கவிதாவின் கவிதைகள்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 3 of 21 in the series 2 ஜூன் 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

2008-ல் வெளியான ‘சந்தியாவின் முத்தம்’ கவிதைத் தொகுதியை எழுதியவர் கவிதா. எம்.ஏ., பட்டதாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இப்புத்தகம் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் கவிஞர்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதில் 34 கவிதைகள் உள்ளன. இவை காதலைப் பாடுபொருளாகக் கொண்டவை! 4 கவிதைகளுக்கு மட்டுமே தலைப்பு உள்ளது.

‘ஒளியின் நிறத்திலொரு இரவு’ என்ற கவிதை காதல் பிரிவைக் கருப்பொருளாகக் கொண்டது. இது வழக்கமான காதல் கவிதை இல்லை. புதிய ஆழமான சிந்தனை இழைகளால் நெய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பு நன்றாக உள்ளது.

ஒரு

கள்ளப் புன்னகையின் பகிர்வோ

கை கோர்த்தலோ

நிகழ்ந்து விடாதபடி கண்காணித்தக்

கொண்டிருக்கும்

இந்த இரவின் நிறம்

இப்போது அடந்த இருள்

என்ற வரிகள் மனத்தை மகிழ்விக்கின்றன. வெளிப்பாட்டில் கலை நேர்த்தி நம் முன் வைக்கப்படுகிறது.

தலைப்பு சிந்திக்க வைக்கிறது: தொனிப்பொருள் தருகிறது. ஈழத்துக் கவிஞர் அனாரின் கவிதைத் தலைப்பான ‘அறைக்கு வெளியே அலையும் உறக்கம்’ நினைவிற்கு வருகிறது. மேலும் பசுமை நிறைந்த நினைவுகள் போற்றப்படுவதாகவும் கொள்ளலாம்.

விடை பெறும்போது

உன்னிடம் சொல்லாமல்

இந்த இரவை

எடுத்து வந்தேன்

என்ற வரிகள் அனுபவம் பாதுகாக்கப் படுவதை உணர்த்துகின்றன. மனுஷ்ய புத்திரன் சாயல் கொண்ட இக்கவிதை அழகாக முடிகிறது.

………..

………..

அது வீசிக் கொண்டிருக்கிறது

என் மீது இரவுகளுக்காக

தன் ஒளியின் நிறத்தை

தலைப்புக் கவிதையான ‘சந்தியாவின் முத்தம்’ உண்மைச் சம்பவம் என்ற முத்திரை கொண்டுள்ளது. படிக்கும் பெண் ஒருத்தி வருந்தி அழுது கொண்டிருந்த தோழியின் கன்னங்கள் துடைத்து ஒரு முத்தம் தருகிறாள் என்பதுதான் கவிதைக் கரு, யதார்த்தக் கவிதை என்பதால் வெளியீட்டு முறையில் உத்தி ஏதும் இல்லை.

சந்தியா தந்த முத்தம்

அவள் வாழ்க்கையின் மீது

மூழ்கவியலாத ஒரு கப்பலைப் போல

மிதந்து கொண்டேயிருக்கிறது.

என்ற வரிகளில் காணப்படும் உவமை, கவிதைக்குக் கனம் சேர்க்கிறது.

‘தொலை தூரப் பயணத்திலிருந்து’ என்று தொடங்கும் கவிதையில் ஒரு நயமான பகுதி…

பேரன்பு தளும்பும்

உனது குரல்

அந்த ஒரு சொல்லின் மீது

ஒரு நொடி தங்கிப் போகும்

சொற்கள் எளிமையாகத்தான் இருக்கின்றன. அது உருவாக்கும் கலைப்பாங்கு ரசிக்கத் தூண்டுகிறது. காதலன் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் ஆர்வத்தைச் சொல்கிறது இக்கவிதை.

அந்தப் பேரன்பு நொடியில்

உனக்குப் பரிசளிப்பதற்காக

மலர்த்தி வைத்திருக்கிறேன்

ஒரு

நித்ய கல்யாணிப் பூவை

கவிதையின் முத்தாய்ப்பு தனிச் சோபை கொள்கிறது.

‘நீ இல்லை’ என்று தொடங்கும் கவிதையில் ‘மறக்கவே முடியவில்லை’ என்று நாம் சாதாரணமாகச் சொல்வதைக் கவிதா எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.

கண்ணீராலும் கோபத்தாலும்

வெளியேற்ற முடியாத சில

நினைவுகளை என்ன செய்வதென்று

எனக்குத்

தெரியவில்லை

இக் கவிதையின் தொடக்கத்தில் ஒருவிதமான கைப்பு மனநிலை காணப்படுகிறது. ‘பூட்டு’ என்ற சொல் குறியீடாக உணர்த்தப்படுகிறது.

‘நட்சத்திரங்களற்ற இரவில்’ கவிதை தனிமையின் இனிமை பற்றிப் பேசுகிறது.

என் தனிமை மிகப் பிரத்யேகமானது

எனது கண்ணீர்த்துளி போலவே.

அதற்கென்று ஒரு வாசமுன்டு

ஒரு மொழியும் கூட

என்பதில் கவிமனம் மொழி சார்ந்த நல்லிசைவுடன் பதிவாகியுள்ளது. ‘என்னிடம் எந்தப் புகாரும் இல்லை’ என்ற வாசகம் சுறா மீனைக் கைக்குட்டையால் மூடும் முயற்சியாகிவிட மன கனம், நம்மை நெகிழச் செய்கிறது. தனிமை போற்றுதல் ஆறுதலுக்கான கதவைத் திறக்கச் செய்கிறது.

‘நீல நிற மல்லிகை’ 99 வரிகள் கொண்ட நீள் கவிதை! பூடகத்தன்மையும் குறியீடுகளும் உள்ளன. சில இடங்களில் தரையில் கால்கள் பரவாமல் மிதக்கும் மகிழ்ச்சியான போக்குகளும் காணப்படுகின்றன.

அவை மேகங்களில் பூக்கும் போது

கணக்கற்ற உருவங்களாகவும்

தரை நோக்கி விரையும் பேரானந்தத்தில்

மழையாகவும் மாறிவிடுகின்றன.

என்ற வரிகள் கனவுத்தன்மையைக் காட்டுகின்றன. மனத்தின் அடியிலிருந்து புறப்படும் சொற்கள் ஒரு பரந்த வெளி சஞ்சாரத்தைத் தன்னுள் அடக்குகின்றன.

தொடர் படிமம் அமைந்துள்ளது.

கதவற்ற வாசல்களில்

மொழியற்ற எழுத்துக்களில்

புதிர்களற்ற விடுகதைகளில்

இனி நீ என்னைத் தேடி

சலிக்கலாம்

என்ற வரிகளில் சுய வியாபகம் தெளிவாகிறது.

உனக்கு ஒரு செய்தியைக் கூறுவேன்

அது

எனது நீல நிறத்தால் செய்யப்பட்ட மற்றொரு

பட்டுச்சிறகு

என்ற முத்தாய்ப்பு ஒரு விடியலை உறுதிப்படுத்தகிறது.

ஒரே பாடுபொருள் பற்றிப் பல கவிதைகள் எழுதப்படுவது தவறென்று சொல்ல முடியாது. கலைடாஸ்கோப்பின் ஒரு சிறு திருப்புதல், முற்றிலும் மாறுபட்ட வண்ணக் கோலத்தை முன் வைப்பதுபோல் வித்தியாசமான வெளியீட்டு முறையிலான கவிதையைத் தரும். அந்த அனுபவம்தான் கவிதாவின் கவிதைகளில் காணப்படுகிறது.

நிறைவாக, நம்பிக்கை தரும் கவிஞராக இருக்கிறார். இப்புத்தகத்திற்குக் காலச்சுவடு பரிசு கிடைத்திருப்பது சரியே!

Series Navigationசீனத் தமிழ் வானொலியின் பொன்விழாமருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *