கவனங்களும் கவலைகளும்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 

எஸ். ஜெயஸ்ரீ

இனிமையான இசையை வெளிப்படுத்தும் தந்திக் கருவியில், ஒவ்வொரு கம்பியும் ஒவ்வொரு சுரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் கலவையின் வெளிப்பாடு அருமையான, இனிமையான இசையாகும். அதுபோல சிறுகதை, நாவல், கட்டுரை, பக்தி இலக்கியம், நவீனகவிதை, மரபுக்கவிதை, சொற்பொழிவு என ஏழுதந்திகளால் இழுத்துக்கட்டப்பட்ட இலக்கிய இசைக்கருவியைத் தன்னகத்தே கொண்டுள்ளவர் வளவ. துரையன்.

தன்னுடைய பதினெட்டு வயதிலிருந்து இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள இவர், தன்னுடைய நாற்பத்தேழாம் வயதிலிருந்து புத்தகங்கள் எழுதி வெளியிடத் தொடங்கி உள்ளார். தற்போது அறுபத்தைந்து வயது முடிவடையும் தருவாயில் அவருடைய பதினோருநூல்கள் வெளிவந்துள்ளன. அந்தவகையில் புதுக்கவிதைகள் தொகுப்பு வரிசையில் இது இரண்டாவது நூலாகும்.

அறுபத்துமூன்று கவிதைகள் அடங்கிய ‘ஒருசிறுதூறல்’ என்ற இத்தொகுப்பு, எத்தகைய சொல் விளையாட்டும் இல்லாமல், மிகஎளிமையான சொற்களால் புனையப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பாக வெளிவந்துள்ளது.

தினசரி வாழ்க்கையில் அவரவர்க்கும் கண்ணில் படுகின்ற காட்சிகள், அனுபவிக்கக் கிடைக்கின்ற தருணங்கள் எல்லாமே வளவ.துரையன் தூரிகையில் எளிமையான கவிதைகளாகின்றன. ‘இது என்னுடைய கவிதை’ என்று ஒவ்வொரு வாசகனும் உணரவைக்கின்ற அருமையான கவிதைகள்.

இத் தொகுப்பில் அடங்கி உள்ள கவிதைகளை இயற்கை, சமூகம், வெறும்கவனிப்புகள் என்று மூன்று தலைப்புகளில் பிரித்துக் கட்டிவிட முடிகிறது. வளவ. துரையனின் இயற்கை மீதான அக்கறையும், அது அழிவது பற்றிய கவலையும் சிலகவிதைகளில் வெளிப்படுகின்றன.

’அழுகை, என்ற கவிதையில் குளம் வற்றிப்போகும் வருத்தத்தைக் கவிஞர் வெளிப்படுத்துவதில் மேலும் அழகுசேர்க்கும் அடிகள்

“தனக்காக இல்லையெனினும் / கரைப்புல்லின் கடும்பசி தீர / எங்கள் ஊர்க்குளம் / அழுது கொண்டிருக்கிறது”

எனும் போது குளத்தை உயிர் பெறச் செய்கிறார் இவர். அஃறிணை எனப் பார்க்கப்படும் பொருளை உயர்திணைக்கு உயர்த்துகிறார்.

தலைப்புக் கவிதையான ‘ஒருசிறுதூறல்’ கவிதையில் மழை வரும் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்து விடுகிறது. மழையை எதிர்பார்ப்பதில் மனிதர்களைக் கொண்டு வரவில்லை அவர். புல்லும், குளமும், மிருகங்களும், பறவைகளும் நீரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. [மனிதன் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிவிடுகிறானே என்பதை மறைமுகமாய்ச் சொல்கிறார் போலும்] அவை எல்லாம் ஏமாந்து போகின்றன கவிதையின் முடிவில்.

“குருட்டுப் பிச்சைக்காரனுக்கு / விழுந்த செல்லாக்காசுபோல / ஒரு சிறுதூறலுடன் ஓடிப்போயின மேகங்கள்”

என்று முடிக்கும் உவமை அருமை.

சமூகத்தின் மீதான வருத்தம், கோபம் இவற்றை வெளிப்படுத்தும் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ‘பள்ளம்’ கவிதை ‘உலகம்சமநிலைபெறவேண்டும்’ என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது. மேடும் பள்ளமும் குறீயீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டோர் உள்ளக்குமுறல்கள் எப்போது வேண்டுமானாலும் வெடித்துக் கிளம்பலாம். அது புரியாமல் மேல்தட்டிலுள்ளோர் களித்துக் குதூகலித்து அவர்களை மேலும்மேலும் ஒடுக்குவதை ஒடுக்கப்பட்டோர் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை அழகாக வெளிப்படுத்தும் கவிதை அது.

‘அதற்குக்கூட’ கவிதை நவீனதாராளமயப் பொருளாதாரத்தைச் சாடும் விதமாகவும் இன்றைய விவசாயிகள், இந்தக் கொள்கையால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. “ஊரான்ஊரான்தோட்டத்திலே……………………” என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் அடிகளை நினைவுபடுத்தும் கவிதை இது.

“சிறகுகள்” “நெருப்பு” இரண்டு கவிதைகளும் இன்றைய சமூகப்போக்கினை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளன. ‘நெருப்பு’ கவிதையில்

“வருங்காலம் என்ன சொல்லும் / தனி ஒருவன் / போரில்லாமலேயே / இதைச் செய்தானென்று”

என்பதில் அவருடைய வருத்தம் கொப்பளிக்கிறது. பண்பாடு, கலாச்சாரம் என்ற நம் வேர்கள் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல் நவீனயுகத்திலேயே திளைக்கும் இன்றைய சமூகத்தின் மீதான வருத்தம் இது.

அங்கதச்சுவை மிகுந்த கவிதைகள் சில இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை வாசிப்போரை நகையாட வைக்கிறது. ‘வேணும்’ என்ற கவிதையை ஒரு மூதாட்டி பேசும் தொனியிலேயே எழுதியிருப்பது சிறப்பென்றால்,

“அரிசிவாங்காட்டியும் / கிரண்டர்வாங்கணும்ல” என்று முடிப்பது அக்கவிதைக்கு மேலும்சிறப்பு சேர்க்கிறது. இலவசங்களில் மகிழ்ந்துபோகும் நம்மக்களை நினைத்து அழுவதா? நம் அரசு இயந்திரங்கள் இப்படி இருக்கின்றதே என்று நொந்துகொள்வதா? என்று யோசிக்க வைக்கிறது. “மாயாஜாலம்” என்ற கவிதையில் ஓட்டுக்காக வந்து நிற்கும் அரசியல்வாதிகளை மிகுந்த நகைச்சுவை உணர்வோடு காட்டுகிறார் கவிஞர். இதெபோல ‘மின்வெட்டு’ ‘தாத்தாக்கள்’ [முதியோர்நிலைமை], காதும்கடனும் [செல்போன்பேச்சு] எனப்பல கவிதைகள் பல்சுவையுடன் இடம் பெற்றுள்ளன.

வெறும் கவனிப்புகளாகவே அமைந்துள்ள சிலகவிதைகள் சிந்திக்கவும் மனத்தைத் தொடுவதுமாக அமைந்து உள்ளன. ‘ஒரு நாயின் மரணம்’ [மரணம்]; கோயிலுக்கு வருபவர்கள் [சலனங்கள்]; வீதியில் கிடக்கும் மாத்திரைத்தாள் [எதற்கோ] எனப் பார்வையில் படும் பல விஷயங்களைக் கவிதையாக்கும் இவர் கலையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

பெண்ணின் நிலையைச் சொல்லும் ஒருகவிதை ’அசைபோடல்’; பல பெண்கள் தங்களுயைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல், குடும்பம், உறவுகள் எனச் சுருங்கிப் போகவேண்டிய கட்டாயத்தை, யதார்த்தமாக எந்த விதக் குற்றம் சாட்டும் தொனியும் இல்லாமல் முன்வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

‘மறைவாய்’ ‘எண்ணம்’ என்ற கவிதைகள் தத்துவ விசாரத்தைத் தூண்டுபவையாக உள்ளன. பல தளங்களில் சுழன்று சுழன்று சிந்திக்கத்தூண்டுவதான இத்தொகுப்பு பாராட்டுக்குரியது. வளவ. துரையன் மிகுந்த பாராட்டுக்குரியவர். சிறப்பான அட்டைப்படத்துடன் வெளியிட்ட தாரிணி பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

[ ஒரு சிறு தூறல்—கவிதைத் தொகுப்பு—வளவ. துரையன்—பக்: 72; விலை: ரூ 100; வெளியீடு : தாரிணி பதிப்பகம், 4ஏ, ரம்யா பிளாட்ஸ், 32/79 காந்தி நகர் 4 ஆவது பிரதான சாலை, அடையார், சென்னை—600 020 ]

Series Navigation

4 Comments

  1. தமிழ் இலக்கியவாதிகளின் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றுள்ள ‘திண்ணை’ இணையப் பத்திரிகையானது தொகுப்பாக்கம் மற்றும் வெளியீட்டு முறையைச் சிறிதேனும் செம்மைப்படுத்தினாலொழிய இத்தலைமுறையினரிடையே தமிழார்வம் துளிர்த்து, வளர வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இந்தக் கட்டுரையை மிகுந்த சிரமத்துடன் படித்த வாசகப் பெருமக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  2. மிக்க நன்றி. வருங்காலத்தில் வெளிவரும் கட்டுரைகளும், மற்ற படைப்புகளும் இவ்வாறே நல்ல முறையில் வெளிவரும் என்று நம்புகிறேன்.

  3. Avatar s v venugopalan

    வளவ துரையன் குறித்து வாசித்திருக்கிறேன்…அவரது கவிதை தொகுப்பு பற்றிய அறிமுகம் சிறப்பாக வந்திருக்கிறது.

    ரசனை என்பது வாசக அனுபவத்தின் அடிநாதம். அதன் பகிர்வு எழுத்தில் பிடிபடுவது அதே வேகத்தில், அதே ஆழத்தில், அதே உணர்வில், அதே குரலில் அமைந்துவிடுமானால் படைப்பாளிக்கு மிகுந்த பரவசம் கிடைக்கும். அதைவிட, அடுத்தடுத்த வாசகருக்கு தாங்களே அந்த நூலை வாசித்த உணர்வு கிளர்ந்தெழும்.

    ஜெயஸ்ரீ தாம் வாசிக்கக் கிடைத்த அதிர்வை, இன்பத்தை இங்கே வரிசைப்படுத்தி வழங்கி இருப்பது வாழ்த்துதலுக்குரியது.

    திண்ணை இணையதளத்திற்கு என் அன்பு நன்றி…

    எஸ் வி வேணுகோபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *