கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது

Spread the love

unnamedகவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ்க்கவிஞர்களுக்கு விருதும் பரிசும் அளித்துப் பாராட்டி வருவது பலரும் அறிந்த ஒன்று. கவிக்கோ அப்துல் ரகுமான், சி.மணி. பழமலய், கல்யாண்ஜி, தேவதேவன். வ.ஐ.ச.ஜெயபாலன், காசிஆனந்தன், இரா.மீனாட்சி, புவியரசு, பாலா, தமிழ்நாடன், நா.முத்துக்குமார் எனப்பல கவிஞர்கள் விருது பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு விருது பெறுபவர் கவிஞர் மு.மேத்தா. ‘வானம்பாடி’க்கவிஞரான மு.மேத்தா.கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதைத் தொகுப்பின்மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர்.ஊர்வலம் என்னும் தொகுப்பு தமிழக அரசின் பரிசு பெற்ற கவிதைத்தொகுப்பு.திருவிழாவில் ஒரு தெருப்பாடகன். நந்தவன நாட்கள்,வெளிச்சம் வெளியே இல்லை உள்ளிட்ட கவிதைத்தொகுப்புகள் தந்துள்ள மு.மேத்தாவிற்குச் சாகித்ய அகாடெமி விருது பெற்றுத் தந்த தொகுப்பு,ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்பதாகும். சிறுகதை, புதினம் உள்ளிட்ட படைப்பு பல படைத்துப் புகழ் பெற்ற இவர் சிறந்த திரைப்படப் பாடலாசிரியரும் கூட! ஆனந்த விகடன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவர், இந்த ஆண்டு கவிஞர் சிற்பி விருது பெறுகிறார். 30,000 ரூபாய் மதிப்புள்ள பரிசும் பாராட்டுப்பட்டயமும் இவர்க்கு வழங்கப்பெறும்.

இந்த ஆண்டு கவிஞர் சிற்பி அறக்கட்டளையின் சிறந்த கவிஞருக்கான பரிசு பெறுபவர், புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் கவிஞர் சொ.சேதுபதி.
கனவுப்பிரதேசங்களில், குடைமறந்த நாளின் மழை, வனந்தேடி அலையும் சிறுமி, சீதாயணம், சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள், உள்ளிட்ட எட்டுக் கவிதைத் தொகுப்புகளையும் இரு குழந்தைப்பாடல்கள் தொகுப்புகளையும் எழுதி உள்ளார். கவிதை நாடகங்கள், ஆய்வு நூல்கள், சிறுகதை, தொகுப்பு நூல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ள இவர், தமிழக அரசின் குறள்பீடப் பரிசு, இசைஞானி இளையராஜா விருது, பாரத ஸ்டேட் வங்கிப்பரிசு, புதுவை அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு, 15,000 ரூபாய் மதிப்புடைய பரிசு வழங்கப்பெறுகிறது. சமூக நற்பணிக்கான பி.எம்.சுப்பிரமணியம் விருது, புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பெறுகிறது. 10,000ரூபாய் மதிப்புடைய இவ்விருது பெறுபவர், பழம்பெரும் நூல்கள், இதழ்கள் முதலியவற்றைப் பாதுகாத்து ஆய்வாளர்களுக்கு அளித்துவரும் ஆவணக்காப்பாளர். ஆய்வாளர்.
இவ்விருதுகள் வழங்கும் விழா, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி, பொள்ளாச்சியில், பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையில் வழங்கப்பெறும். இவ்விழாவில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்கள்.

Series Navigationஉடலே மனமாக..வேனில்மழை . . .