கனவு மிருகம்!

Spread the love

======ருத்ரா

கனவு மிருகம்
பிசைந்து தின்கிறது.
ரோஜாக்களை கூழாக்கி
பிஞ்சு சூரிய செம்பழத்தை
ரசமாக்கி விழுங்குகிறது.
செம்பவள இதழ் பிழியும்
காலபிழம்பு
இங்கு தாகத்தை
தீயாக்கி தகிக்கிறது.
ஏதோ ஒரு பிசாசு
தன் தொண்டைக்குழியில்
ஓலங்களைக்கூட‌
சிவப்பு மதுவாக்கி
கசிய விடுகிறது.
ஒரு சொல் தானே
சிந்தினாள் அவள்.
அதனுள்
ஓராயிரம் அடுக்குகளை
கருவறைக்கதவுகளாய்
மூடி மூடித்திறந்தன.
சிரிப்பின்
சல்லடைக்குள்
செங்கடலும் நீலக்கடலும்
நிறம் கலந்தன.
என்ன சொன்னாள் அவள்?
அந்தி வானத்தை
முறுக்கித்திருக்கி ஒரு
போதைப்பிழியலில்
போர்த்துகின்றாள்.
தேன் சுளை நாக்கில்
சுருட்டி விரிக்கும்
ஒலிக்கம்பளம்
உணர்த்திய சொல்..
காதல்
என்று இங்கு
பிக்காசோ ஓவியமாய்
பூமியை பிளந்து
பூக்கிறது.
முப்பரிமாணம் புடைத்து
குகையின் குரல் வளை
அதிர்ந்து
அவள் அழைக்கிறாள்.
எங்கிருந்தோ
முனகுகிறாள்.
அந்த மனச்சித்திரம்
எனக்கு
பீஷ்மரின் அம்புப்படுக்கை.
மயிர்க்கால் தோறும்
மயில்தோகை வருடி
கோடிப்பூச்சொரியும்
மனத்துள் ஒரு வெளி
விரித்துப் படர்கின்றாள்.

========================================
அமெரிக்கா அரிஸோனாவில் “ஆண்டிலோப்” கேன்யானில் திருகல் முருகலாய்
ஒரு மணற்பாறைச் சுருள் குகை.
=========================================
ருத்ரா இ.பரமசிவன்

Series Navigation