கனவுகளற்ற மனிதர்கள்

மஞ்சுளா 

————————————————

காட்டு மரங்கள் 

தன்னிச்சையாய் பாடிக்கொண்டிருக்கின்றன 

புல் வெளிகளற்ற 

வலை தளங்களில் 

மேயும் ஆடுகள் 

இரவு பகலற்ற உலகத்தை 

தனதாக்கி கொண்டு 

மனித வாழ்வின் 

அர்த்தமுள்ள பொழுதுகளை பகடி செய்கின்றன 

இசைத்தட்டுக்களோடு 

பாடிப் பறந்த 

வண்ணத்து பூச்சிகளை 

காணவேயில்லை 

நிசப்த வெளியில் 

எல்லா கடவுள்களும் 

அடங்கவொண்ணா துயருடன் 

கனவுகளற்ற மனிதர்களை 

இவ்வுலகில் இருந்து 

அகற்ற வேண்டி 

தங்கள் யாகங்களை தொடங்கியிருந்தன 

பெரும் மழையாய் 

பெய்யத் தொடங்கிய 

இரவொன்றில் 

கத்தத் துவங்கிய தவளைகளின் சப்தம் 

மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டது 

செல்லிடைப் பேசிகளுடன் 

குழந்தைகள் 

சிரித்துக் கொண்டும் 

பேசிக் கொண்டும் 

இருந்தன 

எதுவுமில்லாமல் 

வானம் அமைதியாய் இருந்தது 

            –  மஞ்சுளா 

Series Navigationமுல்லைகிலுகிலுப்பைகள்