கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

 

‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி, அதில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரிய ஒரு இலக்கிய அமைப்பு என்ற வகையில் கனடா வாழ் தமிழ் மக்களும், மக்கள் அமைப்புக்களும் அதனைப் பாராட்ட வேண்டும்’ இவ்வாறு சென்ற ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 17ம் திகதி 2022 கனடாவில் இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன் புகழாரம் சூட்டினார்.
 
பைரவி நுண்கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை 29 வருடங்களுக்கு முன்னர் நிறுவிய எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்கள் உட்பட இந்த நிறுவனத்தை இதுவரை சிறப்பாகக் கொண்டு நடத்திய பலரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் விதைத்த விதை இன்று ஓரு விருட்சமாக வளர்ந்துள்ளது. எனவே தற்போது எழுத்துலகில் கால்பதித்தவர்கள் இந்த அமைப்போடு இணைந்து பணியாற்றிக் கனடிய மண்ணுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுகின்றேன்’ என்று குறிப்பிட்டார்.
 
எழுத்தாளர் இணையத்தின் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்தாய் வாழ்த்து – கனேடிய தேசியகீதம் ஆகியன செல்வி கம்சாயினி சாந்தகுமார் அவர்களால் இசைக்கப்பட்டது. வரவேற்புரையை இணையத்தின் செயலாளர், உதயன் ஆசிரியர்  ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து தலைவர் உரையை எழுத்தாளர் குரு அரவிந்தன் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவதற்கு உதவிய அத்தனை அன்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 
 
எழுத்தாளர் குரு அரவிந்தன் தொகுத்திருந்த இந்த சிறுகதைத் தொகுப்பை கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளியிட்டிருந்தது. இனிய நந்தவனம் பதிப்பகத்தின் இச்சிறுகதைத் தொகுப்பில் எஸ். நந்தகுமார், டலின் இராசசிங்கம், விமலாதேவி பரமநாதன், ஸ்ரீராம் விக்னேஷ், தேவகி கருணாகரன், கோவிந்தராயு அருண்பாண்டியன், சுமதி பாலையா, ஹரண்யா பிரசாந்தன், இராமேஸ்வரன் சோமசுந்தரம், இதயராஜா சின்னத்தம்பி, அருண்சந்தர், சுசீலா ராஜ்குமாரன், பரமேஸ்வரி இளங்கோ, மூதூர் கொகமட்ராபி, ஜெயபால் நவமணிராசையா, அண்ணத்துரை பாலு ஆகியோரது பரிசு பெற்ற 16 கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 6 எழுத்தாளர்களும், இலங்கையில் இருந்து 6 எழுத்தாளர்களும், கனடா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒவ்வொரு எழுத்தாளர்களும் பரிசு பெற்றிருந்தனர்.
 
இந்த நிகழ்வின் போது, கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறப்புக் கௌரவத்தை திருவாளர்கள் கவிஞர் சுரேஸ் அகணி, சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், மற்றும் தமிழ் நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள இலக்கியவாதி திருமதி அண்ணாமலை தமிழரசி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் ஒன்றாரியோ மாகாண சபையின் ஸ்காபுறோ தென்-மேற்கு தொகுதியின் உறுப்பினர் – என்டிபி கட்சியின் பிரதான பேச்சாளர் திருமதி டொலி பேகம் (எம்.பி.பி) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
 
விழாவில் மொன்றியால் மாநகரிலிருந்து வருகை தந்த ‘வீணைமைந்தன்’ மற்றும் யுகம் வானொலி கவிஞர் கணபதி ரவீந்திரன், தமிழ் நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள இலக்கியவாதி திருமதி அண்ணாமலை தமிழரசி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
 
சிந்தனைப் பூக்கள் பத்மநாதன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார். சிறுகதைத் தொகுதியின் முதற் பிரதியை எழுத்தாளர் இணையத்தின் தலைவர் குரு அரவிந்தன் அவர்களிடமிருந்து கனடா கவிஞர் கழகத்தின் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பல அன்பர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
 
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நிர்வாக சபை உறுப்பினர் அருட்கவி ஞானகணேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
Series Navigationரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்