கல்யாணக் கல்லாப்பொட்டி

This entry is part 26 of 29 in the series 12 மே 2013
                               -நீச்சல்காரன்
“தம்பி கொஞ்சம் வாங்களேன்” என்று சுருள் பாக்கு போட்டுக்கொண்டே மாப்பிள்ளையோட அப்பா நம்ம கைய பிடிப்பாரு. நாமகூட மாப்பிள்ளை தோழனா கூப்பிடுறாரோனு கொஞ்சம் சட்டைக் காலரை திருத்திக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு “அங்கிள், கேமிராக்காரர் வந்துட்டாரா?” என்போம். “அதோ சாப்பிட்டுக் கொண்டிருக்காரு குமாரு! ” என்று வழிந்து கொண்டிருந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே “சாப்பிட்டையா!” என்று அக்கரைப்படுவார். நமது பதில்வரும் முன்னரே “நீ என்ன பண்றனா, ரெண்டு பெரிய சையிஸ் கோடுபோட்ட நோட்டும் ரெண்டு பேனாவும் வாங்கிட்டு வா, இந்தா.. இப்படி போனா ஒரு ரோடு வரும்ல எதுல நாலாவது கடையில் கிடைக்கும் சரியா?” என்று சிரித்துக் கொண்டே கொஞ்சம் காசை நீட்டுவார். அப்போதுதான் தெரியும் அப்லிகேஷனில் கூட ஒழுங்கா பெயரேழுதாத நாம் வரிசையா பெயர் எழுதப்போறோம்னு. அதுபோல தான் ஒரு நாள் நண்பன் கல்யாணத்துக்கு போயி அந்த நோட்டும் பேனாவும் வாங்கிய அற்புத சிகாமணியானேன்.
 
நீங்க மொய் எழுதியதுண்டா? பொய் சொல்லாதீங்க… மொய்வைக்கிறது என்னமோ பேப்பர்மேல பேப்பர் வெய்ட் வைக்கிற மாதிரி ஆனால் அந்த மொய்ய பேனாவில எழுதுறது அப்படிங்கிறது அந்த பேப்பர் வெய்ட பேப்பராக்கிற மாதிரி. இந்த மாதிரி பேப்பனு உட்கார்ந்தா பீப்பினு பணமெல்லாம் போயிரும் அட்வைசு எல்லாம் கேட்கணும்.  அதாவது போன வாரத்தில இருந்து போன நூற்றாண்டு வரை யார் யாருக்கெல்லாம் மொய் அல்லது இனாம் கொடுத்து விசேஷங்களுக்குப் போயிவந்தோமோ அவங்களை எல்லாம் அடுத்த வாரத்தில இருந்து அடுத்த நூற்றாண்டு வரை அவுங்க பிரியத்தை பிரியமாக வாங்கும் ஒரு இன்ப முயற்சிதான் இந்த மொய் வைக்கும் பழக்கம். இந்த பழக்கம் எங்கு தோன்றியது என்பதை விட எதற்கு தோன்றியது என்று காலத்தை வினாவிக் கேட்டால் இந்த மொய் அந்த விசேஷ வீட்டுக்காரவுங்களது பணச் செலவையும் மனச் செலவையும் குறைக்க அவர்களது உற்றார் உறவினர் செய்யும் பாக்கெட் செலவு.
கல்யாணத்தில பந்தி போடுவதுக்கு முந்தி மொய்வைக்க டேபிள் போடுனு சும்மாவா சொன்னாங்க, அதுலயும் கொஞ்சம் தெம்மா தெம்மா என அப்பிராணியாயிருந்தால் போதும் மொய்எழுதும் நபர் தேர்வாகிவிடுவார்.  ஏதோ சின்ன கல்யாணம் அப்படிஎன்றால் கொஞ்சம் நஞ்சம் பேர் மொய் வைப்பாங்க ஈசியா எழுதி கணக்கா முடிச்சுருலாம். இதுவே பெரிய கல்யாணம் என்றால் சும்மா ஆயிரம் வாலா பட்டாசு போல பொக்கே கொடுப்பங்கனு நினைச்சுறாதீங்க   நமக்குத் தான் புஸ்வானம் கொடுப்பாங்க. வண்டி வண்டியா யோசிச்சு வண்டியே போகாத ஊரையெல்லாம் அட்ரஸ்ல எழுதச்சொல்லுவாங்க. ஒரு கால் அந்த ஊர் பெயருக்கு ஒரு துணைக்கால் விட்டால் நம்ம காலுக்கு கியாரண்டிகிடையாது. இப்படியெல்லாம் அட்ரசை நீட்டி நெளித்து ஒரேப் பக்கத்துக்குள் எழுதுவதென்பது மூணாங்கிளாஸ் இம்போஸிஷேன் மாதிரி.  துணைக்கு ஒரு ஆள் உட்கார்ந்திருப்பரு அவரு பணம் வாங்க நம்ம எழுதனும்னு ப்ளான்யெடுத்திருப்போம் ஆனால் நம்ம ஒரு பேர எழுதிமுடிக்கிறதுக்குள்ள ஒம்பது பேர்கிட்ட மொய் வாங்கிட்டு நீங்கள் இன்னும் எழுதலையானு  லுக்கு விடுவாருபாருங்க! சாரிண்ணே.. நீங்களே எழுதுங்க நான் பணம் வாங்குறேன்னு வாங்கினா, அம்மா ஆசையா வச்ச “அம்மாவாசை”ங்கற பேர “ஆமா வசை”னு எழுதுவாரு வர்றவுங்க எல்லாம் நமக்குத் தான் வசை விட்டுட்டு போவாங்க
இடையில அவரு எழுந்திருச்சு போயி நல்லா சாப்பிட்டு வந்திருவாரு. நாம போகலாமுன்னு எழுந்திரிச்சா “பாதி மொய்யோட போகாதீங்க கணக்கு விட்டு போயிரும்னு” பக்கத்துயிலைக்கு பாயசம் வேணும்ங்கிற தோணியில சவுண்டு விடுவாரு. அவர் ரொம்ப நல்லவராம். சிலர், பெயர் எழுதி முடிச்சப்பிறகு நீங்க மாப்பிள்ளை வீடா? தெரியாம எழுதிட்டேன் நான் பொண்ணுவீடு என்று பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார். சிலர் நாசுக்கா கவரில் பணத்தைப் போட்டு பெயரெழுதி கொடுப்பாங்க, கவரின் கனத்தை வைத்து எடைபோடக்கூடாது கவருக்குள் கவர்வைத்துகலக்குவார்கள்.  இடையில சிலர் “தேங்காய் பையில்லையா?” என்பார்கள். பை கொடுத்தால்தான் மொய் செய்வார்களோ?. இன்னும் சிலர் சமையல்காரர் பேருஎன்ன என்பார்கள், சமையல்காரருக்கு சேர்த்து மொய் செய்யப்போறாரா?. சிலர் வெத்திலைத் தட்டை பார்த்துக் கொண்டே “கொழுந்து வெத்திலையே இல்லையே” என புகார்விடுவார்கள். எல்லாம் பொறுத்துக் கொள்ள அப்பிராணி தேவையன்றோ.
அருந்தலாக சிலர் மட்டும் மொய் வைப்பார்கள் என்பதற்காக கூட்டம் குறைந்ததிலிருந்து பந்தி முடியும் வரை வெறும் நோட்டோடு உட்கார்ந்திருக்கனும். அந்த நேரம் தான் கல்யாணத்துக்கு வந்த மச்சினி கும்பலும், கொளுந்தியா கும்பலும் கிளம்பும், சும்மா வாசலில் உட்காந்திருக்கிற நாம தான் ஆட்டோவும் படிச்சு விடனும். எல்லாம் முடிஞ்சு பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது வாடகைக்கு விட்ட டேபிள் காரர் வந்து “சார் எப்ப முடிப்பீங்க?” என்பார், அவரு டேபிளை எடுக்கணுமாம். “நீங்கள் மொய் வச்சதும் முடிப்பேங்க” என்று அவரிடம் நக்கலடித்தால், சிரித்துக் கொண்டே நழுவும் மனிசன் அடுத்து இந்தப் பக்கமே வரமாட்டார்.   எத்தனை முறை திரும்ப திரும்ப எண்ணிப் பார்த்தாலும் கணக்கு டேலியாகாது, எப்படியோ சிலபல ரூபாயை திருத்தி கணக்கை முடித்து மாப்பிள்ளை அப்பாவிடம் கொடுக்கும் போது “இந்த கல்யாணத்தில கலெக்ஷன் கம்மியா இருக்கே” என நம்மள பார்ப்பார். அப்ப முடிவெடுத்தது தான் பந்தி ஆரம்பிச்சு மொய்க்கு ஆள் போட்டப்பிறகு தான் எந்த கால்யாணத்துக்கும் போகணும்னு.
———X————
அன்புடன்,
நீச்சல்காரன் twitter.png
Series Navigation2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.

2 Comments

  1. Avatar Raj

    அருமையான நகைச்சுவை நீச்சல்…..

  2. Avatar Thamizhan

    Good one. Thinnai, please come up with such humorous articles often. People are fed up with Politics, Religious fanatics and IPL Bastards. Humor is selfless and priceless at the same time.

Leave a Reply to Raj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *