கலவரக் கறைகள்

துரை ராஜூ

தினம் உடல் உழைக்கத்
திங்களைக் காலண்டரில் தொலைத்தவன்
மனம் வலி பொறுக்க
உணர்வுகளைத் தூரத்தில் வைத்தவன்

கை நீட்டிய இடமெல்லாம்
சாலையோர மரம் வளர்த்தவன்
கால் பதித்த தடமெல்லாம்
சிமெண்ட் சித்திரம் எழுப்பியவன்

இம்சை(கள்) வசை பாடக்
கல்லாய் சற்றும் அசராதவன்
பலர் ஏறி மிதிக்க
உளைக்கு மட்டுமே அஞ்சி நின்றவன்

ஏன் கலவரக் கறைகளோடு இன்று
அடி வாங்கும் கல்லானாய்?

சிராங்கூன் சாலைக் கலவரம்
உன் வாழ்க்கைச் சுவரில்
வெறும் கறை … கழுவி விடலாம் …
மூழ்கி விடாதே!

சட்டம் இங்கு கலர் பார்ப்பதில்லை
மீறினால் மலர் வைப்பதில்லை
மது உன் மீது திணிக்கப்பட்ட கருப்பு கலர்
சுடுசொல் உன்மீது வீசப்பட்ட சிகப்பு கலர்

தன் மீது விழும் ஒவ்வொரு அடியும்
கறைபடுத்தாது … சிற்பமாகப் பக்குவப்படுத்தும்
என்பது கல்லுக்குத் தெரியாது!
உனக்குமா புரியாது?

மது தரும் இன்பத்தால்
புத்தி பேதலித்துவிடாதே!
காணாதோர் வாதங்களைக் கேட்டு
மதியை அடகு வைத்து விடாதே!

வயிற்றுப் பிழைப்புக்காகக்
கயிற்றின்மேல் நடக்கும் நீ மூர்க்கமானவன் அல்ல
நிதானக்கோட்டை மீறியதால் சிறிய
நிலநடுக்கம் அவ்வளவுதான் … மறந்துவிடாதே!

முட்டவரும் முட்களையும்
முதுகில் குத்தும் நெருஞ்சிகளையும்
‘புலி’ முறத்தால் விரட்டிவிடு!
உன் திறத்தால் துரத்திவிடு!

சுடும் வார்த்தைகளால் துகிலுரிக்கும்
புல்லுருவிகளை உன் கவனத்தில் இருந்து ஒதுக்கிவிடு!
மு.வ. மொழிந்த தமிழனின் மானவுணர்வை
வானத்தில் விட்டு விடாதே!

என் தந்தை கடல் கடந்து வராதிருந்தால்
சட்டையில்லாத என் முதுகும் தோலுரிக்கப்பட்டிருக்கும்
கல்வி அரண் அணியாதிருந்தால்
சிகப்பு கலர் மையும் என்னைப் பதம் பார்த்திருக்கும்

கலவரக் கறை நீ உழைத்ததற்கான
அடையாளத்தை அழித்துவிடுமோ?
பிழைப்புத் தேடி வந்தவனா நீ
இல்லை இறப்பு தேடி வந்தவனா?

அக்கரையிலிருந்து வந்து … அடிக்கு அஞ்சாதே!
அது ஒருபோதும் உன்னைக் கறைபடுத்தாது!
விழுகின்ற ஒவ்வொரு அடியும்
பக்குவப்படுத்தும் உன்னை … மனிதச் சிற்பமாக …

2013 லிட்டில் இந்தியா கலவரத்தில் காலாவதியான தமிழகத் தொழிலாளர்களின் சுயமரியாதையைத் தூக்கி நிறுத்தும் முயற்சி.

Series Navigationஅம்பு பட்ட மான்பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”