கற்றுக்குட்டிக் கவிதைகள்

Spread the love

 

கற்றுக்குட்டி

 

  1. கவலை

 

பாழாய்ப்போன அணில்!

நான் வியர்வை சிந்தி

நட்டு, நீரூற்றி வளர்த்து,

நாளும் பார்த்துப் பூரிக்கும்

பப்பாளி மரத்திலிருந்து

அரைப் பழமாக இருக்கும்போதே

பறித்துக் கொறித்துப் போடுகிறது.

எனக்கிரண்டு பழம் வாய்த்தால்

அது மூன்று பிடுங்கிக்கொள்கிறது.

 

நகரத்து அணில்,

பகலிலும் தைரியமாக வருகிறது.

என் கம்பும் கூச்சலும் பொருட்டில்லை.

என் வருகை கண்டால்

நிதானமாக இறங்கி,

மதிலிடுக்கில் ஓடி

அடுத்த வீட்டுக் காம்பவுண்டில் அடைக்கலம்.

 

இப்போது இரண்டு பழங்கள்

மஞ்சள் பிடித்திருக்கின்றன.

நான்கு நாட்களாக நான் காவல்.

வந்திருக்க வேண்டும்.

வரவில்லை.

 

கவலையாக இருக்கிறது.

 

 

  1. இன்றைக்குமா?

 

செல்வி சீருடை போட்டு

சப்பாத்து மாட்டி

புத்தகப் பையைச் சுமந்து

காலையிலேயே தயார்.

 

அப்பா எழுந்ததே லேட்.

 

சட்டை மாட்டி மோட்டார் சைக்கிளுக்கு

வந்து பார்த்து,”டயர்ல காத்துப் போச்சேம்மா!”

என்றார் மிகுந்த சோகத்துடன்.

 

“இரு என் ஃப்ரெண்ட கூப்பிட்றேன்” என்றார்.

 

“ரொம்ப லேட்டாயிடும்பா,

நான் நடந்தே போயிட்றேன்”

 

ஓடினாள்.

 

குறுக்கு வழியில் அல்லூரைத் தாண்டி,

குப்பை மேடுகளைக் கடந்து,

ஒற்றையடிப் பாதையில்

சில வேலிகளுக்குள் புகுந்து

புதர்கள் தாண்டி,

 

நாய்ப் பீ, கோழிப் பீ கடந்து,

நெடுஞ்சாலை அடைந்து

லாரிக்கு, காருக்கு, பஸ்ஸுக்கு

இடையில் புகுந்து

 

வரிக் குதிரை சமிக்ஞைகளை

சற்றும் மதிக்காத

மோட்டார் சைக்கிள்களுக்கு

பயந்து, நடந்து, தயங்கி, நின்று,

தாண்டிக் குதித்து

புத்தகப் பை பின்னிழுக்க,

இரண்டு கிலோமீட்டர் ஓடி,

 

கான்க்ரீட் காட்டில்

சந்தில் ஒடுங்கிய

நகரத் தமிழ்ப் பள்ளியின்

அடைத்த கேட்டைத் திறந்து கொண்டு

நடைவழியில் ஓடி

 

வியர்க்க விறுவிறுத்து

வகுப்பறையில் நுழைந்த போது,

 

“இன்றைக்கும் லேட்டா?

ஏறு பெஞ்சு மேல்” என்றார்

வகுப்பாசிரியை.

Series Navigation