கவிதைகள்

Spread the love

உளி

 

அவர் பயன்படுத்திய

சூரல் நாற்காலி

அனாதையாய் கிடந்தது

அவர் மணி பார்த்த

கடிகாரம்

இன்றும் நிற்காமல்

சுழன்று கொண்டிருந்தது

பத்திரிகை தலையங்கங்களில்

பரபரப்புக்கு ஒன்றும்

பஞ்சமில்லை

காலையில் சூரியன்

உதிப்பதும்

மாலையில் மறைவதிலிருந்து

எந்த மாற்றமும்

ஏற்படவில்லை

ஆஷ்ட்ரேவில் சாம்பல்

அப்புறப்படுத்தப்படாமல்

அப்படியே இருக்கிறது

அவர் பயன்படுத்திய

அத்தனையையும் தீயிலிடுவது

இயலாத காரியமாயிருந்தது

எழுதுகோல்

எழுதித் தீர்க்க

காகிதத்தை எதிர்பார்த்திருந்தது

கவிதை தன்னையே

எழுதிக் கொள்ள

அவர் சிதையில்

தீயை மூட்டியது.

 

 

————-

 

புதிர்

 

விலாசத்தை தொலைத்த காற்று

வீட்டின் கதவைத் தட்டியது

சருகுகளில் எழுதப்பட்ட முகவரியை

மண் மூடியது

சிறகுகள் பறவைகளுக்கு

சுமையாகாது

பேய் மழை

இயல்பான வாழ்க்கையை

பாதித்தது

பரிதி வெளிப்படாத வானம்

துக்கம் நிகழ்ந்த வீடானது

யாரிடமோ சங்கதி சொல்ல

மேகங்கள் விரைகின்றன

பழுத்த இலைகள்

வசந்தத்துக்கு வழிவிட்டு

உதிர்ந்தன

மையிருட்டில் கொல்லை பொம்மை

வானம் பார்த்துக் கிடந்தது

கார்மேகம் கண்ட மயிலுக்கு

தோகை விரித்தலை சொல்லித் தரணுமா

கடவுள் தியானம் செய்யச் சொன்னாலும்

வாசலில் விட்ட காலணி மீதே

கவனம் இருக்கும்

நன்கொடை ரசீதை

பார்த்து தான்

சாமியே வரம் கொடுக்குது

விடை காண முடியாத

விடுகதையாகத் தான்

வாழ்க்கை இருக்குது.

———-

Series Navigationஇன்னொரு எலிஒரு தாதியின் கதை