கதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது

ஆஷீஷ் தார்

ஜனவரி 2018இல் எட்டுவயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். எந்த மதத்தை இந்த குற்றவாளிகள் சார்ந்திருந்தாலும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும். இதனை பற்றி எந்த ஒரு நாட்டிலும் இதற்கு மேல் சொல்ல இல்லை.

இந்த குழந்தைக்கு நேர்ந்தது மிகவும் குரூரமானது. அதற்கு பின் நடந்தது அவலமானது. இந்த வழக்கு ஜம்மு காஷ்மீர் குற்றவியல் பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

இந்த காஷ்மீர் போலீஸ் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் பிடித்து சித்திரவதை செய்ய ஆரம்பித்தது. இந்த இளைஞர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை யூகிப்பதற்கு பரிசு கிடையாது. இந்த கிராமத்தினர் இந்த வழக்கை பாரபட்சமின்றி விசாரிக்க சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கை, நியாயமான விசாரணைக்காகத்தான் என்பதையும், இது விசாரணையையே நிறுத்தவேண்டும் என்று இல்லை என்பதையும் கவனியுங்கள். பெப்ருவரியில் இந்த கிராமத்தில் உள்ள இந்துக்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.

ஹிரா நகர் கிராமத்தின் பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்ததும், மாநில அரசாங்கம் இந்த பிரச்னையை கவனிக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். சில நாட்களுக்குள்ளேயே உண்ணாவிரதம் இருந்த இந்த பெண்கள் சாவின் விளிம்புக்கு சென்றுவிட்டார்கள். உடனே இவர்களை அள்ளி தூக்கி ஹிராநகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். சென்ற பெண்களுக்கு மாற்றாக இன்னும் நான்கு பெண்கள் இந்த உண்ணாவிரதத்தை எடுத்துகொண்டார்கள். பாஜக தலைவர்களோ இந்த ஹிராநகர் மக்களுக்கு ஆதரவாக உப்புசப்பின்றி அறிக்கை விட்டார்கள். ஒரு உருப்படியான விஷயத்தை இந்த பாஜக தலைவர்கள் செய்யவில்லை.

இன்னும் கொஞ்சம் விஷயத்தை பரவலாக பார்ப்போம். ஜம்மு பிரதேசத்தின் மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்ததும், தங்கள் போராட்டத்தை ஜம்முவில் வந்து தக்கும் ரோஹிங்யா மக்கள் பிரச்னையையும் எடுத்துகொண்டார்கள். காங்கிரஸ் ஆட்சி புரிந்த 8 வருடங்களில்தான் ரோஹிங்யா மக்கள் ஜம்முவில் வந்து தங்க ஆரம்பித்தார்கள் என்று கருதப்பட்டாலும், இவர்களை இங்கே முதலில் தங்க வைத்தது பரந்த மனப்பான்மை மிக்க அடல் பிஹாரி வாஜ்பாயி ஆட்சியின் போதுதான் என்றும் சொல்லப்பட்டது.

ரோஹிங்யாக்களை தொட முடியாது. இந்த ஜம்மு மக்களின் ஊமை போராட்டத்தின் நடுவே, பாகிஸ்தான் ஜம்முவின் எல்லையில் பெரும் குண்டுகளை வீச ஆரம்பித்தது. இது ரஜோரி பிரதேசத்தில் நடந்தது போலவே 40000க்கும் மேற்பட்ட மக்கள் எல்லைப்புறங்களிலிருந்து நகர்ந்து தற்காலிக பாதுகாப்பு இடங்களுக்கு வந்தார்கள்.

இந்த காலியான எல்லைப்புற கிராமங்கள் ரோஹிங்யாக்களை தங்க வைக்க உகந்த இடங்களாக ஆயின. இவ்வாறு ஜம்முவை சுற்றியிருக்கும் இந்த இடங்களில் வலுக்கட்டாயமாக மக்கள் தொகை மாற்றத்தை உருவாக்குவதற்கு எதிராக ஜம்மு வக்கீல்கள் அமைப்பு (பார் அஷோஷியேசன்) பொதுமக்களோடு இணைந்து போராட்டத்தில் இறங்கியது. அரசாங்கத்துக்கு இந்த பிரச்னை கட்டு மீறி போவது புரிந்தது. ஏனெனில் இந்த பார் அஷோஷியேசன் அறிவித்த பந்த் பெரும் வெற்றி பெற்றது.

உடனே, காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களும் உலக ஊடகங்களும் இதில் இறங்க வேண்டுமல்லவா? உடனே இந்த ஊடகங்கள் ஒரு சிறு குழந்தை கதுவா என்ற ஒரு கிராமத்தில் வன்புணர்வு செய்யப்பட்டதை திடீரென்று கண்டுபிடித்துவிட்டன. வாஷிங்டன் போஸ்ட் “ இந்து தேசியவாதிகள் வன்புணர்வுக்கு ஆதரவாக ஊர்வலம் போவது இந்தியாவை கேவலப்படுத்துகிறது” என்று செய்தி வெளியிடுகிறது. இந்து தேசியவாதிகள்?

ஒரு குரூரமான குற்றம் நடந்து மூன்று மாதங்களுக்கு பின்னால் இந்த விஷயத்தை இந்த ஊடகங்கள் கண்டுபிடிக்கின்றன. அதன் பின்னர் நடந்த அனைத்தையும், நீதிக்கான குரலையும் ஒரே நாளில் இந்த ஊடகங்கள் நசுக்குகின்றன. இதுதான் இந்திய ஊடகங்களின் பலம். இதே நேரத்தில் ரோஹிங்யா அகதிகள் தங்கும் அகதி முகாம்களில் இருக்கும் வசதிகள் தரமற்று இருக்கின்றன என்று ஒரு விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது. ரோஹிங்யாக்கள் இங்கேதான் இருக்கப்போகிறார்கள். ஏன் இல்லை? அதிதி தேவோ பவ!

 

நன்றி

ஆசிரியர் குறிப்பு:

இதில் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் படம் இருந்தது, நீக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சட்டப்படி அப்படிப்பட்ட பெண்ணின் படத்தையோ பெயரையோ வெளியிடுவது சட்டவிரோதம். குறிப்பாக 18 வயதுக்கு கீழான குழந்தைகள் பற்றிய விவரம் வெளியிடப்படக்கூடாது.  ஆனால், இந்த விஷயத்தை  இந்திய ஊடகங்கள் உதாசீனம் செய்துவருகின்றன. முக்கியமாக இந்த செய்தியில்.

Series Navigation8 கவிதைகள்