலில்

வலைகளின்றி விலாங்குகள்

உன்னால் முடிந்தது

 

உன் வானில் மட்டுமே

எப்போதும் வானவில்

 

வண்ணத்துப் பூச்சிகளுக்கு

வயிறுமுட்டத் தேன்

உன் தோட்டத்தில் மட்டுமே

 

உன் மயக்க மாயைகள்

மானுடக் காவியங்கள்

 

உன் தூபக்கால் புகைகள்

காற்றில் கவிதைகள்

 

களிமண் பொம்மைகள்

உன்கைகளில் கற்சிலைகள்

 

உன் தாளங்களுக்குத்தான்

தமிழ்பூமி சுழல்கிறது

 

வல்லினம் மெல்லினம்

இடையினம் அத்தனையும்

உன் இனம்

 

களம் கண்ட

இலக்கியங்கள் ஒரு தட்டில்

அதைவிடக் கனமாக

உன் கவிதைச்சில் மறுதட்டில்

 

காற்றின் மூலம்தான்

உன் கற்பனை மூலமோ?

 

கண்ணாடியில்

அகத்தைக் காட்டுவது

நீ மட்டுமே

 

மழைகளில்தான்

எத்தனை வகை

சாரல்

தூறல்

ஆடி மழை

கோடை மழை

ஆலங்கட்டி மழை

 

உன் கவிதை மழையின்

ஒவ்வொரு துளியிலும்

உன் உயிரின் இசை

 

கவிதை நதிகளை

இணைத்தும் கிளைத்தும்

ஓடிய ஜிவநதி நீ

 

தமிழ் விவசாயத்தின்

களத்துமேடு நீ

 

தமிழ் விருந்துகளில்

எப்போதுமே சோறாக நீ

 

தமிழ் விளக்கு

உன்னிடம் மட்டுமே

எப்போதும் பிரகாசமாய்

 

விழுதுகளுக்குச் சுமையில்லா

ஆலமரம் நீ

 

பழுதுகள் சொன்னோரையும்

பழிக்காதவன் நீ

 

சில காகங்கள் உன்னால்

குயில்களாயின

 

கற்களுக்கும் ஈரம் கசிந்த்து

உன் பாடல் கேட்டுத்தான்

 

நீ கட்டிச் சேர்த்ததும்

விட்டுச் சென்றதும்

கண்ணதாசன்

Series Navigation3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்இவளும் பெண் தான்