கனவுகண்டேன் மனோன்மணியே…

 

குணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பின் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. இறைத்தேடலை இதற்கான உபாயமாக காணவும் இது விருப்புறுகிறது. கீர்த்தனை பாடலொன்று நாயனைத்தேடி  நாயனே நாயனே நாயனே என்றும், மாயனே மாயனே மாயனே என்றும், தூயனே தூயனே தூயனே என்றும், நேயனே நேயனே நேயனே என்றும் கத்திக் கத்திக் தொண்டை கட்டிச் செத்தேனே என தொண்டைகட்டி செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது. அகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக்கதறி அழும் என்னை கையணைத்து அருள்புரியச் கோரும்குரல் ரகுமான் கண்ணியில் ஒலிக்கிறது. ஏகப்பெருவெளியில் திசையறியா இருள்சூழ்ந்த கடலில் உட்கார கம்பம்தேடி பறந்து  தளர்ந்து போன காகமாக , தன்னை குறிப்பீட்டாக்கம் செய்கிறார். காட்டிற்குள் வேட்டைக்குச் செல்லும்போது வேட்டைநாய் இல்லாமல் வேட்டைக்காரனையே கடித்துக்குதறும் வெறிநாயை கைப்பிடித்து போகலாமாவென அப்பாடல் வரிகள் கேட்கின்றன.

வாழ்வின் இருப்பின்மீதான அதிருப்தி, கோபம், இயலாமை, அதிகாரங்கள், ஆடம்பரங்கள், சமயத்தின் பெயரிலான பேதங்கள் அனைத்தின் மீதும் தனது எதிர்க்குரல்களை பதிவுசெய்ய குணங்குடியார் தவறியதில்லை.

நிராமயக்கண்ணியில் இறையை சமயச் சூத்திரங்களுக்குள் போட்டு அடைத்துவிட முடியாத எங்கும் நிறைந்த சக்தியாக கருதும் போக்கின் விளைவாகவே வேதங்களாலும் வெளிப்படாச் சுந்தரமாஞ்சோதி எனக்கென்றோ துவங்கு நிராமயமே என்கிறார். வேதமறைபொருளை, வேதாந்த துட்கருவை, ஓதியும் உனை அறியமுடியாத நிலையையும் மந்திரத்துக்கெட்டாத மறைபொருளாகவும் இருப்பதையும் குணங்குடியார் பராபரக்கண்ணியில் காட்சிப்படுத்துகிறார். மாச்சரியங்களையும், பிளவுகளையும் பிரிவினைகளையும் உருவாக்கும் மதத்தின் பிடிகளிலிருந்துவிடுபட்டு முத்திபெற காட்சி தருவது எப்போது எனவும் வினவுகிறார். சாத்திரங்களை ஓதி தமக்குள் சண்டையிட்டு கொள்ளும் சழக்கர்களுக்கு மத்தியில்  உன்னருள் மாத்திரை போலாவது வருமாவென சந்தேகங் கொள்கிறார். மதபேதமோதி மதிகெட்டவர்க்கு எட்டாத வான்கருணை வெள்ளமென இறையை மனம் நெகிழ்ச்சியுற்று பாடுகிறார். உள்ளத்தின் உள்ளுக்குள் உறைந்திருக்கும் இறையைத் தொழுவதற்கு பள்ளியறையேன் என உள்ளுணர்வற்ற பகட்டான வழிபாட்டிற்கும், சடங்கியல்களுக்கும் அப்பால் இறையைத் தேடுகிறார்.

குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல்களில் இறைக்காதல் என்பது ஒரு படிமமாக மாறுகிறது.இறைக்காதலியின் மீது தீராத தாகமும் மோகமும் பற்றி எரிவது ஒரு விசித்திரமான அனுபவமாகும். மனோன்மணி என ஆன்மீக காதலியாக இதனை குறிப்பீடு செய்கிறார்.. இதற்கு ஏதுவாக குணங்குடியாரின் இப்பாடல்களுக்கு உரை எழுதவந்த அறிஞர்கள் இறைவனை நாயகியாகவும் தன்னை நாயகனாகவும் கருதும் ஆன்மீகக் காதலின் உச்சகட்ட மொழிதலாக இதனை கருதுகின்றனர்.

————–

Series Navigationஅக்னிப்பிரவேசம்-14101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )