‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.

This entry is part 13 of 32 in the series 3 பிப்ரவரி 2013

டி.கே.சி கடிதங்கள் எல்லாம் கலை அந்தஸ்து பெற்றவை. ஒரே ஹாஸ்யமும், உல்லாசமும், உணர்ச்சியுமாயிருக்கும். படிக்கத் தெவிட்டாத இலக்கிய ரத்தினங்கள் அவை. டி.கே.சி கடிதம் எழுதுவதைக் கைக்கொண்ட பின்தான் கடித இலக்கியம் என்ற ஒன்று தமிழ்நாட்டில் பிறந்தது.

ஒவ்வொரு கடிதமும் நேருக்கு நேர் நின்று பேசும். உடல் நிலை மோசமாயிருப்பது கேட்டு வருந்தி எழுதி இருந்தேன். அடுத்த தபாலில் கீழ்க்கண்ட பதில் வந்தது: “என் உடலைப் பற்றித் தாங்கள் கவலை கொள்வதாகத் தெரிகிறது. அது வேண்டாம். உடம்பு சரியாகத்தான் இருக்கிறது. இன்ஸுலின் (Insulin) இன்ஜெக் ஷன் கிடையாது. மற்ற குத்துகளும் இல்லை. மலை ஏற முடியாது. மரம் ஏற முடியது. அவ்வளவுதான்.”

டி.கே.சி தமிழின் எளிமையைப் பார்க்கும்போது, ’அடே, நாம் கூட இப்படி எல்லாம் வெளுத்து வாங்கிவிடலாம்’ என்று தோன்றும். ஆனால், உட்கார்ந்து எழுதிப் பார்த்தால், அது நமக்குக் கைவராது என்று தெரியும். எளிய தமிழ் என்றால் வெள்ளைத் தமிழல்ல, மொட்டைத் தமிழும் அல்ல. நமக்கு எட்டாத ஆழத்திலும், தெளிவிலிமிருந்து உருவான எளிமை அது. பரிணாம நெறியை ஒட்டிப் பார்த்தால்தான் எளிமையைப் பற்றி டி.கே.சி இப்படி எல்லாம் ஏன் பிரமாதப் படுத்தினார்கள் என்று விளங்கும்.

எந்தத் துறையில் எளிமையைக் கண்டாலும் அதை டி.கே.சி அபாரமாக அனுபவித்து வந்தார்கள்.

ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். முற்றத்தில் மாப்பொடியினால் கோலம் போடப்பட்டிருதந்தது. அதைப் பார்த்து ஒரு மணி நேரம் ரஸித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் குருட்டுக் கண்ணுக்கு அவர்கள் எடுத்துச்சொன்ன பிறகுதான, கோலத்தின் அழகு தெரிய வந்தது. ஊருக்குப்போன பிறகு, ஒரு கடிதம் எழுதினார்கள். “இங்கேயும் வீடுகளில் கோலம் போடத்தான் செய்கிறார்கள. நூற்றுக்கணக்கான பொட்டுகள; நூற்றுக்கணக்கான கோடுகள். எல்லாம் சேர்ந்து ஒரே கரா புரா. அம்மாள் ரகத்தில் எளிமையும் கருத்தாழகும் சேர்ந்து கலையாய் விளங்கும். அந்தக் கலையை உணருவதற்கு மற்ற கோலங்களையும் பார்க்க வேண்டும். கம்பர் செய்யுளின் எளிமையை அனுபவிப்பதற்கு கந்தபுராணச்.செய்யுள்களையும், சீவகசிந்தாமணிச் செய்யுள்களையும் பார்க்க வேண்டும். பாரதியும் தேசிகவிநாயகம் பிள்ளையும் கவிஞர் ஆனதால் எளிமையைக் கையாண்டிருக்கிறார்கள். விஷயத்தை இப்படிச் சொல்வதை விட்டு விட்டு எல்லோருக்கும் விளங்குவதற்காக லேசாய் எழுதி இருக்கிறார்கள் என்று மாறாகச் சொல்லுகிறார்கள். கவிஞர்கள் தங்களுக்கே விளங்க வேண்டும் அல்லவா, அதற்காக எளிமையைக் கையாளுகிறார்கள் என்று சொன்னால்ப் பொருத்தமாக இருக்கும்.

“பூண்டுகள்கூட காரியத்தைச் சாதித்துக் கொளவதற்காக எளிமையைக் கையாண்டிருக்கின்றன.”

“எட்டுத்திசையிலிருந்தும், பதினாறு கோணத்திலிருந்தும் மகரந்தத் துகள்களை வண்டுகள் கொண்டு வரவேண்டும். அதற்காகப் பதினாறு இதழ்களையா விரிக்கிறது? ஐந்து இதழ் போதும் என்றுதானே வைத்துக்கொண்டது?  Radial Symmetry  ஐந்து பட்டங்களால் ஆகிவிடுகிறது. பல அடுக்குப் பூக்கள் எல்லாம் கஷ்டப்படுகிற பூக்கள் தான். கோலத்தை எளிமையுடன் போடவில்லை அவைகள்.”

இபடியாகக் கோலத்திலிருந்து கவிதைக்கும், கவிதையிலிருந்து சிருஷ்டித் தத்துவத்துகுமே டி.கே.சியின் எளிமைக் கடிதங்கள் நம்மை இழுத்துச் சென்றுவிடுகின்றன. சில்லறை விஷயங்களைப் பற்றிக் கடிதம் விளக்கிக்கொண்டிருக்கும்போதே அரிய உண்மைகள் எல்லாம், அந்த ஒளியிலே, தெளிவாகிவிடும். விஞ்ஞானம், சமயம், கடவுள தத்துவதம் – எல்லாவற்றையுமே, மத்தாப்பூ போட்டுவிடும் அந்தக் கடிதங்கள்.

தென்காசியிலிருந்து ரயிலிலே சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள. டி.கே.சியை ரயிலடியிலாவது சந்திக்கலாம் என்று போயிருந்தேன். சந்தித்து இரண்டு வார்த்தை பேசுவதற்குள், சீவில்லிப்புத்தூர் ஸ்டேஷனை விட்டு ரயில் நகண்டுவிட்டது. ஒரே ஏமாற்றம்! சென்னையிலிருந்து வந்த டி.கே.சியின் கடிதம், கீழ்கண்டவாறு ஏமாற்றதைத் தெரிவிக்கிறது: “எவ்வளவோ ஆத்திரத்தோடு, தாங்கள் வந்தீர்கள்.ஆனால், ரயிலும், காலதேவதையும் ரொம்பக் கேலி பண்ணி விட்டன. இரண்டு வார்த்தை பேசுவதற்குள் வாய்க்குருவியை (Whistle) ஊதிவிட்டான்…… வெறும் இருட்டிலிருந்து இந்த உலகத்துக்கு வருகிறோம். கண்ணைத் துடைக்கவே, பத்திருபது வருஷம் (நிமிஷந்தான்) ஆகிறது. அதைக் கொஞ்சம் பார்க்கிறோம்., இதைக் கொஞ்சம் பார்க்கிறோம். ஏதோ குருடன் தடவிப் பார்க்கிற கணக்குத்தான். ஆனால் ஒன்று தெரிகிறது, எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்கிறதே, எவ்வளவோ அறிய வேண்டி இருக்கிறதே என்பதாக, கற்றது ஒன்றும் இல்லையே என்ற திகைப்பும் ஏற்படுகிறது. அப்போது உலகை ஓட்டி சங்கை ஊதி விடுகிறான், அடடா, உலகத்தோடு ஒன்றும் பேசவில்லையே என்று தோன்றுகிறது”

இருபது வருஷங்கள் டி.கே.சியோடு பழகிய பிறகு இன்னும் எவ்வளவோ அவர்களிடம் அறிய வேண்டி இருக்கிறதே என்று பட்டது. அதற்குள்ளாக உலக ஓட்டி சங்கை ஊதிவிட்டான், டி.கே.சி தத்துவம் மறைந்துவிட்டது. திகைப்புத்தான் மிஞ்சுகிறது.

 

  • எஸ்.மகராஜன்.

1961.

Series Navigationதீர்வுஜெயாவின் விஸ்வரூபம்…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *