கலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..

Spread the love

ப.ஜீவகாருண்யன்

கதைகளையெழுத ஆரம்பித்த சில காலத்திலேயே பல பரிசுகளை வென்றவராக, பல பத்திரிக்கைகளில் கதைகள் வழங்குபவராக மேற்கொள்ளும் இலக்கியப் பயணத்தில் எழுத்தாளர் கலைச்செல்வி ‘வலி’ என்ற தலைப்பில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரராக பரிணமித்திக்கிறார்.
நல்ல கதைகளுக்கு நல்ல தலைப்புகள் அவசியம் என்ற அடிப்படையில் கல்யாணியும் நிலவும், கானல் மயக்கம், நீர்வழிப்பாதை, சலனம், உடலே மனமாக, அவனும் அவளும் இடைவெளிகளும், இடைவெளியின் இருண்மைகள், கனகுவின் கனவு, கரீஷ்மா பாப்பாவும் மூணு கண்ணனும் போன்ற வித்தியாசமான, செழுமையான தலைப்புகளை இவரது கதைகள் கொண்டுள்ளன. அனைத்துக் கதைகளும் ஆற்றொழுக்கான நடையில் இயல்பாக இயங்குகின்றன. ‘கதையை எப்படி துவக்க வேண்டும்.. எப்படி வளர்க்க வேண்டும்.. எப்படி முடிக்க வேண்டும்..?’ என்னும் கேள்விகளுக்குரிய எழுத்துக்கலை கலைச்செல்விக்கு நன்கு வசப்பட்டிருக்கிறது..
தொகுப்பின் அனைத்துக் கதைகளும் ஆழ்ந்து படித்துணரத்தக்கவை. பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதமாக தொகுப்பில் ‘நீர்வழிப்பாதையை’ச் சொல்லலாமெனக் கருதுகிறேன். பாலின் விலைக்குச் சமமாக தண்ணீரும் விற்பனையாகும் விபரீத சமூகத்தில் குடிக்கார கணவனை அரசு மருத்துவமனையில் சேர்க்கும் தனலட்சுமி என்னும் ஏழைப்பெண் ‘வீட்டிலிருந்து வரும்போது ஒரு குடம் தண்ணி கொண்டு வா..’ என்று கட்டளையிடும் செவிலியருக்காக சிரமப்பட்டு குடத்தில் பிடித்து வைத்த தண்ணீரை அவளுடைய ஒற்றைச் சின்னஞ்சிறு மகன் அறியாமல் கவிழ்த்து விடுகிறான். நிதானமிழந்து கையில் கிடைத்த கழியால் மகனை அடிக்கிறாள். மகன் இறந்து விடுகிறான். தீர்ப்பினை எதிர்நோக்கி தனலட்சுமி நீதிமன்றத்தில் காத்திருக்கிறாள். தனலட்சுமி குறித்து நீதிபதியின் நினைவுப் பகிர்தலாக வளரும் கதையின் ஊடே வயிற்றுப்பாட்டுக்காக உணவகம் ஒன்றில் பாத்திரம் கழுவுபவளை உணவகத்தில் குழாய்களிலும் தம்ளர்களிலும் தண்ணீரை வீணடிப்பவர்களை, டேங்கர் லாரி தண்ணீர் கொள்ளையர்களை, ஆற்று மணல் கொள்ளையர்களைக் கண்டு மனம் குமுறுபவளாக காட்சிப்படுத்தும் வகையில் சமூகத்தின் நலன் குறித்து கதையாசிரியர் கொண்டுள்ள அக்கறை தௌ;ளெனப் புலனாகிறது.
கலைச்செல்வியின் கதைகள் நடுத்தட்டு மக்களின் புரிதலுக்கும் வாழ்தலுக்குமான இடைவெளியில் புகுந்து பேசுகிறது. கதைகளின்; பாடுப்பொருளும் நடைப்போக்கும் பிரமிக்கத்தக்கவையாக இருக்கிறது படிக்க வேண்டிய தொகுப்பு.
வெளியீடு : காவ்யா பதிப்பகம், 16, இரண்டாவது குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600 024. 044-23726882. அலைபேசி: 98404-80232

எழுத்தாளர்.ப.ஜீவகாருண்யன்.

Series Navigationபண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்பேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…