கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் சமூக சிந்தனைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 12 in the series 4 ஜூலை 2016

முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன்
உதவிப்பேரசிரியர் தமிழ்த்துறை
இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி)
வாணியம்பாடி.

தமிழ்க் கவிஞர்கள் வரலாற்றில் மரபுக் கவிதையில் தடம் பதித்துப் புதுக்கவிதையில் சாதனை படைத்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். கஜல் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இவருடைய கவிதைகளை உலகத்திற்கும் உலக கவிஞர்களின் கவிதைகளைத் தமிழுக்கும் அறிமுகம் செய்து வைத்தவர். கலீல் ஜிப்ரானுக்கு இணையானவர் என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பெற்றவர். ‘ஹைக்கு’ கவிதை வடிவத்தையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் சிற்பி.தம். தம் கவிதையின் வாயிலாகவும் கட்டுரையின் வாயிலாகவும் சமூகச் சிக்கல்களை யதார்த்தமாக எடுத்துரைக்கின்றார். இவர் படைப்பின் வழி சமூகச் சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கின்றது.
கற்பு பற்றிய கவிஞரின் சிந்தனை
“ஆணுக்கும் கற்புண்டு” என்னும் கட்டுரையில் கற்பு பற்றி ஒரு ஆராய்ச்சியையே நடத்தியிருக்கின்றார். தொல்காப்பியர் காலத்தில் கற்பு என்றால் “கொள்வதற்குரிய ஆண்மகனுக்கு கொள்வதற்குரிய பெண்ணைக் கொடுப்பதற்கு உரியோர் திருமணச் சடங்கு செய்துக் கொடுக்க ஏற்பது என்பதைக் கூறி அக்கற்பு காலந்தோறும் வெவ்வேறு பொருளில் கையாளப்பட்டிருப்பதையும் தம் கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தி பாராதியார், நச்சினார்க்கினியர், திருவள்ளுவர் ஆகியோரின் கருத்துக்களைக் கோடிட்டுக் காட்டி பிற்காலத்தில் கற்பு என்பது பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தைக் குறிக்கும் கலை சொல்லாக ஆக்கப்பட்டு விட்டது என்றும் “கற்பு” என்ற கல்தான் இல்லறம் என்ற கட்டிடத்தின் அடிக்கல் அக்கல் இல்லையென்றால் கட்டிடம் நிற்காது என்றும் திருமணம் புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் துரோகம் புரியாமல் இருப்பதே கற்பு. இந்த நவீன யுகத்தில் “கற்பு” என்பதற்கு இப்படித்தான் பொருள் கொள்ள முடியும். மேலும் கற்புக்கு பல்வேறு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் உண்மையான பொருள் ஒரு பெண் “இவன்தான் என் கணவன்” என்று தானே கற்பித்துகொள்வது என்பதுதான். கற்பு என்பது ஒரு பெண் தன் துணைவனைத் தேடிக்கொள்ளும் உரிமை. இந்த உரிமையைப் பழந்தமிகம் பெண்களுக்கு வழங்கியிருந்தது. அது மட்டுமல்ல அதை அறநெறி தவறாத ஒழுக்கம் என்றும் பாரட்டியது என்று “கற்பு” பற்றிய தன் சிந்தனைகளை கவிஞர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

காதல், கவர்ச்சி பற்றிய கவிஞரின் சிந்தனை
நவீன யுகம் காதலைக் கொச்சைப்படுத்தி விட்டது என்பதும் இதில் திரைப்படங்களுக்குப் பெரும் பங்குண்டு என்பதும் கவிஞரின் வாதமாக இருக்கின்றது. ‘பெண் நிலம்’ என்னும் கட்டுரையில் காதலைப்பற்றியும் இனக்கவர்ச்சிப் பற்றியும் தௌ;ளத்தெளிவாக கவிஞர் ஏடுத்தியம்புகிறார். “ஆண் பெண் இருவர்க்கிடையே ஏற்படும் ஈர்ப்பெல்லாம் காதலல்ல அது இனக்கவர்ச்சி. எந்த ஓர் ஆணும் பெண்ணும் நான்கைந்து நாள் தொடர்ந்து சந்தித்துப் பழகினால் அவர்களுக்கிடையே இனக்கவர்ச்சி உண்டாகும் இது காதலல்ல. ஆனால் இதை பெரும்பாலோர் காதல் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள். இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இனக்கவர்ச்சி பொதுவானது அது எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்டாகும். காதல் சிறப்பானது அது இருவர்க்கிடையே மட்டுமே உண்டாகும். இனக்கவர்ச்சி எப்போதும் உண்டாகும் காதல் எப்போதாவது தான் உண்டாகும். உண்டாகிறது. உடலுறவுக்குப்பின் இனக்கவர்ச்சி குறைந்து போகும் காதல் எப்போதும் குறையாது. இனக்கவர்ச்சி வன்முறையைத் தூண்டும் காதல் மெண்மையை உண்டாக்கும். இனக்கவர்ச்சி சுயநலம் காதலோ தியாகம் என்ற கவிஞரின் கூற்று காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்த்துகிறது.
பெண்ணியம் பற்றிய கவிஞரின் சிந்தனைகள் :
கவிஞர் தம் படைப்புகளில் பெண்களின் உணர்வுகளை மையப்படுத்துவதுடன் பெண்கள் பழங்காலந் தொட்டு நடந்த நிகழ்வுகளில் கௌரவப்படுத்தப்பட்டதை விட காயப்படுத்தப்பட்ட நிகழ்வுகளே அதிகம். ஒரு பெண் என்பவள் தாயாக, தாரமாக, தங்கையாக, மகளாக என்று எல்லாமுமாய் நமக்காக இருக்கின்றாள். ஆனால் நாம் அவளுக்கு என்னவாக இருந்தொம் ஏன்பதை,
“நீ எங்கள் கண்ணாக இருந்தாய்
நாம் உன் கண்ணீராக இருந்தோம்
நீ எங்கள் ஆடையாக இருந்தாய்
நாம் உன் நிர்வாணமாக இருந்தோம்
நீ எங்கள் முகவரியாய் இருந்தாய்
நாம் உன் முகத்திரையாய் இருந்தோம்.
நீ கர்ப்பக் கிரகமாய் இருந்தாய்
நாமோ உன்னைக் கழிவறை ஆக்கினோம்
எங்கள் வெற்றிக்குப் பின்னால் நீயிருந்தாய்
உன் தோல்விகளுக்குப் பின்னால் நாமிருந்தோம்”
என ‘ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற கவிதையின் வாயிலாக தம்முடைய உள்ளக் குமுறலை கவிஞர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

வரதட்சணை பற்றிய கவிஞரின் சிந்தனை
நவீன காலத்தில் வரதட்சணை என்பது பெண்களின் பிரச்சனையாக மட்டுமல்ல பெண்களைப் பெற்ற பெற்றொர்களின் பிரச்சனையாகவும் மாறியிருக்கின்றது. பெண்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் பெரும் பங்காற்றுவதாக உள்ளது. இன்றைய காலத்தில் ரொக்கங்கள் தான் திருமணத்தை நிச்சயம் செய்கின்றன. வறியவர்கள் பிச்சை கேட்பது போன்று திருமணத்திற்காக பெண் வேண்டுபவன் வரதட்சணை என்னும் பிச்சையைக் கேட்கின்றான். இன்றைய காலத்தில் திருமணம் என்னும் பெயரில் மாப்பிள்ளைகள் பெண் வீட்டாரால் வாங்கபபடுகிறார்கள். இச்சமூக அவலத்தை கவிக்கோ அவர்கள் புதிய கோணத்தில் காட்டியிருக்கிறார்.
“நீ உன்னை விற்றால் அது விபச்சாரம்
நாம் எங்களை விற்றால்
அது திருமணம் என்கிறோம்”
என்று கூறுகிறார்.
அரசியல் பற்றிய கவிஞரின் சிந்தனை :-
இன்றைய அரசியல் தலைவர்கள் தன் தலைமைப் பண்பிற்குத் தகுதி இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அரசியல் பலத்தாலும், பண பலத்தாலும் தன் வாரிசுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பதில் கவனமாக இருக்கிறார்கள். மக்கள் நலன் மீது அக்கறை உள்ளது போல் நடித்து தன்னுடைய வாரிசுகளின் மீது அக்கறை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதை
“தலைவர்கள்
பொறுப்பு மிக்கவர்கள்
செத்தாலும்
வாரிசுகளை விட்டுச் செல்கிறார்கள்
வழி நடத்துவதற்காக”
என்ற கவிதையின் வழியாக சுட்டிக்காட்டியிருக்கின்றார். இன்றைய அரசியல் தலைவர்கள் தான் உயிரோடு இருக்கும் போது மக்களுக்கும் சேவை செய்யாவிட்டாலும் தனது வாரிசுகளுக்குக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் கவனமாக உள்ளார்கள் என்பதை மேற்கண்ட கவிதை வரிகளின் வாயிலாக உணர முடிகின்றது.

மதம் பற்றிய கவிஞரின் சிந்தனை
இன்றைய நவீன யுகத்தில் நாம் குழந்தைகளுக்கு மத நல்லிணக்கத்தைப் போதிப்பதில்லை. சிறு வயது முதலே குழந்தைகளிடம் சாதிய பாகுபாடுகள் விதைக்கப்படுகின்றன. மனிதத்தை மறத்து மதத்தைப் பிடித்துக் கொண்டோம் என்பதை,

“அப்போது
மரப்பாச்சிருக்குக் கை ஒடிந்தால் கூடக்
கண்ணீர் வடித்தோம்
இப்போதோ நரபலியே
எங்கள் மத விளையாட்டாகிவிட்டது”
என்றும்,
“நமக்கிருப்பது போல்
மிருகங்களிடம் மதம் இல்லை
ஆனால் மிருகங்களின்
கள்ளம் கபடமில்லாத குணம்
நம்மிடமில்லை”
என்றும் மேற்கண்ட கவிதைகளின் வாயிலாக மனிதனையும் மதத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிக்கோ அப்துல்ரகுமான். இதுகாறும் கூறியவற்றான் கற்பு. காதல், கவர்ச்சி, பெண்ணியம், வரதட்சனை, அரசியல், மதம், பற்றிய கவிஞர் அப்துல்ரகுமானின் சிந்தனைகளை அவரின் படைப்புகளான எம்மொழி செம்மொழி, ஆலாபனை, சுட்டுவிரல் போன்ற நூல்களின் வாயிலாக அறிய முடிந்தது.

Series Navigationகவித்துவப் புள்ளிகள் – செல்வராஜ் ஜெகதீசனின் ‘சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’ –திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *