கல் மனிதர்கள்

( கொரியக்கதை)
பயணம் செய்பவர்கள் பயணக் களைப்பால் வழியில் சற்றே இளைப்பாறுவதுண்டல்லவா?  கொரிய நாட்டில் சயன்போ என்பவன் இது போன்று பயணம் சென்ற போது, ஒரு மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றான்.
அவன் தன்னுடைய நகரிலிருந்து, பக்கத்திலிருந்த மற்றொரு நகருக்கு முப்பது கட்டு பட்டு நூல்களை கொண்டு சேர்க்க பயணப்பட்டான்.  அது வெப்பம் மிக்க கோடையில் ஒரு நாள்.  வெகு தூர பயணத்திற்குப் பிறகு, களைப்பாற முடிவு செய்தான் சுயன்போ.
வசதியான ஒரு இடத்தைக் கண்டு பிடிக்க சுற்றும் முற்றும் பார்த்தான்.  ஒரு பெரிய மரம்.  அதனருகில் ஒரு சமாதி.  சமாதியின் இரண்டு பக்கமும் கல் மனிதர்கள்.  மரத்தின் கீழ் நல்ல நிழல் இருந்ததால், அந்த இடம் தனக்கு உகந்தது என்று முடிவு செய்து அதனருகே சென்றான்.  “நான் மேலும் பயணம் செய்யும் முன்னர், இங்கே சற்றே இளைப்பாறுவது நலம் என்று எண்ணுகிறேன்” என்று எண்ணிக் கொண்டான் சுயன்போ.
அங்கே ஒரு மணி நேரம் மட்டுமே இளைப்பாற எண்ணியவன், மிகுந்த களைப்பின் காரணமாக நன்றாக உறங்கிவிட்டான். இரவும் கழிந்தது.
முடிவில் அவன் முழிக்கும் போது, விடிந்து விட்டிருந்தது.
எழுந்த போது, சுயன்போ கொண்டு வந்த முப்பது கட்டு பட்டும் காணாமல் போயிருந்தது.  கட்டை சுமந்து வந்த கழுதை மட்டும், கல் மனிதன் அருகில் நின்றிருந்தது.
சுயன்போ மிகவும் வருந்தி அழ ஆரம்பித்தான்.  அவன் தன் நகரத்தாருக்கு என்ன பதில் சொல்வான்?  அவனை நம்பித்தானே அந்த விலையுயர்ந்த பட்டு கட்டுக்களை கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.  செய்வதறியாது தவித்தான்.
அப்போது சுயன்போ அந்த இடத்திலிருந்து புதிய கால் தடங்களைக் கண்டான்.  சற்றும் தாமதம் செய்யாமல், அதைப் பின் தொடர முடிவு செய்தான்.
அவன் ஆச்சரியப்படும் வகையில், அவன் செல்ல வேண்டிய நகரத்திற்கே அந்தக் கால் தடம் இட்டுச் சென்றது.  சுயன்போ தன்னுடைய பிரச்சினையை வழியில் கண்ட சில நகரவாசிகளிடம் கூறிப் பார்த்தான்.  ஆனால் யாரும் உதவ முன் வரவில்லை.
கடைசியில் ஒருவர் மட்டும், “சட்ட மன்றத்தில் பணி புரியும் ஒரு அறிவார்ந்தவர் இருக்கிறார். நீ அவரிடம் சென்று உன் கஷ்டத்தைச் சொல்” என்று கூறி உதவினார்.  “எங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நாங்களும் உதவிக்கு சுங்ஹ_ன்கிடம் தான் செல்வோம்.  அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று எப்போதும் தெரியும்” என்றும் கூறினார்.
சுயன்போ நேராக சுங்ஹ_ன்னிடம் சென்றான்.  அந்தப் பெரிய மனிதரிடம் தன்னுடைய முப்பது கட்டைப் பற்றி விவரமாகச் சொன்னான்.
“உனக்கு முன்னால் யாராவது போனதை நீ பார்த்தாயா? “நீ இரவில் இளைப்பாறிய சமாதியின் அருகில் யாராவது இருந்தார்களா?” என்றும் கேட்டார்.
சுயன்போ சற்றே யோசித்தான்.  “இல்லை ஐயா.. எனக்குத் தெரிந்து இரண்டு கல் மனிதர்களைத் தவிர யாரும் இல்லை..” என்றான்.
“அப்படியானால் சரி.. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாம் அந்த இரண்டு கல் மனிதர்களை கொண்டு வந்து விசாரிக்க வேண்டியது அவசியம்” என்றார்.
கல் மனிதர்களிடம் விசாரணையா? என்ன செய்கிறார்கள் என்று பார்க்க ஊரே அடுத்த நாள் சுங்ஹ_ன்னின் வீட்டிருகில் கூடியது.  ஆனால் அவரது வீட்டுக் கூடத்திற்குள் முப்பது பேர்கள் மட்டுமே இருக்க முடிந்தது.  மற்றவர்கள் வெளியில் காத்திருந்தனர்.  சுங்ஹ_ன் கொரிய சட்டத்தில் திருட்டுக் குற்றத்திற்கான விவரங்களையும், அதற்கான தண்டனையையும் கூறிய பின்னர், சுயன்போவிடம் விசாரணையை ஆரம்பித்தார்.
“சுயன்போ.. நீ உன்னுடைய முப்பது கட்டுப் பட்டை யாரோ திருடிவிட்டதாகக் கூறியுள்ளாய்.  அதற்கு ஏதேனும் சாட்சி உண்டா?” என்று கேட்டார்.
“ஆமாம்.. ஐயா.. என்னுடைய சாட்சிகள் இரு கல் மனிதர்கள் தான்..” என்றான்.
அப்போது, அந்தக் கூடத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும், அதைக் கேட்டு கொல்லென்று சிரித்தார்.
“அமைதி.. அமைதி..” என்று ஆணையிட்ட சுங்ஹ_ன், “அந்த இரண்டு கல் மனிதர்களை நாம் விசாரிக்க வேண்டும்” என்றார்.
கூடியிருந்தவர்களில் சிலர் வெளியே சென்று, அந்த இரு கல் மனிதர்களை உள்ளே கொண்டு வந்து சுங்ஹ_ன்னின் பக்கம் நிற்க வைத்தனர்.
“கல்மனிதர்களே.. இந்த மனிதனின் முப்பது கட்டை யாராவது திருடிச் சென்றதைப் பார்த்தீர்களா?” என்று இயல்பாகக் கேட்டார் சுங்ஹ_ன்.
நகரவாசிகள் அவர் கேட்டதைக் கேட்டு அமைதியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, வந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டனர். சுங்ஹ_ன் அதே கேள்வியை இரு முறை கேட்டார்.  கல் மனிதர்கள் அமைதியாக நின்றனர்.
திடீரென்று, சுங்ஹ_ன் கோபத்துடன், “அது எப்படி.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நீங்கள் நிற்கலாம்? வேடிக்கை செய்கிறீர்களா?” என்று கத்தினார்.
சுங்ஹ_ன் கல் மனிதர்களை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “நீங்கள் அந்த நாள் இரவு நடந்ததனைத்தையும் பார்த்தீர்கள் என்று நம்புகின்றேன்.  ஆனால் நீங்கள் பேசக் கூடாது என்று நிற்கிறீர்கள்.  அதற்காக உங்கள் இருவருக்கும் இருபது தடியடி கொடுக்கப்படும்” என்று மனிதர்களுக்குக் கொடுக்கும் தண்டனையை கல்மனிதர்களுக்கும் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
கூடியிருந்த கூட்டத்தில் இருவரை அழைத்து, கல்மனிதர்களை அடிக்கப் பணித்தார்.  இந்த ஆணையைக் கண்டு, அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் கூட்டத்தினர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
சுங்ஹ_ன் இந்த நகைப்பைக் கேட்டதும், குதித்தெழுந்து, “அமைதி.. அமைதி.. கல் மனிதர்களின் தண்டனையைக் கண்டு நீங்கள் எப்படிச் சிரிக்கலாம்..? நான் இந்த வழக்கை எவ்வளவு கவனத்துடன் நடத்திக் கொண்டு இருக்கிறேன்.  சிரிக்கலாமா?  அதற்கு தண்டனையாக, இன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன் இங்கு கூடியுள்ள அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டு பட்டை கொண்டு வந்தாக வேண்டும்.  அப்படிக் கொண்டு வரவில்லையென்றால், நான் கோட்டைக்குச் செய்தி அனுப்பி, அரசனை உங்கள் குடும்பத்திற்கு தண்டனை தரச் சொல்வேன்..” என்று கத்தினார்.
அவர் கத்திய கத்தல் நகரவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வாயடைக்கச் செய்தது.  அவரது அச்சுறுத்தலில் பயந்தே போனார்கள்.  நன்றாக வந்து மாட்டிக் கொண்டோமே என்று தங்களைத் தாங்களே நிந்தித்துக் கொண்டார்கள்.
அவர்கள் செல்லலாம் என்று சுங்ஹ_ன் சொன்னதுமே, விட்டால் போதும் என்று வீட்டிற்கு வெளியே வந்து ஓட்டமும் நடையுமாக எல்லோரும் நாலாப்பக்கத்திலும் ஓடி மறைந்தனர்.
சுயன்போ நகரவாசிகளின் நிலை கண்டு வருந்தினான்.  “அன்பான ஐயா.. அதற்கு அவர்கள் பொறுப்பல்லவே.. அவர்கள் எப்படி இந்த நகரத்தில் பட்டைக் கண்டு பிடிக்க முடியும்?  நான் இங்கு இரண்டு நாட்களாக இருக்கிறேன்.  இங்கு ஒரேயொரு பட்டுக் கடை தான் இருக்கிறது.  நகரவாசிகளால் பட்டைக் கொண்டு வரவே முடியாது.  அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்?” என்றான் கனிவுடன்.
சுங்ஹ_ன் புன்னகைத்து, “கவலைப்படாதே.. சுயன்போ.. அவர்கள் நீ தொலைத்த பட்டுக்கு ஈடான பட்டினை நிச்சயம் கொண்டு வருவார்கள்.  அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது..” என்று பதிலளித்தார்.
சூரியன் மறையும் நேரத்தில், நகரவாசிகள் சுங்ஹ_ன் வீட்டிற்கு வர ஆரம்பித்தார்கள்.  ஒவ்வொருவரிடமும் ஒரு பட்டுக் கட்டு இருந்தது.  சுயன்போ பட்டினை ஆராய்ந்து பார்த்து, ஆச்சரியப்பட்டு, “இந்த வகை பட்டு, எங்கள் நகரத்தில் செய்யும் பட்டைப் போன்றே இருக்கிறதே..  இதை எங்கிருந்து வாங்கினீர்கள்?” என்று கேட்டான்.
ஒருவர் முன் வந்து, “ஐயா.. நாங்கள் நம் நகரத்தில் இருக்கும் ஒரேயொரு பட்டுக் கடையைத் தவிர வேறெங்கு போக முடியும்?  நாங்கள் கடைக்காரனிடம் எங்களுக்கு முப்பது கட்டு பட்டு வேண்டும் என்று சொன்னோம்.  சொக்ஜின் தன்னால் உதவி செய்ய முடியாது என்று முதலில் சொன்னான்.  தன்னிடம் உள்ள புதிய பட்டு, தனது மகளது திருமணத்திற்காகத் தருவிக்கப்பட்டுள்ளது.  அதைத் தர முடியாத நிலையில் இருப்பதாகச் சொன்னான்.  கடைசியில் நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொண்ட பின், தர ஒப்புக் கொண்டான்” என்றார்.
“பட்டின் விலை என்ன?” என்று கேட்டார் சுங்ஹ_ன்.
“சாதாரண விலையை விட மூன்று மடங்கு விலை..” என்றார் அவர்.
“அது மிகவும் அதிகம் தான். ஆனால் உங்களால் அவ்வளவு விலை கொடுத்து இந்தப் பட்டினை எப்படி வாங்க முடிந்தது?” என்று கேட்டார் சுங்ஹ_ன்.
“எங்களால் வாங்க முடியாது தான்.  ஆனால் உங்கள் ஆணைக்கு நாங்கள் பணிய வேண்டுமே.. பட்டிற்கு பதிலாக, நாங்கள் ஒவ்வொருவரும் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு பத்து மூட்டை அரிசி தருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறோம்..” என்றார் பக்கத்திலிருந்தவர் மிகுந்த வருத்தத்துடன்.
சுங்ஹ_ன் மனம் விட்டுச் சிரித்தார்.  “ஓ.. இது இன்னும் அதிகம்.. அப்படியென்றால் யார் திருடன் என்று தெரிந்து விட்டது.  சொக்ஜின்னை இப்போதே இங்கு வரவழையுங்கள்” என்று ஆணையிட்டார்.
சுங்ஹ_ன் முன் சொக்ஜின் வந்த போது, விசாரிக்கப்பட்டான்.
பலவாறு பேசிய பின், சுயன்போ உறங்கிக் கொண்டு இருந்த போது, அவனது பட்டுக் கட்டுகளை திருடியதை சொக்ஜின் ஒத்துக் கொண்டான்.
“இதற்குத் தண்டனையாக, நீ முப்பது கட்டு பட்டை முதலில் திருப்பிக் கொடுத்து விட்டு, அதற்கான விலையையும் தர வேண்டும்.  அத்துடன்.. இந்த முப்பது நகரவாசிகளுக்கும் புதிய ஆடை ஒன்றை நல்ல பட்டைக் கொண்டு தைத்துக் கொடுக்க வேண்டும்.  இதையெல்லாம் நீ செய்யாவிட்டால், நாற்பது தடியடி கொடுக்கப்பட்டு நகரத்திலிருந்து வெளியேற்றப்படுவாய்.  நீ என்ன சொல்கிறாய்?” என்று தீர்ப்பினைக் கூறிவிட்டு சொக்ஜினை நோக்கினார்.
சொக்ஜின் தலையை தாழ்த்தி, “நான் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்..” என்றான்.
இத்துடன் நகரவாசிகளும் சுயன்போவும் அறிவார்ந்த சுங்ஹ_ன்னிற்கு நன்றியைத் தெரிவித்து, அவரது ஆழந்த அறிவைப் பாராட்டிச் சென்றனர்.
சுயன்போ தன் நகரத்திற்கு பணத்துடன் மகிழ்ச்சியுடன் திரும்பினான்.
Series Navigationசி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2மன்னிப்பு