கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு

Spread the love

எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்தபவன் உணவகத்தோடு இணைந்து வருடந்தோறும் வழங்கும் ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வெள்ளி 2000ம் மற்றும் சான்றிதழுடன் வெற்றியாளரை கெளவரவப்படுத்தும் இந்நிகழ்வில், சிங்கப்பூர் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம்நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர் நெப்போலியனுக்கு மலர்மாலை பொன்னாடை போர்த்தி சான்றிதழையும் பரிசினையும் வழங்கி சிற்றுரையாற்றினார். 2011, 2012, 2013ம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் வெளிவந்த கவிதை நூல்களில், போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒன்பது நூல்களில் இருந்து சிங்கப்பூர், இந்தியா, மலேசியா என மூன்று நடுவர்களின் ஒட்டுமொத்தத் தீர்ப்பாக புத்தகப் பரிசிற்கான வெற்றியை கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” பெற்றது. ஆகஸ்டு 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தலைமையுரையாற்ற, செயலாளர் திரு. சுப. அருணாசலமும், துணைச் செயலாளர் இராம. வயிரவனும் நிகழ்ச்சி நெறியாள்கை செய்ய, நடுவர்களின் பிரதிநிதியாக சிங்கப்பூர் வி. ஆர். பி. மாணிக்கம் கருத்துரையாற்ற, முனைவர் மண்னார்குடி ஜி. ராஜகோபாலன் – கவி இன்பம் எனும் சிறப்புச் சிற்றுரையாற்றினார். ஏற்புரையில்  கவிஞர் நெப்போலியன் ” விருதுகளும் அங்கீகாரமும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் பாதயாத்திரைகளின் இடையே தாகம் தீர்க்கும் தண்ணீர்ப்பந்தல்களாகவே அமைந்து உற்சாகப்படுத்தி இன்னும் செல்ல வேண்டிய நீண்ட இலக்குகளுக்கு பின்புலமாய் அமைகின்றன… விருதுகள் தலையில் ஏற்றிக்கொள்ளும் கிரீடங்களாய் இல்லாமல் இன்னமும் நல்ல படைப்புகளை வெற்றியாளனிடமிருந்து எதிர்பார்க்கும் அதட்டல்களாய் தான் பார்ப்பதாகவும்… கனடாவிலிருந்து கொண்டும், இன்ன பிற புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து கொண்டும் இன்றைக்கு தமிழ் இலக்கிய உலகினில் தவிர்க்கமுடியாத இடத்தினைப் பெற்றிருக்கும் அ. முத்துலிங்கம், சேரன் , ரஸ்மி, போன்று சிங்கப்பூர்த் தமிழ் படைப்பிலக்கியப் பாதையில் உலகளாவிய சுவடுகளைப் பதிப்பிப்பதின் பாதையிலேயே தன் இலக்கியப் படைப்பாக்க முயற்சி தொடரும் ” என்றார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும், புரவலர்களும், பேராசிரியர்களும், படைப்பாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும், பொதுமக்களும் அரங்கினை நிறைத்த வெற்றிவிழாவாய் நிகழ்வு அமைந்தது.

Series Navigation