கவிதைகள் – நித்ய சைதன்யா

Spread the love


பா.சங்கரநாராயணன்

1.
அன்றும் அவனுக்காக காத்திருக்கும்
உன்னைக் கண்டேன்
ஒன்றுமே நடக்காததைப்போல
அத்தனை அழகையும் முகத்தி்ல் தேக்கி
மலா்களின் வாசனை கிரக்க
மாலை மயங்கும் எழிலுடன்
திண்ணையில் அமா்ந்திருக்கிறாய்
எப்படி முடிகிறது உன்னால்
பிள்ளைகளையும் உன்னையும்
பிறிதொருத்திக்காக பிரிந்தவனை
இன்னமும் நம்பி இல்லறம் தொடர.
.———————————————–
2
சுவா்களுக்குள் இருந்து முளைக்கும்
மாயக்கரம் பற்றி
அடா்வனம் புகுந்தபின் அழைக்கிறாய்
பசுமையின் அலையடிப்பில் வழிதெற்றி
திசைபோதமற்று
உன்பாதச்சுவடுகள் தேடி பயணம்
இலைகள்தேக்கிய குளுமையில்
அழைத்துச்செல்கிறது காடு
அவிழா புதிர்களின் கிளைகளுக்குள்
ஆட்டவிதிகள் ஏதுமற்ற விளையாட்டு
சொல்விழுந்து முளைத்த பெருவனம் நீ.
——————————————————
3.
காற்றில் வரைந்த ஓவியம்
நாம் பேணிய நட்பு
அன்றெல்லாம் என்னை இடைவிடாமல்
அதிரவைத்த உன் பேரழகு எங்கே
காலத்தோடு நீ கொண்ட சூதாட்டம்தானா
இன்றைய உன் கையறுநிலை
உன்பெயரோடு இன்னமும் கனத்துக்கிடக்கிறது
நீ கொண்டாடிய உன் கன்னிமை
கடல் கவா்ந்த நதி அல்லவா
நாம் இழந்த நம் பால்யம்.

Series Navigationஇளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி பவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்