கவிதைகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 12 in the series 4 அக்டோபர் 2020

புஷ்பால ஜெயக்குமார்

1

அவள் சிலையாய் இருந்தால் பொய்யாய் நிறுவுவதை

உடைக்கலாம் அறிவதன் பொருட்டு

தானாக அது தேர்ந்தெடுத்துகொள்கிறது

மறுப்பதற்கு வழியில்லாமல்

பிறகு ஒரு இடத்தில் ஒரு கொடி வளர்வதை போல் 

அதை பயத்தின் ஆசையோடு தோன்றும் அவளது வாசனை

மற்றும் அறிந்து அழிந்துபோன மினுங்கும் நினைவில்

விரையமான விருப்பம் உடலை பெரும் ரகசியமாக

அவளைபற்றி முன்பே எழுதிவைத்திருந்த மங்கலான

வரிகளை நான் படிக்கிறேன்

வெவ்வேரான அங்கங்கள் என் நரம்புகளின்

தெரிப்பில் காட்சிப்படுத்தப்பட்டன

திருடல் தான் கூடுதல் மதிப்பை தருகிறது

ஸ்பரிசம் என்பது இருவருக்கும் வேறுவேறு

பேரரசர்களும் வீரர்களும் உன்னால் அழிய

உன் நினவில் கரையும் போர் சூழலும்

நீ சிலையாய் நின்ற சதுக்கத்தின் பண்பாட்டு

படிக்கட்டில் வழியும் மழையின் நீரில்

மறையுது இச்சை  எனும் பறவையின் எச்சம்

—-புஷ்பால ஜெயக்குமார்

2

மெல்ல நான் திரும்பி பார்த்தேன்

எனக்கு அனுமதி அளித்த

நமக்கெல்லாம் தெரிந்த

கடந்த காலத்தை பற்றியும்

நிகழ் காலத்தில் தோன்றுவது

எல்லாம் புதிதாக நடமாடும்

பெயரிடப்படாத பெயரிடப்படவேண்டிய

ஒரு குறியீட்டு கதை சொல்லியின்

மனதை ஒத்த உருவகத்தை

நடமாட விட்டு

ஆளுக்கு ஒன்று என படிக்கப்பட்டாலும்

அது அப்படியே அதேபோல் இருந்தது

காலையில் விழிப்பவனும்

கவிதையின் முதல் வார்த்தையை எழுதுபவனும்

நீச்சல் குளத்தில் இறங்குபவனும் 

புத்தகத்தின் முதல் பக்கத்தை திறக்கும் வாசகனும்

எல்லோரும் ஒருவரே

ஒருவனுக்கு புதிதாக எதுவும் தெரியவில்லையெனில்

அவன் நினைவிலே சமாதி அடையும்

மழுங்கிய மனம் விடை தெரியாது அலைந்த

கதையை சொல்ல காத்திருக்க வேண்டும் அவன்

—-புஷ்பால ஜெயக்குமார்

Series Navigationவற்றும் கடல்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *